செங்கல்பட்டு, அக்.14- கடந்த 21 ஆண்டுகளாக தமிழ்நாடு போலியோ பாதிப்பு இல்லாத மாநிலமாக இருந்து வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் ‘போலியோ’ சொட்டு மருந்து சிறப்பு முகாம் 12.10.2025 அன்று நடைபெற்றது. இந்த முகாமை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
‘போலியோ’ தடுப்பூசி முயற்சிகள் தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெறுவதால், தமிழ்நாடு கடந்த 21 ஆண்டுகளாக ‘போலியோ’ இல்லாத மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் இறுதியாக கடந்த 2004ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் போலியோ நோய் கண்டறியப்பட்டது. இந்திய அளவில் மேற்கு வங்காளத்தின் ஹவுராவில் கடந்த 2011ஆம் ஆண்டு ‘போலியோ’ வைரஸ் இறுதியாக கண்டறியப்பட்டது. 2012ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு ‘போலியோ வைரஸ் பரவல் கொண்ட தொற்றுநோய் நாடுகள்’ பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கி, 2014ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி அன்று ‘போலியோ’ பாதிப்பில் இருந்து விடுபட்ட நாடாக இந்தியாவுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆக 11 ஆண்டுகள் இந்தியா முழுமைக்கும் போலியோ இல்லாத நாடாக இருந்து வருகிறது. 21 ஆண்டுகள் தமிழ்நாடு போலியோ பாதிப்பு இல்லாத மாநிலமாக இருந்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து சிறப்பு போலியோ சொட்டு மருந்து நாள் நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது 6 மாவட்டங்களில் 7 ஆயிரத்து 91 மய்யங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இம்மய்யங்களில் 7.88 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.