புதுச்சேரி, நவ.1– அரசு விழாவில் பங்கேற்ற ஆளுநர், முதலமைச்சருக்கு சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் பொதுநல அமைப்புகள் கருப்பு கொடி காட்டியதால் பரபரப்பு நிலவியது.
போக்குவரத்து துறை சார்பில் மின்சார பேருந்துகள், தனியார் நிறுவனம் பங்களிப்புடன் இயக்குவதற்கு, சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையிலான பொது நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, விழாவில் ஆர்ப்பாட்டம் நடத்த நேற்று (31.10.2025) காலை 9 மணி முதல் மறைமலை அடிகள் சாலை, கண் டாக்டர் தோட்டம் மற்றும் அண்ணா சாலையில் திரண்டிருந்தனர். விழா மேடைக்கு வந்த முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி மற்றும் அதிகாரிகள், ஆளுநரை வரவேற்க தாவரவியல் பூங்கா எதிரே காத்திருந்தனர். அப்போது வெங்கடசுப்பா (ரெட்டியார்) சதுக்கம் அருகே ஆளுநரின் கார் வந்ததும், அங்கு நின்றிருந்த சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையிலான பொதுநல அமைப்பினர் கருப்பு கொடியுடன் விழா நடைபெற்ற இடத்திற்கு கூடி, ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு கருப்பு கொடியை காட்டியதால் பரபரப்பு நிலவியது. உடன் காவல்துறையினர், ஆளுநர், முதலமைச்சர் விழா மேடைக்கு அனுப்பிவிட்டு, போராட்டக்காரர்களை தடுப்பதற்காக நுழைவு வாயிலை மூடினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.
சரமாரியாக கேள்வி: இதனிடையே சட்டமன்ற உறுப்பினர் நேரு விழா மேடை ஏறி ஆளுநர் மற்றும் முதலமைச்சரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். மின்சார பேருந்துகளை இயக்க ஸ்மார்ட் சிட்டி ரூ.23 கோடி கொடுத்துள்ளது. பிறகு ஏன், பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி தரப்பட்டது. பி.ஆர்.டி.சி., நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கலாமே. தனியார் மயத்தை எப்படி அரசு ஆதரிக்கலாம். ஒரு கி,மீ.,க்கு ரூ.30க்கு பதில், ரூ.65 வழங்குவது ஏன் என சரமாரியாக கேள்வி எழுப்பினார். பின்னர் விழாவை புறக்கணித்துவிட்டு பொதுநல அமைப்புகளுடன் வெளியேறினார். பிறகு சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் பொது நல அமைப்பினர் மறைமலை அடிகள் சாலையில் ஊர்வலமாக சென்று, வெங்கடசுப்பா (ரெட்டியார்) சிலை அருகே கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக் கொடியுடன் முழக்கமிட்டுவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அரசு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.
