14.10.2025 அன்று ‘விடுதலை’ ஏட்டில் 6ஆம் பக்கத்தில் வெளிவந்த கட்டுரையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீசிட முயற்சித்ததாக வந்த செய்தி முழுமை அல்ல; உச்சநீதிமன்றத்தில் வழக்காடும் ஸநாதனத்தில் நம்பிக்கையை வெளிப்படுத்திய ஒரு வழக்குரைஞர் செருப்பை வீசிவிட்டார் என்பதுதான் முழுமையான செய்தி. செருப்பை வீசியவர் தான் மனதில் நினைத்ததை செயலில் காட்டி விட்டார். குற்றவியல் சட்டத்தில் நடந்துவிட்டது ஒரு குற்றம் என்பதற்கு இரு கூறுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பது நியதி. குற்றத்தை செய்ய நினைக்கும் மனநிலை (Mens rea) என்பது முதல் கூறு; மனதில் நினைத்ததை செய்து முடிப்பது (Actus reus) என்பது அடுத்த கூறு. உச்சநீதிமன்ற நீதிபதி மீது செருப்பை வீசிட நினைத்ததும், செருப்பை வீசியதும் ஆகிய இரண்டு கூறுகளும் சேர்ந்து செருப்பை வீசிய ஸநாதன வழக்குரைஞர் செய்தது குற்றம் என்பதை உறுதி செய்கிறது.
ஆனால் செருப்பை வீசிய வழக்குரைஞரைப் பிடித்து விசாரணை செய்து அவர் மீது குற்ற வழக்கு எதுவும் பதியாமல் விடுவித்து விட்டனர். இதுதான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பை வீசியவர் மீது எடுக்கப் பட்ட குற்ற நடவடிக்கை. நாட்டோரே அறிந்து கொள்வீர்.