காசா, அக்.21 இஸ்ரேல்- காசா இடையே போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முக்கிய காரணமாக இருந்தார். அவர் இஸ்ரேல்- காசா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக எகிப்து வந்தார்.
அதற்கு முன்னதாக இஸ்ரேல் நாட்டிற்கு சென்று, அங்குள்ள நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது “ஈரானுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த முடிந்தால், அது நன்றாக இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஈரானின் தலைவர் அயோதுல்லா அலி காமேனி, அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பின் விருப்பத்தை நிராகரித்துள்ளார். மேலும் ஈரானில் உள்ள அணு ஆயுதத் திறனை அமெரிக்கா அழிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான்- அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் அணு ஆயுதத் திட்டம் குறித்த மறைமுக பேச்சுவார்த்தை அய்ந்து சுற்றுகளாக நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. அந்த 12 நாள் விமானத் தாக்குதலால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில்தான் அமெரிக்கா அதிபர் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதை காமேனி நிராகரித்துள்ளார்.
“டொனால்டு டிரம்ப் தன்னை ‘ஓர் ஒப்பந்தம் செய்பவர்’ என சொல்கிறார். ஆனால் ஒரு ஒப்பந்தம் வற்புறுத்தலுடன் சேர்ந்து அதன் விளைவு முன்னரே தீர்மானிக்கப்பட்டால், அது ஒரு ஒப்பந்தம் அல்ல, மாறாக ஒரு திணிப்பு மற்றும் மிரட்டல். ஈரான் மீது குண்டுகள் வீசி அணு ஆயுதத் தொழிற்சாலையை அழித்ததாக பெருமை கொள்கிறார். நன்று. அவர் கனவு காணட்டும்” காமேனி எனத் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் போலிகள் மகாராட்டிரத்தில் நவ.1-இல் எதிர்க்கட்சிகள் பேரணி
மும்பை, அக்.21 மகாராஷ்டிர வாக்காளர்பட்டியலில் இருந்து சுமார் 1 கோடி போலி வாக்காளர்களை நீக்க வலியுறுத்தி, நவ.1-ஆம் தேதி எதிர்க்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி நடத்தவுள்ளதாக சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சியின் நாடாளுமன்ற உறுப்ினர் சஞ்சய் ராவுத் தெரிவித்தார்.
மகாராட்டிர தலைநகர் மும்பையில் சஞ்சய் ராளத், மகாராட்டிர நவநிர்மாண் சேனை கட்சியைச் சோ்ந்த பாலா நந்த்கான்கர், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியைச் சோ்ந்த ஜயந்த் பாட்டீல், காங்கிரசைச் சோ்ந்த சச்சின் சாவந்த் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளா்களை நேற்று முன்தினம் (19.10.2025) சந்தித்தனா்.
அப்போது சஞ்சய் ராளத் கூறுகையில், ‘மகாராட்டிர வாக்காளா் பட்டியல் பிழையின்றி இருக்க வேண்டும் என அனைத்து முக்கிய கட்சிகளும் குரல் எழுப்பி வருகின்றன. வாக்காளா் பட்டியலில் போலி வாக்காளர்கள், குளறுபடிகள் இருப்பது குறித்து ஆளும் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் மண்டா மாத்ரே (பாஜக), சஞ்சய் கெய்க்வாட் (சிவசேனை) ஆகியோரும் பேசியுள்ளனர்.
ஆனால் வாக்காளா் பட்டியலில் பிழையுள்ளது என்பதை தோ்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. இதன் காரணமாக வீதிகளில் இறங்கி தோ்தல் ஆணை யத்துக்கு அதிர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது. எனவே தோ்தல் ஆணையத்தின் கறைபடிந்த நடவடிக்கைக்கு எதிராக மும்பையில் நவ.1-ஆம் தேதி எதிர்க்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி மேற்கொள்ளும். தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சித் தலைவா் சரத் பவார், சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனைத் தலைவா் ராஜ் தாக்கரே ஆகியோர் தலைமையில் பேரணி நடைபெறும். தங்கள் வாக்குரிமையை இழந்த லட்சக்கணக்கான மக்கள், அன்றைய தினம் வீதிகளில் திரண்டு பலத்தை வெளிப்படுத்துவா்’ என்றார்.
முன்னதாக மகாராட்டிர வாக்காளர் பட்டியலில் 96 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதாக ராஜ் தாக்கரே குற்றஞ்சாட்டினார்.
சென்னையில் வில்லங்கச் சான்றிதழ் விவரம்:
நகர்ப்புற சொத்துகளை ‘பிளாக், வார்டு எண்’ கொண்டு தேட கூடுதல் வசதி!
சென்னை, அக்.21 நகர்ப்புறங்களில் உள்ள நிலங்கள் மற்றும் சொத்துகளின் வில்லங்கச் சான்றிதழ் விவரங்களை, பொதுமக்கள் இன்னும் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில், பதிவுத்துறை கூடுதல் வசதியை இணையதளத்தில் இணைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்துப் பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:”நகர்ப்புற நில அளவை முடிந்த பகுதிகளில், நிலங்கள் ‘பிளாக், வார்டு’ அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. இந்த நிலங்களைத் பழைய சர்வே விவரங்கள் அடிப்படையில் தேடும்போது, உரிய விவரங்கள் கிடைப்பதில் சில சமயம் சிரமம் ஏற்படுகிறது. எனவே, நகர்ப்புற நிலங்களை ‘பிளாக், வார்டு எண்’ அடிப்படையிலும் தேடுவதற்கான வசதி இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், நகர்ப்புற நிலங்கள், சொத்துகள் குறித்த வில்லங்க விவரங்களை, பொதுமக்கள் எளிதாகப் பெற வழி ஏற்பட்டுள்ளது” என்றார்.
