கோவை விஞ்ஞானி ஜி.டி. நாயுடு என்ற அதிசய மனிதர்! (2)

6 Min Read

மக்களின் கருத்தை அறிவதற்கு ஜி.டி. நாயுடு அவர்கள் நடத்திய கூட்டத்தில், பல கட்சித் தலைவர்கள், மோகன் குமாரமங்கலம், அறிஞர் அண்ணா, ‘விடுதலை’ ஆசிரியர் குத்தூசி குருசாமி போன்ற பலரும் பேசினர்.

‘விடுதலை’ ஆசிரியர் குருசாமி அவர்கள் இயந்திரங்களை உடைக்க வேண்டும் என்று ஆவேசமாகப் பேசி விட்டார். அதற்கடுத்துப் பேசிய அறிஞர் அண்ணா அவர்கள் தோழர் குருசாமி பேச்சின் கருத்தையொட்டி (தந்தை பெரியார் இந்தக் கருத்தைத்தான் வேகமாகப் பேசுவார் போலும் என்ற ஊகத்தில்) இயந்திரங்களை உடைக்க வேண்டும் என்ற கருத்துப்படியே பேசினார்.

ஜி.டி. நாயுடு அவர்கள் தந்தை பெரியார் தனது தலைமையுரையை ஆற்றுவதற்கு முன்பே, அவரது பணியாளர்களை இயந்திரங்களின் பக்கத்தில் சம்மட்டிகளுடன் நிற்க வைத்திருந்த நிலையில், ஜாடை காட்டி உடைக்கச் சொன்னதும் ‘டமால்’, ‘டமால்’ என்ற சத்தத்துடன், மக்களின் ஆரவாரம், கைத்தட்டல், உணர்ச்சிப் பெருக்கோடு இயந்திரங்கள் நொறுக்கப்பட்டன – அவரது பணியாளர்களால்!

அடுத்து சில நிமிடங்கள்…! நிகழ்ச்சித் தலைவர் தந்தை பெரியாருக்கு இச்செயல் ஏற்புடையது அல்ல என்பதை  உணர்த்தும் வகையில் அவரது பேச்சின் தொடக்கத்தில் ஜி.டி. நாயுடு அவர்களைக் கண்டித்துத் தனது உரையைத் தொடங்கினார்.

‘‘தோழர்களே! இன்று நீங்கள் செய்த காரியம் மிகத் தவறான காரியம், பைத்தியக்காரத்தனமான காரியம் என்றே சொல்லுவேன். அதோடு இந்தப்படி உடைத்ததானது முட்டாள்தனமான காரியம்.உடைக்கும்படி தோழர் ஜி.டி. நாயுடு அவர்களுக்கு யோசனை சொன்னது மாபெரும் முட்டாள்தனம் ஆகும். (கூட்டத்தில் சில குரல்கள் ‘வாபசு வாங்கு’ என்று எழுந்தன. பெரியார் தொடர்ந்து) முட்டாள்தனமான காரியம் மட்டுமல்ல, மாபெரும் மடத்தனம் என்றே சொல்லுவேன்.’’

‘‘இந்தக் கூட்டத்தின் தலைவர் நான். எனது கருத்தைக் கூறுவதற்கு முன்பே நாயுடு அவர்கள் இப்படி முறையற்று நடந்து கொள்வது சரியல்ல. இப்படி  இயந்திரங்களை என் கருத்துக் கேட்காமல் உடைத்தது முட்டாள்தனம்’’ என்று பேச ஆரம்பித்தவுடன் – வந்திருந்த கூட்டத்தினரில் பெரும்பகுதியினர் தந்தை பெரியார் கூறியதைக் கேட்டு  ‘‘வாபஸ் வாங்குங்கள், ‘முட்டாள்தனம்’ என்று கூறியதை வாபஸ் வாங்குங்கள்’’ என்று பெருங் கூச்சல் போட்டு ஆவேசமாகக் கத்தினார்கள்.

அப்போது தந்தைபெரியார் அவர்கள் இந்த எதிர்ப்பைக் கண்டவுடன் சிலிர்த்தெழுந்து கர்ஜனை புரியும் சிங்கம் போல – எதிர்ப்பு கண்டு சிறிதும் கண்டு கலங்காமல், பின் வாங்காமல் ‘இப்போது நீங்கள் கூறுவது முட்டாள்தனத்தை விட மோசமானது; மடத்தனமானது’ என்றதும் மீண்டும் பெரும் எதிர்க்கூச்சல்.

அய்யா தந்தைபெரியார் தொடர்ந்து (சூடான சூழ்நிலையில்!) பேசினார்.

‘‘இந்த இயந்திரங்கள் – நாயுடு கண்டுபிடித்தவை எனலாம் –  பெரும் பலன் தர வைக்கும் இயந்திரங்களை, கண்ணாடிகளை உடைப்பது; இதற்கு மூலகாரணமான அமைப்பு – வட நாட்டு  ஆட்சி;  அந்த ஆட்சியை உடைப்பதற்கு அல்லவா  இந்த சம்மட்டி போன்று நாம் நம்முடைய உணர்வைக் காட்டியிருக்க வேண்டாமா?’’ என்றவுடன்,

அவ்வளவு கூட்டமும் அய்யா பேச்சுக்கு வரவேற்பு! ஒரே பலத்த கைதட்டல் ஆரவாரம், அடங்க சில மணித்துளிகள்!!

தந்தைபெரியார் தொடர்ந்தார்; ‘‘இதற்கு மூல காரணமாக தடை – தொல்லை எங்கே இருக்கிறதோ, யார் காரணமோ – அதையல்லவா கண்டறிந்து   மக்கள் போராட்டத்தினை உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட ஓர வஞ்சனைக்கார அரசுகளை எச்சரிக்க வேண்டாமா?

அதையெல்லாம் விட்டு விட்டு நாயுடு கஷ்டப்பட்டுத் தயாரித்த இந்த இரும்பு இயந்திரங்களை உடைப்பதினால் (நட்டம் நமக்கே தவிர) இதில் டில்லி ஆதிக்கக்காரனுக்கு இழப்பு என்ன?’’ என்று கூறி தமிழ்நாட்டு மக்களது சீரிய சிந்தனையை விசிறி விட்டு ஓர் எழுச்சியை ஏற்படுத்தி விட்டார்.

பின்னால் அண்ணாவிடம் இருந்து ஒரு நண்பர் மூலம் வந்த தகவல், ‘‘அய்யா கருத்தறிந்துதான் பெரிதும் பேசுவார் – அவரது நிலைப்பாடு இந்த விவகாரத்தில் எப்படி என்று யூகித்தே பெரிதும் பேசுவார் என்று ‘விடுதலை’ ஆசிரியர் பேசியதை  –  அதுதான் அய்யா கருத்துபோல என்று பேசிவிட்டேன். ஆனால், அய்யா சரியான விளக்கம், நிலைப்பாடு எடுத்து மக்களை அப்படியே ஈர்த்துக் கொண்டார்’’ என்று பரவசத்துடன்  அண்ணா  தனது சகாக்களிடம் கூறினாராம்.

எவருக்கும் கட்டுப்படாத–  ஆனால் மக்களின்  உரிமைகளுக்குக் குரல் கொடுக்கவும், வளர்ச்சிக் கண்ணோட்டத்திலும் எப்போதும் குறியாய் இருந்தவர் கோவை விஞ்ஞானி ஜி.டி. நாயுடு அவர்கள்.

தந்தை பெரியார்–  ஜி.டி. நாயுடு அவர்களது நட்பு மிகவும் வேடிக்கை, விசித்திரம். அவையெல்லாம் உடன் இருப்பவர்களுக்கு தரும் ஒரு தனி ரக ‘அக நக நட்பு’ ஆகும்!

கோவைக்குப் போகும் போதெல்லாம் ஜி.டி. நாயுடு அவர்களது இல்லமான ‘கோபால் பார்க்’க்குச் செல்லாமல் வர மாட்டார் தந்தை பெரியார்.

அவரும் அய்யாவை அன்பு பொங்க வரவேற்கும் விந்தையே ஒரு தனி ரகம்.

தந்தை பெரியார் அமர்ந்து அந்த வேன்  ஜி.டி.நாயுடு பங்களாவுக்குள்  நுழையும் போதே தனது மணிப்பர்சில் உள்ள நோட்டுகள் முதலியவற்றை எடுத்து அம்மாவிடம் அல்லது செயலாளரிடம் கொடுத்து விட்டு கொஞ்சம் சிறு அளவு சில்லறையை மட்டுமே வைத்துக் கொண்டு நுழைவார்.

அய்யா பெரியார் வந்தவுடன் ஜி.டி. நாயுடு பேசிக் கொண்ேட பெரியாரின் மணிபர்சை ‘லபக்’ என்று தூக்கிக் கொண்டு, அதில் உள்ள எல்லாகாசு – பணத்தையும் ‘பறிமுதல்’ செய்து விடுவார்!

அங்கிருக்கும் அனைவரும் இந்த வேடிக்கையை ரசித்துப் பார்ப்பார்கள் (நானும் பார்த்திருக்கிறேன் – அன்னை மணியம்மையாருடன்).

இப்படி எப்போதெல்லாம் ஜி.டி. நாயுடு அவர்களுடன்  ‘பர்சில்’ பணப் பறிமுதல் தேதி – தொகை வாரியாக ஒரு கவரில் வைத்துக் குறித்துத் தனித்தனியே அதனை பத்திரப்படுத்த உத்தரவிடுவார்!

உரையாடல்கூட சிற்சில நிமிடங்கள்தான். சீரியஸ்டாக் (Serious Talk).   பல நேரங்களில் ஒருவரை மற்றவர் மிஞ்சும் வேடிக்கையான பேச்சுகள் கலந்து இருக்கும்!

வெளிநாட்டிற்குச் சென்ற நிலையில் (இலண்டன் போன்ற ஊர்கள் என்று நினைவு) தந்தை பெரியாருக்கு ஜி.டி. நாயுடு தங்கியுள்ள பிரபல உயர்தர ஓட்டலில் விருந்துகொடுத்தது உண்டு.

தந்தை பெரியாருக்கு இரயிலில் முதலாவது வகுப்பு டிக்கெட் வாங்கிக்கூட கோவை போன்ற ஊர்களில் ரயில் நிலையத்திலும் கொடுத்து ‘‘எதற்கு மூன்றாம் வகுப்பு டிக்கெட்டு?’’ என்று கூறி வற்புறுத்துவார்.

தந்தைபெரியார் அந்த டிக்கெட்டை  அமைதியாக வாங்கிக் கொண்டு  இரயில் கிளம்பும் சில நிமிடங்களுக்கு முன் தனது தோழர்களை அனுப்பி முதலாம் வகுப்பு டிக்கெட்டை ரத்து  செய்து (Refund)  பணமாக வாங்கி வரச் சொல்லி அந்தப் பணத்தை மிச்சப்படுத்துவார்.

சிலர் தமது பணத்தில் சிக்கனம் காட்டி, மற்றவர் பணம் என்றால் தாராளமான நடப்பில் இருப்பார்கள்!

ஆனால், தந்தை பெரியாரின் சிக்கனம் என்பதில் இரட்டை அணுகுமுறையே கிடையாது.

யார் பணமாக இருந்தாலும் ஒரே மாதிரியான சிக்கனம்தான் என்பது நாம் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கை அறம் ஆகும்.

அதிசய மனிதர் கோவை விஞ்ஞானி ஜி.டி. நாயுடு என்பதற்கு எனக்குத் தெரிந்த ஓர் அரிய தகவல்.

சென்னை வந்து அவர்  தங்கும்போது – அண்ணாசாலை ‘காஸ்மா பாலிட்டன் கிளப்பில்’ தங்கி, டில்லிக்கு விமானத்தில் செல்லாமல் இரயிலில் கிளம்புவார். காலத்தைப்பற்றி  இப்படிக் கவலை  இல்லாது ஒரு நாளுக்கு மேலாகும் ரயில் பயணத்தை ஏன் தேர்வு செய்கிறார் என்ற கேள்விக்குக் கிடைக்கும் பதில் என்ன தெரியுமா?

சென்னை ஹிக்கின் பாதம்ஸ் புத்தகக் கடைக்குச் சென்று புதிதாக வெளிவந்த ஆங்கில புத்தகங்களில் அவருக்குப் பிடித்த சிலவற்றை வாங்குவார். சென்ட்ரலிலிருந்து  டில்லிக்கு முதல்வகுப்பில், இரயில் பயணம்  செய்யும்போது அந்தப் புத்தகங்களைப் படித்து முடித்து  மீண்டும் உடனே திரும்புவார்.     தொந்தரவு இல்லாமல் படிக்க கோவை விஞ்ஞானி கையாண்ட ஒரு சிறப்பு ஏற்பாடே ரயில் பயணம். இப்படிப் பல பல!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *