எதிலும் மதப் பார்வையா? முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் குறித்து அமித் ஷா கருத்து காங்கிரஸ் கடும் கண்டனம்!

2 Min Read

புதுடில்லி, அக். 13- முஸ்லிம் மக்கள் தொகை பெருக்கம் குறித்து அமித் ஷா வெளிப்படுத்திய கருத்துகளை விமர்சித்துள்ள காங்கிரஸ், ‘கடந்த 11 ஆண்டுகளாக அமித் ஷா என்ன செய்து கொண்டிருந்தார்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளது.

மக்கள் தொகை

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை (அக். 10) நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசிய அமித் ஷா, 1951 முதல் 2011 வரையிலான சென்சஸ் விவரங்களை வைத்து பார்க்கும்போது, முஸ்லிம் மக்கள்தொகை 24.6 சதவீதம் என்ற விகிதத்தில் அதிகரித்திருக்கிறது. ஆனால், ஹிந்துக்களின் மக்கள்தொகை 4.5 சதவீதம் என்ற விகிதத்தில் குறைந்திருக்கிறது.

இதற்கு கருவுறுதல் குறைந்தது காரணம் அல்ல, இந்தியாவுக்குள் அந்நியர்களின் ஊடுருவலும் வெளிநாட்டிலிருந்து வந்த குடியேற்றமுமே காரணம். இந்திய பாகப்பிரிவினையின்போது, இந்தியாவின் இருபுறங்களிலும் மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் உருவானது. அதன்பின், ஒன்று பாகிஸ்தானாகவும் இன்னொன்று வங்கதேசமாகவும் மாறியது. அவ்விரண்டு இடங்களிலிருந்தும் இந்தியாவுக்குள் ஊடுருவிய மக்களால் இந்த விகிதாச்சாரம் நிகழ்ந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், 1951-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில், இந்தியாவில் ஹிந்துக்கள் 84 சதவீதம் இருந்தனர். ஆனால், முஸ்லிம்களோ 9.8 சதவீதம் மட்டுமே இருந்தனர். 1971-ஆம் ஆண்டு கணக்கீட்டில், ஹிந்துக்கள் 82 சதவீதமாக குறைந்தும், முஸ்லிம் மக்கள்தொகை 11 சதவீதமாக உயர்ந்தும் காணப்பட்டது. 1991ஆம் ஆண்டு கணக்கீட்டில், ஹிந்துக்கள் 81 சதவீதமாகவும், முஸ்லிம்கள் 12.12 சதவீதமாகவும் இருந்தனர். இவ்விரு மதங்களைப் பற்றி மட்டுமே நான் பேசக் காரணம், இந்தியாவுக்குள் நடைபெற்ற ஊடுருவலும் குடியேற்றமுமே இவற்றுக்கான காரணம் என்று அவர் பேசியிருந்தார்.

இந்த நிலையில், இது குறித்து காங்கிரஸ் தலைவர் பவன் கேரா வெளியிட்டிருக்கும் கண்டனப் பதிவில், ஹிந்து-முஸ்லிம் பிரச்னை என்ற தீயில் கூட்டுறவுத் துறை அமைச்சர் அக். 10-இல் எண்ணெய் ஊற்றியிருக்கிறார். அதன்மூலம், எதிர்வரும் தேர்தல்களில் வாக்குகளை ஒருதலைப்பட்சமாக திசைதிருப்ப பார்த்திருக்கிறார்.

அவர் பேசியவை மற்றும் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் முஸ்லிம் ஊடுருவல் பரவலாக இருப்பதாகச் சுட்டிக்காட்டி அதனை இழிவுபடுத்தியிருக்கிறார்.

அவர் சொன்ன விசயங்களிலிருந்து, வெளிநாட்டிலிருந்து வந்த குடியேற்றமும் ஊடுருவலுமே முஸ்லிம் மக்கள்தொகை அதிகரிக்கக் காரணமாயின், கடந்த 11 ஆண்டுகாலமாக உள்துறை அமைச்சர் என்ன செய்து கொண்டிருந்தார்?

எனினும், தான் உள்துறை அமைச்சர் என்பதை உடனடியாக உணர்ந்துகொண்ட அவர், முஸ்லிம்களை நோக்கி தான் வீசிய கத்தி தன் மீதே பாயும் என்பதைச் சட்டென சுதாரித்துக் கொண்டு, தான் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடகப் பதிவை நீக்கியிருக்கிறார்.

அவர் அழித்தாலும், உண்மையை யாராலும் அழிக்க முடியாது. 2005 முதல் 2013 வரை, காங்கிரஸ் அரசு 88,792 வங்கதேச குடிமக்களை நாடு கடத்தியது குறிப்பிடத்தக்கது. பாஜக ஆட்சியில், 10,000க்கும் குறைவான வெளிநாட்டவரே நாடு கடத்தப்பட்டிருக்கின்றனர். ஆயினும், பாஜக சும்மா இருந்தபாடில்லை. குறைகுடமே கூத்தாடும்! என்று தெரிவித்திருக்கிறார் பவன் கேரா.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *