நியூயார்க், அக்.11- அமெரிக்காவின் தெற்கே டென்னஸ்ஸி மாகாணத்தின் ராணுவ வெடிபொருள் ஆலையில் நேற்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சத்தம் பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மக்களுக்கும் கேட்டுள்ளது. இதனால், வீடுகள் குலுங்கின. சிலர் வெடிவிபத்து ஏற்பட்ட காட்சிகளை கேமராவில் படம் பிடித்தனர்.
இதில், 19-க்கும் மேற்பட்டோர் சிக்கி கொண்டனர். அவர்கள் 19 பேரும் உயிரிழந்து இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இதுபற்றி அவர்களுடைய குடும்பத்தினருடன் அதிகாரிகள் பேசி வருகின்றனர். விபத்திற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. விசாரணை தொடர்ந்து சில நாட்கள் நீடிக்கும் என அதிகாரிகள் கூறினர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், அவசரகால மேலாண் கழகத்தின் அதிகாரிகள் சம்பவ பகுதிக்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். நேற்று (10.10.2025) மதியம் நிலைமை ஓரளவுக்கு சீரானது என கூறப்படுகிறது. எனினும், தொடக்கத்தில் அதிகாரிகள் ஆலைக்கு சென்றபோது, உள்ளே நுழையாதபடி தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருந்துள்ளது. இது நம்முயை சமூகத்தில் ஏற்பட்ட சோக சம்பவம் என மேயர் பிராட் ராக்போர்டு தெரிவித்து உள்ளார்.
பிரான்ஸ் பிரதமராக
ஜெபஸ்டின் மீண்டும் நியமனம்
பாரிஸ், அக்.11- அய்ரோப்பாவில் அமைந்துள்ள நாடு பிரான்ஸ். இந்நாட்டின் அதிபராக இம்மானுவேல் மேக்ரான் செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையிலான அரசின் ஆட்சி காலம் 2027ம் ஆண்டு வரை உள்ளது. அதேவேளை, கடந்த ஆண்டு பிரான்ஸ் நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்தார். இதனை தொடர்ந்து நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.
இதனிடையே, அரசியல் குழப்பம் காரணமாக கடந்த ஓராண்டில் பிரதமராக நியமிக்கப்பட்ட 4 பேர் பதவி விலகியுள்ளனர். இதனால் மேக்ரான் தலைமையிலான அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதேவேளை, அரசியல் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவரவும், நாட்டில் அரசியல் நிலைத்தன்மையை மீண்டும் கொண்டுவரவும் தனது ஆதரவாளரான ஜெபஸ்டின் லெகோர்னுவை பிரதமராக மெக்ரான் அறிவித்தார். அவர் கடந்த செப்டம்பர் 9ம் தேதி பிரதமராக பதவியேற்றார். ஆனால், அரசியல் குழப்பம் காரணமாக பதவியேற்ற 27 நாட்களில் ஜெபஸ்டின் லெகோர்னு பிரதமர் பதவியிலிருந்து விலகினார். செய்தார்.
இந்நிலையில், பிரான்சின் பிரதமராக ஜெபஸ்டின் ஜெபஸ்டின் லெகோர்னு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய அமைச்சரவையை நியமித்து, நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்யுமாறும் புதிய பிரதமர் ஜெபஸ்டினிடம் அதிபர் மேக்ரான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.