புதுடில்லி, அக்.18 பீகார் தேர்தலில் ஜாதி, மத அரசியல் தொடர்வது தெரிகிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் முதலமைச்சர் நிதிஷ்குமார், பாஜகவுக்கு இணையாக 101 தொகுதிகளை பெற்றுள்ளார். அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் உயர் சமூகத்தினர் 22 பேர் இடம் பெற்றுள்ளனர். ராஜபுத்திரர்கள் 10, பூமிஹார்கள் 9, பார்ப்பனர்கள் 2, காயஸ்து 1 என்ற எண்ணிக்கையில் இவர்கள் உள்ளனர்.
நிதிஷ் குமாரின் குர்மி சமூகத்தினர் 13 பேர், குஷ்வாஹா சமூகத்தினர் 12 பேரும் இதில் இடம் பெற்றுள்ளனர். பீகாரில் அதிகம் வசிக்கும் யாதவர் சமூகத்தில் 8 பேருக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஓபிசி வகுப் பினரில் மாஞ்சி 5, ரவிதாஸ் 5, பாஸி 2, பாஸ்வான் 1, வண்ணார் 1 என்ற எண்ணிக்கையில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த 101 வேட்பாளர்களில் 13 பெண்களும் உள்ளனர். அய்ந்து மாநில அமைச்சர்கள், உள்ளூர் முக்கியப் பிரமுகர்கள் நால்வரும் கூட ஜேடியு சார்பில் போட்டியிடுகின்றனர். முஸ்லிம்கள் 4 பேருக்கும் முதலமைச்சர் நிதிஷ் வாய்ப்பு அளித்துள்ளார். இவர்கள் போட்டியிடும் சீமாஞ்சல் பகுதியில் சுமார் 18 சதவீத முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். எனவே சீமாஞ்சல் தொகுதிகளை நிதிஷ் கட்சிக்கே பாஜக ஒதுக்கி விட்டது. பாஜக வழக்கம்போல் முஸ்லிம் வேட்பாளர் யாரையும் நிறுத்தவில்லை. சீமாஞ்சல் பகுதியில் அசாதுதீன் ஒவைசி கட்சி அதிக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இவர்கள் ஆர்ஜேடி கூட்டணி வாக்குகளைப் பிரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.