கண்ணூர், அக்.22 பாஜகவுக்கு கிடைக்கும் வாக்குகள் கேரளாவின் பிம்பத்தை அழித்து விடும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்ணூர் மாவட்டக்குழு அலுவலகத்திற்காக புதிதாக கட்டப்பட்ட அழிக்கோடான் நினைவு கட்டடத்தைத் திறந்து வைத்து அவர் மேலும் பேசுகையில், “கேரளா பொதுவாக அனை வரும் சகோதரத்துவத்துடன் வாழும் ஒரு மாநிலம். மறுமலர்ச்சி இயக்கங்களின் முறையான தொடர்ச்சி இருந்ததால், இது சாத்தியமானது. அதனால்தான் கேரளா மற்ற மாநிலங்களைப் போலல்லாமல் ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது. சங் பரிவார் இதைச் சீர்குலைக்கும் வகையில் அதன் செயல்திட்டத்தை அமைத்துள்ளது.
ஓணத்திற்குப் பின்னால் உள்ள புரா ணத்தைக் கூட சங் பரிவார் மாற்றுகிறது. மாவலிக்குப் பதிலாக வாமனரை வணங்கு கிறார்கள். சபரிமலையில் புராணத்துடன் தொடர்பில்லாத ஒன்றை அறிமுகப்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றனர். சங் பரிவார் வெறுப்பைப் பரப்பப் பொய்களை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. அவர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு இன்று கேரளாவில் நிலவும் சகோதரத்துவத்தையும், அமைதியையும் அழித்துவிடும்.
வாவர் ஒரு பயங்கரவாதி என்ற கருத்தை அவர்கள் புனைந்து பரப்பினர். பாஜகவுக்கு வரவேற்பு கிடைத்தால், இன்று நாம் காணும் அய்யப்பன் கூட மறைந்துவிடும் என்பதை இது நிரூபிக்கிறது. பாஜக தங்கள் செயல் திட்டத்தைத் தெளிவாக அறிவித்துள்ள சூழ்நிலையில், சமூகம் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சிபிஎம் எப்போதும் சங் பரிவாரங்களுக்கு வெளிப்படையாக தனது எதிர்ப்பைக் காட்டியுள்ளது” என்று அவர் உரையாற்றினார்.
