புதுடில்லி, அக்.22 ஊழலுக்கு எதி ரான கண்காணிப்பு அமைப்பான லோக்பால், தனது தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்காக தலா சுமார் ரூ.70 லட்சம் மதிப்புள்ள ஏழு பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 330 Li கார்களை வாங்குவதற்கு டெண்டர் கோரியிருப்பது கடும் விமர்ச னங்களை எழுப்பியுள்ளது.
மொத்தம் ரூ.5 கோடி மதிப்பிலான இந்தக் கார்கள் கொள்முதல் குறித்து சமூக ஊடகங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் விவாதம் எழுந்துள்ளது. நாட்டில் உள்ள முக்கிய அரசுப் பதவி களுக்கு சமமான கொள்முதல் விதி முறைகளின்படியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லோக்பால் தரப்பு விளக்கமளிப்பதாக செய்திகள் கூறுகின்றன. மேலும், இந்த வாகனங்கள் ஆரம்பத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வரும் பழைய வாகனங்களுக்குப் பதிலாக வாங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனினும், காலிப் பணியிடங்கள் காரணமாக லோக்பால் அமைப்பு பல ஆண்டுகளாகச் செயலற்று இருந்தது என்றும், தற்போது ஆடம்பர கார்களை வாங்குவதன் மூலம், ஊழல் எதிர்ப்பு அமைப்பின் உறுப்பினர்கள் தங்கள் வசதி களை மட்டுமே கருத்தில் கொள்கின்றனர் என்றும் பரவலாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
‘‘மோடி அரசாங்கத்தால் லோக்பால் அமைப்பு புழுதி மேடாக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக காலியாக வைக்கப் பட்டிருந்த நிலையில், இப்போது ஊழ லைக் கண்டுகொள்ளாத, ஆடம்பர வாழ்க்கையில் மகிழ்ச்சியடையும் பணி யாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்போது அவர்கள் தங்களுக்காக ரூ.70 லட்சத்தில் பிஎம்டபிள்யூ கார்களை வாங்குகிறார்கள்!’’ என்று விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
ஊழலைக் கண்காணிக்க வேண்டிய உச்சபட்ச அமைப்பே, இவ்வளவு பெரிய தொகையை ஆடம்பர கார்களுக்காகச் செலவிடுவது, அதன் பொறுப்பு மற்றும் எளிமை குறித்த கேள்விகளை எழுப்பி யுள்ளது.
