ஆந்திராவில் காக்கிநாடா அருகே கரையை கடந்தது ‘மோந்தா’ புயல் 2 பெண்கள் உயிரிழப்பு

3 Min Read

காக்கிநாடா, அக்.29 வங்கக் கடலில் உருவான மோந்தா புயல் நேற்று இரவு ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடந்தது. முன்னதாக புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக உயர்நிலைக் குழுவினருடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார்.

‘மோந்தா’ புயல்

‘மோந்தா’ புயல் ஆந்திராவில் நேற்று (28.10.2025) இரவு காக்கிநாடா – மசூலிப்பட்டினம் இடையே அந்தர்வேதிபாளையம் என்னும் இடத்தில் கரையைக் கடந்தது. கரையை புயல் கடந்தபோது மணிக்கு 110 கிலோமீ்ட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் காக்கிநாடா, மசூலிப்பட்டினம், கோன சீமா மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ‘மோந்தா’ புயல் ஏற்படுத்தி உள்ளது. புயலுக்கு ஏராளமான மரங்கள் சாய்ந்தன. 2 பெண்கள் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்தன. 107 ரயில்கள், 18 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பல நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசம் அடைந்துள்ளன. போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.1,204-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, வங்கக் கடலில் மய்யம் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நேற்று (28.10.2025)காலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மோந்தா’ என பெயரிடப்பட்டது. இப்புயல் நேற்று மதியம் காக்கிநாடாவுக்கு 190 கி.மீ தொலைவில் மய்யம் கொண்டிருந்தது. 15 கி.மீ. வேகத்தில் காக்கிநாடாவை நோக்கி மெல்ல நகர்ந்த மோந்தா புயல்நேற்று மாலை மேலும் வேகமாக காக்கிநாடா – மசூலிப்பட்டினம் இடையே உள்ள நிலப்பரப்பை நோக்கி பயணித்தது. அப்போது காற்றின் வேகமும் அதிகரித்தது.

கரையைக் கடந்தது

இரவு 8.40 மணியளவில் காக்கிநாடா அருகே அந்தர்வேதிப்பாளையம் என்னும் இடத்தில் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. சுமார் 8.40 மணிக்கு கரையைக் கடக்கத் தொடங்கிய புயல், கரையை முழுமையாக கடந்து முடிக்க நள்ளிரவு 1.30 மணி வரை எடுத்துக் கொண்டது. சுமார் 4 முதல் 5 மணி நேரம் வரைபுயல் கரையைக் கடக்க எடுத்துக்கொண்டது. அப்போது 100 முதல்110 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. சிறீகாகுளம் மாவட்டம் முதற்கொண்டு காக்கிநாடா, மசூலிப்பட்டினம், பிரகாசம், விசாகப்பட்டினம், நெல்லூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

புயல், மழை, வெள்ளம் காரணமாக நேற்று மதியமே கடலோர மாவட்டங்கள் இருட்ட தொடங்கின. பல கிராமங்களில் மின் தடை செய்யப்பட்டது. இணையமும் துண்டிக்கப்பட்டது. புயலின் தாக்கம் ஒடிசா, தெலங்கானா மாநிலங்களிலும் எதிரொலித்தது. புயல் காரணமாக கடலோர பகுதிகளில் ராட்சத அலைகள் எழுந்து மக்களை அச்சுறுத்தின. 16 மாவட்டங்களில் உள்ள 233 மண்டலங்கள், 1,419 கிராமங்கள், 44 நகராட்சிகளில் மோந்தா புயலின் தாக்கம் இருந்தது. பலத்த காற்றுக்கு காக்கிநாடா, மசூலிப்பட்டினத்தில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

107 ரயில்கள் ரத்து

சாலைகள் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டன. பெரும்பாலான சாலைகள் மழை வெள்ளத்தின் காரணமாக அரித்துச் செல்லப்பட்டன விசாகப்பட்டினம், காக்கிநாடா, மசூலிப்பட்டினம், நெல்லூர் ஆகிய இடங்களில் கடல் நீர், சுமார் 200 முதல் 500 அடி வரை முன்னோக்கி வந்தது. மீனவர்களின் மீன்பிடி படகுகள் சில அடித்து செல்லப்பட்டன. மரம் பெயர்ந்து விழுந்ததில் கோனசீமா மாவட்டத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த மாவட்டத்தில் 50-க்கும் மேற்பபட்ட கால்நடைகள் உயிரிழந்தன. கனமழை காரணமாக ஏரி, குளம், குட்டைகள் என நீர்நிலைகள் நிரம்பின. புயலின் தாக்கத்தை தொடர்ந்து காக்கிநாடா மற்றும் மசூலிப்பட்டினத்தில் சுமார் 5 மணி நேரம் வரை சூறாவளி காற்றின் தாண்டவம் அரங்கேறியது. இதனால் இந்த இரு ஊர்களும் அடையாளம் தெரியாத வண்ணம் மோசமான பாதிப்புகளைச் சந்தித்தன.மழை, புயல் காரணமாக தென் மத்திய ரயில்வே துறை 107 ரயில்களை ரத்து செய்தது. ஆந்திராவுக்கு வரும் 18 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

மீட்புப் பணிகளை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில், துணை முதலமைச்சர் பவன் கல்யாண், அமைச்சர்கள் லோகேஷ், அனிதா மற்றும் உயர் அதிகாரிகள் உடனுக்குடன் முடுக்கி விட்டனர். அந்தந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவிகளை செய்தனர். தெலங்கானா, ஒடிசா மாநிலங்களிலும் மோந்தா புயலின் பாதிப்பு இருந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *