சென்னை, அக்.17- மாணவர்களுக்கு கல்விக்கடன், விவசாயம், சிறு,குறு, நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு முந்தைய ஆண்டை விட கூடுதலாக கடன்கள் இந்தியன் வங்கி அளித்துள்ளது என இவ்வங்கியின் மேலாண்மை இயக்குனர் சிறீ.பினோத்குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியன் வங்கியின் 2025 செப்டம்பர் 30 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான நிதிசார் முடிவுகளை நேற்று (16.10.2025) அதன் தலைமையகத்தில் வெளியிட்டு அவர் கூறியதாவது:
இந்தியன் வங்கியின் உலகளாவிய வணிகம், முந்தைய ஆண்டை விட 12.34 சதவீதம் உயர்ந்து ரூ.13.97 இலட்சம் கோடியாக இருக்கிறது. நிகர லாபம் முந்தைய ஆண்டை விட 17.24 சதவீதம் உயர்ந்து ரூ.5,991 கோடியாக பதிவாகியிருக்கிறது. வர்த்தகம், விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு இவ்வங்கி வழங்கும் கடன்கள் முந்தைய ஆண்டை விட முறையே 18.58 சதவீதம், 13.98 சதவீதம் மற்றும் 14.10 சதவீதம் என அதிகரித்திருக்கின்றன. முந்தைய ஆண்டை விட வீட்டுக்கடன் 12.68 சதவீதம் என செப்டம்பர் 25இல் அதிகரித்திருக்கின்றன. உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடன்கள் முறையாக சரிப்பார்க்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. மாறிவரும் சூழலுக்கு ஏற்ப நெகிழ்வுத்திறனுடன் இவ்வங்கி சிறப்பாக இயங்கி வருகிறது. வெளிப்படைத்தன்மை மூலம் நம்பிக்கையைக் கட்டமைத்தல் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்களை வழங்குதல் ஆகியவற்றில் எமது சிறப்பு கவனம் தொடர்ந்து வலுவாக இருக்கிறது. புத்தாக்க முயற்சிகளில் முதலீடு செய்வதன் மூலமும், நிதிச்சேவைகளை குறைவாகப் பெறும் பிரிவினருக்கும் இவ்வங்கி சேவைகளை விரிவு படுத்துவதன் மூலமும், எங்களின் நீண்ட கால வெற்றிக்கான அடித்தளத்தை நாங்கள் மேலும் வலுப்படுத்தி வருகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.