ம.கவிதா
மாநில துணைத் தலைவர்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
அன்று (4.10.2025) செங்கை மறைமலை நகர் கொடிக்காடு போல் காட்சி அளித்தது! அது விளம்பரம் அல்ல, விழிப்புணர்வு! அங்கு குழுமியிருந்தது கூட்டம் அல்ல, கொள்கை உணர்வு!!
பட்டொளி வீசிப் பறந்த கழகக் கொடி, முதலமைச்சருக்குத் தந்த அறிவுச்சுடர், கூட்டணிக் கட்சியினர் முழக்கம், நேர்த்தியான திட்டமிடல், நிறைவான தீர்மானங்கள், சுயமரியாதை இயக்கம் ஏற்படுத்திய தாக்கம் பற்றிய கண்காட்சி என்று வரலாற்றுச் சிறப்பைப் பதிவு செய்தது செங்கை மறைமலைநகர் சுயமரியாதை நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு!
விழாவின் மாட்சி என்பது இன்னும் எத்தனை ஆண்டுகள் பேசினாலும் இந்த இன்பம் தீராது எனுமளவில் மாநாட்டில் பங்கேற்ற கருஞ்சட்டைத் தோழர்கள் முகத்திலெல்லாம் பூரிப்பின் ஆர்ப்பரிப்பு! சொல்லோவியம் தீட்டவியலா மனநிறைவு!!
நூறு ஆண்டுகளுக்கு முன் இப்போது இருக்கும் எந்த வசதியும் இல்லாத அந்த நாளில், அதே இடத்தில் 20 ஆயிரம் பேர் கூடினராம், பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி அவர்கள் கூறினார்.
அன்று பெரியார் முன்மொழிந்த தீர்மானங்கள் இன்று சட்டங்களாகி நிற்கின்றன!
‘நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த துண்டு துக்கடாக்கள்’ சமூக வலைத்தளங்களில் தமிழர் தலைவரின் உழைப்பை அறியாமல் அவதூறு பரப்பும் வேளையில்,
கரோனா காலத்தில் களமிறங்கி நாட்டைக் கூர் தீட்டிய ‘ரியல் ஹீரோ’ முதலமைச்சர் தந்தார் ஒரு சல்யூட்.
ஆயுள் உழைப்பைத் தந்த ஆசிரியருக்கும், மானம் பாரா நன்றி பாராதுழைக்கும் அவர்தம் தொண்டர்களுக்கும்….
“நடந்தால் பீடு நடை பேசினால் வீரநடை என்று வாழும் ஆசிரியரிடமிருந்து நாம் இன்னும் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.
“பகுத்தறிவுச் சிந்தனையும் சுயமரியாதை உணர்வும் கொண்ட ஒரு கருப்புச் சட்டைக்காரர் ஓர் ஊரையே முன்னோக்கி இழுத்து செல்லும் ஆற்றல் பெற்றவர்” என்றார்.
எதையும் எதிர்பாராமல் தொண்டாற்றும் கருஞ் சட்டைக்காரர்களுக்கு இதை விட வேறென்ன வேண்டும்?
சுயமரியாதை வேண்டாம் என்று எவரேனும் சொல்ல முடியுமா? சுயமரியாதை இயக்கத்திற்கு உடன் படாதவர்கள் உண்டு, கடன் படாதவர்கள் உண்டா? கேள்வி ஒன்று கேட்டாரே தமிழர் தலைவர் ஆசிரியர்…
“நமது தாத்தா, அப்பா, அம்மா நம்பியதை நாமும் நம்புவது மட்டுமே மூடநம்பிக்கை இல்லை எதைப் பற்றியும் கவலைப்படாமல் பிம்பங்களை நிஜம் என்று நம்பி இங்கே ஓடுவதும் நாமாக உருவாக்கிக் கொண்ட மூடநம்பிக்கை” என்றார் பெரியார் விருது பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள்.
“ஓர் இயக்கம் நூற்றாண்டு வரை இன்றைக்கு நிலைத்து நிற்கிறது, அதன் தத்துவங்கள் ஆட்சி செய்யும் அளவிற்கு இருக்கிறது என்ற சிறப்பு இந்த இயக்கத்தை தவிர வேறு எதற்கும் இல்லை” என்றார் ஒன்றிய மேனாள் அமைச்சர் ஆ. ராசா அவர்கள்.
மூன்றாவது குழலான விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் சூளுரைத்து சுயமரியாதை சூடேற்றி திரும்பினார்கள் என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர்.
தமிழ்நாட்டில் இருக்கும் தலைவர்கள் எல்லாம் தந்தை பெரியாரின் புகழின் சிதறல்கள் என்று அன்று அண்ணா சொன்னதாக ஆசிரியர் சொன்னார், இன்று இந்தக் காட்சிக்கும் மீட்சிக்கும் என எல்லாப் புகழுக்கும் காரணமாகி ஆசிரியரே ஆணிவேராய் நிற்கிறார்.
சுயமரியாதை மாநாட்டைக் கண்ணாரக் கண்டது வாழ்நாள் பேறு! செவி மடுத்த கருத்துகள் எல்லாம் சமூக வாழ்வியல் சாறு!!