தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் 2025

அறிவாசான் பெரியாரின் கொள்கை – தொண்டறச் சிறப்பு தாங்கிய
மலரின் மணம் நுகர்வோம் – மானம் பாராப் பணி தொடர்வோம்! (2)

ிராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் “தந்தை பெரியாருக்குப் பின்” திராவிடர் கழகத்தின் செயல் பாடுகளைக் கால வரிசையில் பட்டியலிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், அய்யா, அம்மா ஆகியோருக்குப் பின் இயக்கத்தின் தலைமையேற்று ஆற்றிய பணிகளை அடுக்கடுக்காக எடுத்துக்காட்டி நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் விமர்சிப்போருக்கு உரிய விளக்கத்தைக் சினமின்றி, சித்தாந்தவாதியின் நெறியில் நின்று ஒரு விளக்கக் கட்டுரையை தந்தை பெரியாருக்குப் பின் திராவிடர் கழகத்தின் ஏறுநடை – பீடுநடை என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

மூத்த எழுத்தாளர் திரு.எஸ்.வி.ராஜதுரை அவர்களுடன் வடபுல எழுத்தாளர் திரு.வித்யாபூஷன் ராவத் நிகழ்த்திய உரையாடல் ஆங்கிலத்தில் “Periyar; Caste, Nation, Socialism” என்ற பெயரில் நூலாக வந்துள்ளது. இதில் கழகத்திற்குப் பாராட்டும், சில விமர்சனங்களும் செய்துள்ளமைக்கு, நன்றி கூறப் பட வேண்டிய இடங்களுக்கு நன்றியும் –  மறுத்துரைத்து தெளிவுபடுத்த வேண்டிய விமர்சனங்களுக்குத் தக்க தரவுகளோடு விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளன.

கழகத்தின் அமைப்பு முறை:

பெரியாருக்குப் பின் அமைப்பு முறையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், இயக்க செயல் வேகத்தை முடுக்கிவிட அமைப்பு ரீதியாக மேற்கொண்டவைகளை குறிப்பிட்டுள்ளார். கழகத்தின் பல்வேறு அணிகள், வெளியீடுகள், கல்வி நிறுவனங்கள், அவற்றின் பணிகளைப் பட்டியலிட்டுள்ளார்.

சமூகநீதி

பெரியார் காலத்தில் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு 49 விழுக்காடு!  ஒன்றிய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடையாது.

பெரியாருக்குப் பின்,

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம் – அர்ச்சகர் பயிற்சி – பணியமர்த்தல்.

இந்திய ஒன்றிய அரசில் 27 விழுக்காடு பிற்படுத்தப் பட்டோருக்கு! அதைப் பெறுவதற்கான மாநாடுகள், போராட்டங்கள்

பொருளாதார அடிப்படை இடஒதுக்கீட்டை எதிர்த்து அரசாணை எரிப்புப் போராட்டம் – எம்.ஜி.ஆர். ஆட்சி தேர்தலில் வீழ்ச்சி, பொருளாதார அளவு கோல் திரும்பப் பெறுதல்.

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு 31%லிருந்து 50% ஆக உயர்வு. தமிழ்நாட்டில் 69 விழுக்காடு.

69% இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது இடஒதுக்கீட்டைக் குறைத்தால் மக்கள் எரிமலையாய் வெடிப்பார்கள் என எச்சரித்தார் தமிழர் தலைவர்.

69% இடஒதுக்கீடு பாதுகாப்புக்கு 31சி சட்டத்தின் கீழ் புதிய சட்டம் உருவாக்கிக் கொடுத்ததுடன், நீதிமன்றத்தின் தலையீட்டிலிருந்து பாதுகாக்க அரசியல் சட்டம் 9ஆவது அட்டவணையில் சேர்க்க மாநில அரசுக்கு வழிகாட்டி நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து 69% இடஒதுக்கீடு நிரந்தரமாய் பாதுகாப்பு செய்தவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

திராவிடர் கழகத்தின் பணி – தொய்வாகவுள்ளது, செயல்பாடு போதாது, போராட்டங்கள் இல்லை என்று சொல்லப்படும் குறைக்கு இன்னும் பல செய்திகளை ஆதாரக் குவியலாகத் தனது கட்டுரையில் அள்ளி வீசியிருக்கிறார் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள். மேலும், நுழைவுத் தேர்வு எதிர்ப்பு – மதவெறி எதிர்ப்பு – வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு – ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பெரும் பயணம் – ஜாதி ஒழிப்பு மாநாடுகள் – ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு – மநுதர்ம எதிர்ப்பு – நீட் எதிர்ப்பு – தமிழ் வழிபாட்டுரிமை – சமஸ்கிருத எதிர்ப்பு என பல்வேறு தளங்களில் நடைபெற்ற – நடைபெறும் பிரச்சாரப் பெரும் பயணம் – மாநாடுகள் – போராட்டங்கள் என பல தளங்களில் தமிழர் தலைவர் அவர்கள் களங்கள் – வெற்றிகள் தந்தை பெரியாருக்குப் பின் கழகத்தின் சாதனைகள் என அருமையான கட்டுரையைத் தீட்டியிருக்கிறார்.

இக்கட்டுரை விமர்சிப்போருக்கு விளக்கம் – வீண் பழி சுமத்துவோர்க்கு அதிர்வேட்டு!

மலரில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும் – நீலகிரி மக்களவை உறுப்பினருமான  ஆ.இராசா அவர்களின் கட்டுரை சிறப்பாக இடம் பெற்றுள்ளது.

இவர் தாய்க் கழகத்தில் தோன்றி – சேய்க் கழகத்தில் உயர்ந்திருப்பவர். பெரியார் அய்யாவின் கொள்கைத் திறத்தில் திளைத்தவர். எவ்விடத்திலும் பெரியாரின் கொள்கைகளை முழங்குவதில் சளைத்தவரில்லை.

“இன்னமும் பெரியார்தான் ஆள்கிறார்” என்னும் தலைப்பில் கருத்துக் காட்சியாகத் தனது கட்டுரையைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

சுயமரியாதை

சுயமரியாதை எனும் ஒற்றைச் சொல்லை எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டை வலம்வந்து – தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் பொதுத் தொண்டுக்கு  தந்திட்ட பிறர் அஞ்சியதை அடையாளம் காட்டிய, பேச நடுங்கியதை முழக்கமிட்ட போராளி பெரியார் என்பதை முன்னிறுத்தி சிறப்பான கட்டுரையைத் தந்திருக்கிறார்.

அமைப்பின் செயல்பாடு

கொள்கை சார்ந்த நிலைப்பாடுகளையும் அதை வென்றெடுக்க உருவாக்கிய அமைப்பின் செயல்பாடுகளையும் பல காலகட்டங்களாகக் கட்டுரையில் காட்டுகிறார்.

1925-1929 மூடநம்பிக்கை, ஸநாதன எதிர்ப்பு

1929-1932 சுயமரியாதை மாநாடு (மதம், ஜாதி, பெண் அடிமை ஒழிப்பு)

1932-1935 பொது உடைமை

1935-1937 நீதிக்கட்சி

1937-1944 இந்தி எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு

1944 இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியது (திராவிடர் கழகம்)

பெரியாரின் பார்வை

தமிழை அறிவியல்படி பார்த்த பெரியாரைக் கண்டு சில அரைவேக்காடுகள் அலறுவதற்கு, தனித்தமிழ் இயக்கத் தலைவர்கள் பெரியார் மீது கொண்ட மதிப்பையும், பற்றையும் – பெரியார் தனித்தமிழ் பற்றாளர்கள் மீது கொண்ட பற்றையும் – மதிப்பையும் கோடிட்டுக் காட்டியிருப்பது அருமை.

ஜாதி ஒழிப்பு

ஜாதி ஒழிந்த தமிழ்நாடுதான் தந்தை பெரியாரின் நோக்கு – இலக்கு. ஜாதியை ஒழிக்க கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பன ஆதிக்கம் ஆகியவற்றை ஒழிப்பதே ஒரே வழி என்ற பெரியாரின் பார்வையை முன்னிறுத்தி கட்டுரையை நிறைவாக்கியுள்ளார்.

தடம் புரளாத தத்துவமாக 92 வயது தமிழர் தலைவர் ஆசிரியரும், தத்துவார்த்த அரசு முதலமைச்சராக 72 வயது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும், சுயமரியாதை இயக்க நூற்றாண்டைக் கொண்டாடும் சிறப்பை விட பெரியாருக்கு வேறென்ன சிறப்பு வேண்டும் என்று முடிக்கிறார்.

தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினரும் – அகில இந்திய சமூகநீதி கூட்டமைப்பு ஒருங்கிணைப் பாளருமான வழக்குரைஞர் திரு.பி.வில்சன் அவர்கள் தந்தை பெரியாரைப் பற்றிய ஒரு சிறப்பான கட்டுரையை எழுதியிருக்கிறார்

“சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர் பெரியார்!” என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்தக் கட்டுரை பல செய்திகளை உள்ளடக்கியது.

தந்தை பெரியார் எந்தச் சட்டங்களுக்குள்ளும் கொண்டுவர முடியாதவர் என்று கூறுவார்கள். அது தவறு. மானுட அறத்துக்கு எதிரான சட்டங்களுக்கு அவர் எதிரி. சமூக மாற்றத்திற்கான அனைத்துச் சட்டங்களையும் அவர் வரவேற்கிறார்.

சமூகநீதி

இடஒதுக்கீட்டுக்கு சட்டத் திருத்தம் தேவை என்று கூறியதே அவர்தான். அவர்தான் முதல் சட்டத் திருத்தத்திற்கே காரணம். மனித அறம் சார்ந்த சட்டங்கள் அனைத்தையும் அவர் ஆதரித்தார் என்ற பதிவு செய்கிறார்.

சமூகநீதி குறித்து சில மாநிலங்களில் தலைவர் களுக்கே தெரியாது. இங்கு சாமான்யருக்கே கூட இடஒதுக்கீடு குறித்துத் தெரியும்.

பெரியாரின் சமூகநீதிக் கோட்பாடுகள் இன்று இந்தியாவிற்குப் பயன்படும் கொள்கையாகும்.

பெண் கல்வி – மதம் சாராக் கல்வி – மூடநம்பிக்கையில்லாக் கல்வி – பெண் கல்வி என்று பெரியார் கூறியது எல்லாம் இன்று வரவேற்கப்படுகிறது – சட்டமாக்கப்படுகிறது.

50 ஆண்டுகள் மட்டுமா?

பெரியார் ஒருபோதும் தனது கொள்கையே நிலைக்கும் என்று கூறியவர் இல்லை. இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பின் இக்கொள்கை தேவையில்லை என்று ஆகிவிடும் என்று அடக்கமாகச் சொன்னார். இன்றைய நிலையில் இன்னும் 100 ஆண்டுகளுக்கு பெரியார் கருத்துகள் தேவையான ஒன்றாகும். மற்றும் பல்வேறு கருத்துகளைப் பதிவு செய்து, “பெரியாரின் பேரொளி உலகுக்கு வழிகாட்டட்டும்!” என்று நிறைவு செய்துள்ளார்.

“சுயமரியாதைக்குள் ஜனநாயகமும், தேசியமும்!” இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநில துணைச் செயலாளர்  தோழர் மு.வீரபாண்டியன் அவர்கள் எழுதியிருக்கிறார்.

சுயமரியாதை எனும் சொல் உலகில் பல நாடுகளில் பேசப்பட்டாலும், அந்த சொல்லே ஓர் இயக்கத்திற்கு பேராக அமைந்தது தமிழ்நாட்டில்தான். தந்தை பெரியார்தான் அச்சிறப்புக்குரிய சுயமரியாதை இயக்கத்தை 1925இல் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளார்.

அய்ரோப்பாவில் அறிவு இயக்கங்கள் தோன்றிய மரபில் – சுயமரியாதை, கடவுள் மறுப்பு – ஜனநாயகம் பற்றிய கருத்தாக்கங்கள் எழுந்தது இயல்பு. ஆனால், அதுபோல ஒரு சூழல் இல்லாத தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம் கண்டவர் தந்தை பெரியார். கல்வி, அறிவு என யாவும் அறிவியல் மனப்பாங்குடன் இயங்க வேண்டும் என்றார். இவை யாவும் ஜனநாயகத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்றார் பெரியார்.

இந்திய ஒன்றிய அரசு மதவாத அரசாக அமைந்துவிட்ட நிலையில் பி.ஜே.பி.யினால் ஆபத்து – ஜனநாயகத்திற்கு எந்த அளவிற்கு இருக்கும் என்பதை எண்ணிட அச்சமாக இருக்கிறது.

மாநிலங்களின் உரிமைகளைத் தகர்ப்பதே பிஜேபியின் நோக்கம் என்பதை இக்கட்டுரையில் தெளிவாக்குகிறார்.

கட்டுரையின் முடிவாக, பெரியாரின் சிந்தனைகள் – அவரே கூறுவது போல சோசலிச உலகிற்கானதுதான் என அழுத்தம் திருத்தமாக எழுதிப் பெருமை சேர்த்திருக்கிறார்.

அமெரிக்காவில் பெரியார்!

பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் இம்மலரில் ‘அமெரிக்காவில் பெரியார்’ எனும் பெயரில் ஒரு சிறந்த கட்டுரையை வழங்கியிருக்கிறார்.

நோபல் பரிசு பெற்ற அறிஞர் நைப்பால் அவர்கள் பெரியாரை – அவரது இயக்கத்தின் கொள்கைகள் – செயல்படும் திறத்தை – ஈட்டிய வெற்றிகளைக் கண்டறிந்து பெரியார் திடலுக்கு வந்து நேரில் கற்றறிந்து தனது நூலில் 69 பக்கங்கள் பெரியாருக்கே ஒதுக்கிவிட்டார். இந்நிகழ்வுக்குப் பின் அமெரிக்காவின் பல்வேறு மாநிலத்திலுள்ள கலிபோர்னியா, டெக்சாசு, நியூயார்க் மாநிலங்களைச் சேர்ந்த அறிஞர் பெருமக்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் ஏராளம் பெரியாரைப் பற்றி ஆய்வு செய்து நூல்கள் வெளியிடுகின்றனர்.

டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள், சிகாகோவில் பெரியார் பன்னாட்டமைப்பு தோன்றிய வரலாற்றைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். அமெரிக்காவில் பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழாவில் நாசா விஞ்ஞானி ஸ்டூவர்ட் ஜோர்மன் – வாஷிங்டன் விழாவில் பேராசிரியர் பால்கர்ட்ஸ் (வாஷிங்டன்) போன்றோர் கலந்து கொண்டதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

1934இல்தான் அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் மனிதநேயக் கோட்பாடு சேர்க்கப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் தந்தை பெரியார் 1924லேயே அறிமுகப்படுத்திவிட்டார் என்று குறிப்பிடுகிறார் மருத்துவர்.

(மலர் மணம் வீசும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *