புதுடில்லி, நவ.4- ரூ.17 ஆயிரம் கோடி முறைகேடு வழக்கில், அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.7,500 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
கடந்த 2017ஆம் ஆண்டு, பிரபல தொழில் அதிபரும், ரிலையன்ஸ் குழும தலைவருமான அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனமும், ரிலையன்ஸ் கமர்சியல் பைனான்சும் பொதுநிதி திரட்டின.
அதில், யெஸ் வங்கி 2 நிறுவனங்களிலும் சேர்த்து, ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்தது. நாளடைவில் இது வாராக்கடன் ஆனது.
இதுபோல், பொதுநிதியில் நிதி முறைகேடு, கடன்களை வேறு நிறுவனங்களுக்கு திருப்பி விடுதல் என்ற வகையில் ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் ரூ.17 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாக புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து சி.பி.அய். வழக்குப்பதிவு செய்ததன் அடிப்படையில், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. கடந்த ஜூலை மாதம், அனில் அம்பானி குழுமத்துக்கு சொந்தமான 50 நிறுவனங்களின் அலுவலகங்களிலும், குழும நிர்வாகிகள் உள்பட 25 பேர்களின் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
அதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்டு மாதம் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
அதன் அடிப்படையில், அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.7,500 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் 4 இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்தது.
டில்லியில் மகாராஜா ரஞ்சித் சிங் மார்க்கில் ரிலையன்ஸ் சென்டருக்கு சொந்தமான மனை, டில்லி, நொய்டா, காசியாபாத், மும்பை, புனே, தானே, அய்தராபாத், சென்னை, கிழக்கு கோதாவரி ஆகிய நகரங்களில் உள்ள சொத்துகள் ஆகியவை முடக்கப்பட்ட சொத்துகளில் அடங்கும்.
மும்பை பாலி ஹில் பகுதியில் உள்ள அனில் அம்பானி பங்களாவும் முடக்கப்பட்டது.
