தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
தனியார் பல்கலைக்கழகச் சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டதை வரவேற்கிறோம்! மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதே ஜனநாயகப் பண்பு என்றும், தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசுக்கு நன்றி, பாராட்டு தெரிவித்தும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது!
தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின் போது கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா நேற்று (26.10.2025) திரும்பப் பெறப்படுவதாகத் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்கள் அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கதாகும்.
2019 ஆம் ஆண்டு அப்போதைய அ.தி.மு.க. அரசால் கொண்டுவரப்பட்ட தனியார் பல்கலைக் கழகச் சட்டத்தில் சில திருத்தங்களை அண்மையில் மேற்கொண்டு, திருத்தச் சட்ட மசோதாவைத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். அதில் சமூகநீதிக்கும், கல்வி உரிமைக்கும் ஆபத்தை விளைவிக்கும் சில அம்சங்கள் இருப்பதாகப் பொதுத் தளங்களிலும், ஆசிரியர் – மாணவர்கள் மத்தியிலும் கவலை எழுப்பப்பட்டது.
இது குறித்து, ‘உண்மை’ இதழில் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும்போது, “வாதாட வேண்டியவற்றுக்கு வாதாடுவது – எடுத்துரைப்பது மூலமும், போராட வேண்டிவதற்குப் போராடுவதற்கும் பக்குவப்பட்ட இயக்கம் நம்முடைய இயக்கம். எல்லா அம்சங்களையும் சீர்தூக்கிச் சிந்தனை செய்யவேண்டும். அரசே முழுமையாக கல்வி நிலையங்களை நடத்த வேண்டும் என்பது நம்முடைய இலக்கு என்றாலும், அந்த அளவுக்கு நிதி, நிர்வாக வசதிகள் முதலியவை இப்போது இல்லை என்றாலும், தவறுகளைச் சுட்டிக் காட்டித் திருத்தம் கோரலாம்” என்று குறிப்பிட்டிருந்தோம்.
நம்மைப் போன்றவர்களின்
கவலை!
அரசே முழுமையாக கல்வித் துறையை நடத்தும்வரை, எல்லோருக்கும் கல்வி – கிட்டாக் கனியாக ஆகிவிடக் கூடாது என்பதால் தான், பொருளாதார வாய்ப்புள்ளவர்கள் தனியார் கல்வி நிலையங்களில் படிக்கும் வாய்ப்பை உருவாக்கும் வகையில் தனியார் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அவை கல்வி வளர்ச்சி என்னும் அளவில் பலன்களைத் தந்துள்ளதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். எனினும், அதற்கு சமூகநீதியை விலையாகக் கொடுக்க முடியாது; அது கல்வி வணிகத்திற்கும் வழிவகுத்துவிடக் கூடாது என்பதே நம்மைப் போன்றவர்களின் கவலையாகும்.
தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசுக்கு
நன்றி, பாராட்டு!
நமது நியாயமான கவலைகளைப் புரிந்துகொள்வது தான் ஒரு மக்களாட்சியின் அடிப்படை. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டாலும், மக்கள் மன்றத்தில் எழுந்துள்ள குரல்களைக் கருத்தில் கொண்டு. அச் சட்ட மசோதாவைத் திரும்பப் பெற்று மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்று அறிவித்திருப்பது தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசின், அதன் முதலமைச்சரின் பக்குவத்தையும், ஜனநாயகப் பண்பையும் எடுத்துக் காட்டுகிறது. அதற்கு நமது நன்றியையும், பாராட்டு களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கல்வியை எல்லோருக்கும் கொண்டு செல்வ தற்கான முயற்சிகளையும், அதில் சமூகநீதி நிலைநாட்டப்படு வதையும் விழிப்புடன் முன்னெடுப்போம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
27.10.2025
