புதுடில்லி, நவ.3- நாட்டில் இயங்கும், 50 சதவீத வாகனங்கள் உரிய காப்பீடு இன்றி இயங்குவதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், அபராதம் செலுத்தாத வாகனங்களை போல் இவற்றையும் பறிமுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியது.
தெலங்கானாவைச் சேர்ந்தவர் துங்கலா தனலட்சுமி. இவரது கணவர் கடந்த 1996இல் காரில் பயணித்த போது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தார். அந்த கார், நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டிருந்தது. விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு தெலங்கானா உயர் நீதிமன்றம், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து, காப்பீடு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு 30.10.2025 அன்று நீதிபதிகள் சஞ்சய் கரோல், பிரசாந்த் குமார் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இழப்பீடு கோரிய குடும்பத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஜாய் பாசு, “நாட்டில் இயங்கும் வாகனங்களில், 50 சதவீதத்திற்கு மேல் உரிய காப்பீடு இன்றி உள்ளன. ”காப்பீடு எடுத்தவர்களுக்கு நிறுவனங்கள் குழப்பமான விதிகளை காரணம் காட்டி இழப்பீட்டை நிராகரிக்கின்றன,” என்றார்.
நீதிபதிகள் கூறியதாவது: நாட்டில் இயங்கும், பாதிக்கும் மேற்பட்ட வாகனங்கள் காப்பீடு இல்லாமல் இருப்பது தீவிரமான பிரச்சினை. போக்குவரத்து விதிமீறலுக்கு விதிக்கப்படும் அபராதங்களை செலுத்தாதவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வது போல, காப்பீடு இல்லாத வாகனங்களையும் தற்காலிகமாக பறிமுதல் செய்யும் நடைமுறையை அரசு பரிசீலிக்கலாம். இதை உறுதி செய்ய, காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் ஒன்றிய அரசு இணைந்து புதிய கொள்கை மாற்றங்களை ஆய்வு செய்ய வேண்டும். அதே போல் வாகன காப்பீடு வகைகள் குறித்து, ஒவ்வொரு நிறுவனம் ஒவ்வொரு மாதிரியான வரையறைகளை கொண்டுள்ளன. இதனால், சந்தா செலுத்தியிருந்தும் இழப்பீடு பெற முடியாமல் மக்கள் நீண்ட காலம் வழக்குகளில் சிக்கி தவிக்கின்றனர். எனவே பொதுவான, புரிந்துகொள்ள எளிய வாகன காப்பீட்டு கொள் கையை உருவாக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
இந்த வழக்கு இரு வாரங்களுக்கு பின் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது என்று கூறியுள்ளார்.
