திருவோணம், அக்.25 தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே காட்டாத்தி உஞ்சியவிடுதி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேனாள் முதன்மை செயலாளர் உஞ்சைஅரசன் 2-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று (24.10.2025) காலை நடந்தது.
நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு உஞ்சை அரசன் நினைவிடத்தில் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அவர் பேசுகையில்,
தமிழ்நாட்டில் அடுத்த முதலமைச்சர் நான் தான் என பல பேர் போட்டி போடுகிறார்கள். அந்த இடத்திலும் நாம் இல்லை, ஆனாலும் நம்மை ஏன் அவர்கள் விமர்சிக்கிறார்கள் என்றால், நாம் கருத்து களத்திலே தெளிவாகவும், துடிப்பாகவும் இருக்கிறோம், கண்ணில் விழுந்த தூசியாக இருக்கிறோம். விடுதலை சிறுத்தைகள் என்கிற துரும்பு கண்ணில் விழுந்து விட்டது. கண்ணை கசக்கி கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு இது ஒரு நெரூடலாக இருக்கிறது.
12 ஆண்டுகள் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருப்பதற்கு ஆர்.எஸ்.எஸ். மட்டும் தான் காரணம். குடியரசு தலைவராக யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை பா.ஜ.க. தீர்மானிப்பதல்ல, ஆர்.எஸ்.எஸ். தான் தீர்மானிக்கிறது. இதனை யாராலும் மறுக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ். தான் பா.ஜ.க. அந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மதவாத அமைப்பாக இருப்பதை தாண்டி சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
