சென்னை, அக்.29- சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்புகள் கட்ட பிரிகேட் நிறுவனத் திற்கு அனுமதி என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித் துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை பள்ளிக்கரணை காப்புக்காடு ராம்சர் தலத்துக்குள், ஓர் அடுக்கு மாடி கட்டடத் திட்டத்திற்கு, சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் திட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து கீழ்க்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
சதுப்பு நிலம்: 1971ஆம் ஆண்டு ஈரநிலங்கள் தொடர்பான மாநாட்டின் கீழ் நிறுவப்பட்ட ராம்சர் தல, சட்ட செயல்முறையின்படி, 2017-ஆம் ஆண்டு ஈரநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகளின் கீழ் (i) சதுப்பு நிலம் /காப்பு காடு, (ii) ராம்சர் தலம் மற்றும் (iii) ஈரநிலம் ஆகியவை மூன்று தனித்தனி மற்றும் வேறுபட்ட வகைப்பாடுகள் “சதுப்பு நிலம்” என்று அறிவிக்கப்படும். தமிழ்நாடு வனச்சட்டம், 1882-இன் கீழ் பள்ளிக்கரணை பகுதியில், சுமார் 698 ஹெக்டேர் பரப்பளவு, பள்ளிக்கரணை சதுப்பு நிலக் காப்புக் காடாக 2007-ஆம் அறிவிக்கப்பட்டது. இந்த இடத்தில எவ்விதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. இது வனத்துறைக்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். ராம்சர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள 1248 ஹெக்டேர் பரப்பளவில், பள்ளிக்கரணை சதுப்பு நில காப்புக்காட்டில் உள்ள 698 ஹெக்டேர் நிலமும், உரிய நடைமுறைகளுக்குப் பின்பு வரையறுக்கப்படவுள்ள 550 ஹெக்டேர் கூடுதல் நிலமும் அடங்கும். ஈர நில விதிகளின்படி பள்ளிக்கரணை சதுப்பு நில காப்புக்காடுகளுக்கு வெளியில் உள்ள நிலப்பகுதிகளை சர்வே எண்களுடன் கண்டறிந்து வரையறுப்பதற்கான நில உண்மை கண்டறிதல் (Ground Truthing) இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
ஆதாரமற்றவை: ஊடகங்களில் குறிப்பிடப்படும் கட்டுமானம் குறித்த நிலத்தின் புல எண்கள் வருவாய்த்துறை ஆவணங்களின்படி இத்தகைய தனியார் பட்டா நிலங்கள் ஆகும். இப்பணிகளை, ஒன்றிய அரசாங்க நிறுவனமான, தேசிய நிலையான கடற்கரை மேலாண்மை மய்யம் (NCSCM) தேர்வு செய்யப்பட்டு, குறிப்பிட்ட சர்வே எண்களுடன் எல்லைகளை வரையறுக்கும் பணி நவம்பர் 2024இல் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, தேசிய நிலையான கடற்கரை மேலாண்மை மய்யம் (NCSCM), பள்ளிக்கரணை காப்புக்காடு ராம்சர் தலத்திற்கான ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை (IMP) தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இம்மேலாண்மைத் திட்டமானது, சர்வே எண்களின் அடிப்படையில் எல்லைகளை வரையறுத்தல், டிஜிட்டல் வரைபடத்தில் நிலப் பயன்பாடு, ஈரநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள், 2017 இன் விதி 7 மற்றும் ஈரநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள், 2017, அத்தியாயம் XIII, பத்தி 62 இன் கீழ் அனுமதிக்கப்பட வேண்டிய அல்லது ஒழுங்குபடுத்தப்பட வேண்டிய செயல்பாடுகளின் பட்டியலை தயாரித்தல் (அனைத்து சம்பந்தப்பட்ட நபர்கள் பங்கேற்புடன்) உள்ளடக்கியது. எனவே, ஈரநில விதிகளின்படி பள்ளிக்கரணை ஈரநில அறிவிப்பு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சர்வே எண்கள் பட்டா நிலங்கள் என்பதால், செய்தித்தாள் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ராம்சர் தல எல்லை வரையறையானது, குறிப்பிட்ட சர்வே எண்களுடன் ஒப்பிட்டு பரப்பளவை வரையறுப்பது, நில உண்மைகண்டறிதல்” சோதனை மற்றும் அறிவிப்பு ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும்.
ராம்சர் தலம் அமையும் நிலங்கள் இன்னும் புல எண்களுடன் குறிப்பிடப்பட்டு வரையறுக்கப்படாததால், தற்போதைய பள்ளிக்கரணை சதுப்பு நில காப்புக்காட்டு எல்லைகளுக்கு வெளியே உள்ள தனியார் பட்டா நிலங்களுக்கு மட்டுமே சம்பந்தப்பட்ட அலுவலர்களால் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
