பெங்களூரு, அக்.22 கருநாடக மாநில அரசு ஊழியர்கள் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநில அய்.டி. (தகவல் தொழில்நுட்பத் துறை) அமைச்சர் பிரியங்க் கார்கே திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி
மாநில அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். நிகழ்வுகளில் பங்கேற்பது விதிகளை மீறுவதாகும் என்று கூறியுள்ள அவர், அவ்வாறு பங்கேற்கும் ஊழியர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் விதிகள் பொருந்தாது!
ஒன்றிய அரசுப் பணியாளர்களுக் கான விதிகள் மாநில அரசு ஊழியர்களுக்குப் பொருந்தாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மாநில அரசின் கட்டுப் பாட்டில் உள்ள ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளின் செயல்பாடுகளில் பங்கேற்க அனுமதி இல்லை என்பதை அமைச்சர் பிரியங்க் கார்கே மீண்டும் வலி யுறுத்தியுள்ளார்.
அதிகாரி பணியிடை நீக்கம்
அண்மையில் ஆர்.எஸ்.எஸ். பேரணியில் பங்கேற்ற உள்ளாட்சித் துறை அதிகாரி ஒருவரைக் கருநாடக அரசு பணியிடை நீக்கம் செய்த விவகாரம் மாநிலத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், அமைச்சர் கார்கேவின் இந்த எச் சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. மாநில அரசு ஊழியர்கள் அரசு விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும், அரசியல் அல்லது சமுதாய அமைப்புகளின் செயல்பாடுகளில் நடுநிலைமை காக்க வேண்டும் என்றும் அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
