பா.ஜ.க. பெண் எம்.பி., மேதா குல்கர்னி பேச்சுக்கு கண்டனங்கள் குவிகின்றன!
புனே, அக்.22 சனிவார்வாடா கோட்டைக்கு அருகே உள்ள தர்கா, மசூதிகளை இடித்து தள்ள வேண்டுமாம் என்று மாநிலங்களவை பாஜக பெண் உறுப்பினர் மேதா குல்கர்னியின் வெறுப்புப் பேச்சுக்கு காங்கிரஸ் உள்பட பா.ஜ.க. கூட்டணி கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மகாராட்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதலமைச்சர்களாக ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா), அஜித் பவார் (தேசியவாத காங்கி ரஸ்) உள்ளனர்.
இந்நிலையில், மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்தின் மய்யப் பகுதியில் உள்ள சனிவார்வாடா (Shaniwarwada) கோட்டையில் முஸ்லிம் பெண்கள் தொழுகை (நமாஸ்) செய்த காட்சிப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைலானது.
முஸ்லிம்கள் தொழுகை செய்வதை அனுமதிக்க மாட்டார்களாம்!
இந்தக் காட்சிப் பதிவை தனது டுவிட்டர் ‘எக்ஸ்’ பக்கத்தில் பகிர்ந்த பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மேதா குல்கர்னி,‘‘சனிவார்வாடா கோட்டையில் முஸ்லிம் பெண்கள் தொழுகை செய்த காட்சிப் பதிவைக் கண்டேன். சனிவார்வாடா “ஹிந்தவி சுவராஜ்யத்தின் (இந்துக்களின் சொந்த ஆட்சி)” சின்னம் ஆகும். அதனால் முஸ்லிம்கள் அங்கு தொழுகை செய்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இது ஒன்றும் மசூதி அல்ல. சனிவார்வாடா பகுதிக்கு அருகே உள்ள தர்கா, மசூதிகளை அகற்ற வேண்டும்” என வெறுப்புப் பேச்சைக் கக்கினார்.
‘மாட்டுக் கோமியத்தை’த் தெளித்தார்
தொடர்ந்து கடந்த 19.10.2025 அன்று சனிவார்வாடா கோட்டையில் தீவிர வலதுசாரி இந்துத்துவா அமைப்பான பதிட் பவன் சங்காதனா மற்றும் பிற இந்துத்துவா அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார்.
இந்தப் போராட்டத்தின் போது முஸ்லிம் பெண்களின் தொழுகையால் சனி வார்வாடா கோட்டையில் தீட்டு ஏற்பட்டுள்ளதாகக் கூறி அங்கு ‘மாட்டுக் கோமியத்தை’த் தெளித்தார்.
மேதா குல்கர்னியின் வெறுப்புப் பேச்சு மற்றும் சனிவார்வாடா கோட்டையில் மாட்டுக் கோமியம் தெளிப்புக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு
உச்சநீதிமன்ற எச்சரிக்கையையடுத்து மகாராட்டிராவில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்காக மகாராட்டிராவில் பாஜக வன்முறையைத் தூண்ட திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் சச்சின் சாவந்த் கூறுகையில்,
‘‘சனிவார்வாடா கோட் டைக்குப் பல்வேறு வர லாறு உள்ளது. ஆனால், மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மேதா குல்கர்னி சனிவார்வாடாவிற்கு வெளியே உள்ள தர்காவை இடித்துத் தள்ளுமாறு கூறுகிறார். கோட்டைக்கு அருகே தர்கா இருப்பது பேஷ்வாக்களுக்கு (சனிவார்வாடா கோட்டைக்கு உரிமையானவர்கள்) எந்த பிரச்சி னையும் இல்லாத போது, மேதா குல்கர்னிக்கு என்ன பிரச்சினை? உள்ளாட்சித் தேர்தலுக்காக மகாராட்டிராவில் வன்முறையைத் தூண்டும் திட்டம் இது” என கண்டனம் தெரிவித்தார்.
மேதா குல்கர்னியின் வெறுப்புப் பேச்சு மற்றும் செயலுக்கு பாஜகவின் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) பிரிவும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பா.ஜ.க. கூட்டணி கட்சியும் எதிர்ப்பு!
இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரூபாலி பாட்டீல் தோம்ப்ரே கூறுகையில்,
‘‘புனே பகுதியில் இந்து-முஸ்லிம் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால், மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மேதா குல்கர்னி மதப் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார். பாஜக அவரைக் கட்டுப்படுத்த வேண்டும். வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்த முயற்சித்ததற்காக உடனடியாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.
