சென்னை, அக்.19- இலங்கையில் இருந்து கடந்த சில மாதங்களுக்குமுன் ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் சென்னைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த பயணிக்கு விமானத்தில் உணவு வழங்கப்பட்டது. அந்த உணவில் தலைமுடி இருந்துள்ளது.
இதுகுறித்து விமான ஊழியர்களிடம் அந்த பயணி முறையிட்டுள்ளார். ஆனால், அந்தப் பயணிக்கு விமான பணியாளர்கள் வேறு உணவு வழங்க வில்லை.
இதையடுத்து, சென்னை தரையிறங்கிய உடன் அந்த பயணி ஏர் இந்தியா விமான நிறுவனம் மீது காவல்துறையில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் தலைமுடி விழுந்த உணவை சாப்பிட்டு தனக்கு வாந்தி, வயிற்றுவலி உள்ளிட்ட உடல்நல பிரச்சினை ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார். மேலும், இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனம் தனக்கு ரூ. 11 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க ஏர் இந்தியாவுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து ஏர் இந்தியா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு 17.10.2025 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பயணிக்கு முடிவிழுந்த உணவை வழங்கி, பாதிப்பை ஏற்படுத்தியதற்கான பொறுப்பை ஏர் இந்தியா நிறுவனம் உணவு வழங்கும் ஓட்டல் நிறுவனத்திற்கு மாற்ற முயற்சிக்கிறது. இந்த சம்பவத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம்தான் பொறுப்பு என்று நீதிமன்றம் கூறியது. மேலும், மனு தாரரான பயணிக்கு ஏர் இந்தியா நிறுவனம் 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.