பாட்னா,நவ.2 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11-ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ‘மகாகத்பந்தன்’ கூட்டணி ஆகிய 2 கூட்டணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க., அய்க்கிய ஜனதா தளம், ஜன்சக்தி கட்சி(ராம்விலாஸ்) உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதே போல் ‘மகாகத்பந்தன்’ கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சியினர் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி பெகுசராய் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
வாக்குத் திருட்டில் ஈடுபடுகிறார்கள்
“பொதுமக்கள் விழிப்புணர்வு பெறும்போது, அரண்மனைகளில் வசிக்கும் அரசியல்வாதிகள் தங்கள் பிம்பத்தை காப்பற்றிக் கொள்வதில் கவனம் செலுத்துகிறார்கள். அதனால்தான் அவர்கள் வாக்கு திருட்டில் ஈடுபடுகிறார்கள். பீகாரில் ஊழல் நிலவுகிறது, இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். பீகாரில் நீங்கள் காணும் அனைத்து தொழிற்சாலைகளும் காங் கிரஸ் கட்சியின் முயற்சிகளால் உருவானவை. அய்.அய்.டி. மற்றும் எய்ம்ஸ் போன்ற நிறுவனங்கள் ஜவஹர் லால் நேருவால் கட்டப்பட்டன.
சிறுபான்மையினரின் சுரண் டலை முடிவுக்குக் கொண்டுவர சமூகத்தில் சமத்துவம் வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பீகாரில் பெண்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் தேர்தலுக்கு முன்பு ரூ.10 ஆயிரம் விநியோகித்தனர். அவர்களின் நோக்கங்கள் நல்லதல்ல. புத்திசாலித்தனமாக வாக்களியுங்கள், இது உங்கள் உரிமை மற்றும் சுயமரி யாதை சம்பந்தப்பட்ட விசயம்.
இந்த உங்கள் நிலம், இது மிகவும் அழகான நிலம். இங்கு கங்கை நதி ஓடுகிறது, இது ஒரு புனிதமான நிலம். இந்த நிலத்தில் இருந்தே காந்தியார் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தனது இயக்கத்தைத் தொடங்கினார். இந்த நிலம் நாட்டிற்காக சிறந்த அதி காரிகள், தலைவர்கள், தேசபக்தர்கள், கவிஞர்களை கொடுத்துள்ளது. ஆனால் இங்கு வளர்ச்சி சரியாக நடக்கவில்லை.
நிகழ் காலத்தைப்பற்றி பேசுவதே இல்லை
பா.ஜ.க. தலைவர்கள், முதலமைச்சர்கள், உள்துறை அமைச்சர், பிரதமர் உள்ளிட்டோர் நேருவைப் பற்றியும், கடந்த காலத்தைப் பற்றியும் பேசுகிறார்கள், அல்லது எதிர்காலத்தைப் பற்றி பேசுகிறார்கள். அவர்கள் நிகழ்காலத்தைப் பற்றி பேசுவதே இல்லை. இந்த பணவீக்கத்தில் நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்று அவர்கள் உங்களிடம் கேட்கிறார்களா? பீகாரில் வேலைவாய்ப்புகள் இல்லை. பீகார் மக்கள் நாடு முழுவதும் இடம்பெயர வேண்டிய சூழல் இருக்கிறது. கேரளாவில் இருந்து காஷ்மீர் வரை மக்கள் பீகார் மக்கள் செல்வதை நான் பார்த்திருக்கிறேன். காஷ்மீரில் சாலை அமைக்கும் தொழிலாளியிடம் அவர் எங்கிருந்து வருகிறார் என்று கேட்டால், அவர், ‘நான் பீகாரிலிருந்து வந்திருக்கிறேன்’ என்று கூறுவார்.
பா.ஜ.க. அரசு மக்களை பலவீனப்படுத்தி உள்ளது. மதங்களுக்கு இடையே பகை, ஜாதிகளுக்கு இடையே பகை ஏற்படும் வகையில் பிரிவினை பேசும் அரசியலை அவர்கள் பின்பற்றுகிறார்கள். நாடு முழுவதும் ஒரு தவறான தேசியவாதம் கட்டமைக்கப்படுகிறது. உங்களை திசைதிருப்ப, அவர்கள் ஏதாவது ஒரு பிரச்சினையை எழுப்புகிறார்கள். அவர்கள் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொண்டார்கள். அதன் விளைவாக 65 லட்சம் வாக்குகள் குறைக்கப்பட்டன. உங்கள் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. நீங்கள் பெறும் அனைத்து அரசுத் திட்டங்களும் சலுகைகளும் பலவீனப்படுத்தப்படுகின்றன.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
