சிம்லா, அக்.15– காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களை ஒன்றிய அரசு புறக்கணிப்பதாக பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.
வீரபத்ர சிங் சிலை திறப்பு
இமாசல பிரதேச மேனாள் முதலமைச்சர் வீரபத்ர சிங்கின் வெண்கல சிலை ஒன்றை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்றுமுன்தினம் (13.10.2025) சிம்லாவில் திறந்து வைத்தார்.
பின்னர் நடந்த பொதுக்கூட் டத்தில் உரையாற்றிய கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா, ஒன்றிய அரசை கடுமையாக சாடினார். குறிப்பாக மாநிலத்தை காங்கிரஸ் கட்சி ஆளுவதால் இமாசல பிரதேசத்துக்கு போதுமான இயற்கை பேரிடர் நிவாரண நிதியை வழங்கவில்லை என குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இமாசல பிரதேசத்தில் சுக்விந்தர் சுகு முதலமைச்சரான பிறகு, பலத்த மழையால் மாநிலம் பெரும் பாதிப்பை சந்தித்தது. ஆனால் பலமுறை கோரிக்கை விடுத்தபிறகும் ஒன்றிய அரசு போதிய உதவிகளை வழங்கவில்லை.
காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறது. அந்த மாநிலங்களை புறக்கணிக்கிறது.
மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வீரபத்ர சிங் போன்ற தலைவர்கள் நமக்கு தேவை. அவர்கள் எப்போதும் நேர்மை மற்றும் உண்மையின் பாதையில் நடைபோட்டனர். மக்களின் மேம்பாட்டுக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்டனர்.
ராகுல் காந்தி அச்சமின்றி எழுப்புகிறார்
கெட்ட வாய்ப்பாக நாட்டில் வெகு சில தலைவர்களே இந்த பாதையை தற்போது பின்பற்று கின்றனர். காங்கிரசின் ராகுல் காந்தி மக்களின் பிரச்சினைகளை அச்சமின்றி எழுப்பி வருகிறார்.
கடந்த தேர்தல்களில் பிரசா ரத்துக்காக நான் இங்கே வந்த போது மக்களுடனான வீரபத்ர சிங்கின் பிணைப்பு பற்றி இங்குள்ளவர்கள் என்னிடம் தெரிவித்தனர். அவரது எளிய அணுகுமுறைதான் காங்கிரஸ் தலைவர்களின் மரபாக உள்ளது.
அந்த பாரம்பரியத்தை தற்போ தைய முதலமைச்சர் சுக்விந்தர் சுகுவும் பின்பற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நாம் இந்த மண்ணை, மலைகளை, பள்ளத் தாக்குகளை நேசிப்பது உண்மை. இந்த இயற்கையை ஒவ்வொருவரும் பாதுகாக்க வேண் டும்.
இவ்வாறு பிரியங்கா கூறினார்.
இயற்கைப் பேரிடர்கள்
மலை பிராந்தியமான இமாசல பிரதேசத்தில் கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 47 மேகவெடிப்பு சம்பவங்கள், 98 வெள்ளப்பெருக்குகள், 148 பெரிய நிலச்சரிவுகள் என தொடர் இயற்கை பேரிடர்கள் நிகழ்ந்தன. மழை தொடர்பான இந்த சம்பவங்களில் 270 பேர் பலியானார்கள்.
இதனால் ஏற்பட்ட சேதங் களுக்காக ரூ.5,426 கோடி நிவாரண உதவி கேட்டு ஒன்றிய அரசை மாநில அரசு நாடியது. ஆனால் போதிய நிதி வழங்காததால் பிரியங்கா இந்த குற்றச்சாட்டை ஒன்றிய அரசுமீது வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.