காசா பகுதியில், கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி முதல்,
60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கொன்று உள்ளது இஸ்ரேல்!
மதங்கள் பிரிக்கலாம்; ஆனால், நாங்கள் மனங்களால் ஒன்றுபட்டு இருக்கின்றோம்!
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்! வன்முறையைக் கண்டிக்கின்றோம்! மனிதநேயத்தோடு கண்டிக்கின்றோம்!
சென்னை, அக்.9 காசா பகுதியில், கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதிமுதல், இஸ்ரேல், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கொன்று உள்ளது! மதங்கள் பிரிக்கலாம்; ஆனால், நாங்கள் மனங்களால் ஒன்றுபட்டு இருக்கின்றோம். கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்! வன்முறையைக் கண்டிக்கின்றோம்! மனிதநேயத்தோடு கண்டிக்கின் றோம்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
காசா இனப்படுகொலைகளைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் சென்னை எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் நேற்று (8.10.2025) காலை 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.
அவரது கண்டன உரை வருமாறு:
மிகுந்த எழுச்சியோடு, மனிதநேயத்தோடு ஒரு வரலாறு படைக்கக்கூடிய அற்புதமான கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டினுடைய ஒப்பற்ற திராவிட மாடல் ஆட்சியினுடைய நாயகரான முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில், சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
மானுடப் பற்றுள்ள ஓர் இயக்கம்
இந்த இயக்கம் மானுடப் பற்றுள்ள ஓர் இயக்கம்; மானுட உரிமைகளுக்காகப் போராடக் கூடிய இயக்கம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், காசா இனப்படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வார்ப்பாட்டத்திற்குத் தலைமையேற்று இருக்கக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆற்றல்மிகு மாநில செயலாளர் அன்பிற்குரிய தோழர் சண்முகம் அவர்களே,
உலக மக்களுடைய பார்வையை ஈர்க்கக்கூடிய அளவிற்கு…
ஓர் அற்புதமான செய்தியை தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, இந்திய மக்களுக்கு மட்டுமல்ல, உலக மக்களுடைய பார்வையை ஈர்க்கக்கூடிய அளவிற்கு, மிகச் சிறப்பாக எனக்கு முன் உரையாற்றிய நம்முடைய மாண்புமிகு, மானமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே,
இந்நிகழ்வில் கலந்துகொண்டு அடுத்து உரையாற்ற இருக்கக்கூடிய அருமைத் தோழர் உ.வாசுகி அவர்களே, அருமைத் தோழர் செல்வப்பெருந்தகை அவர்களே, செந்திலதிபன் அவர்களே, தோழர் வீரபாண்டியன் அவர்களே, தோழர் தொல்.திருமாவளவன் அவர்களே, தோழர் மகமது அபுபக்கர் அவர்களே, தோழர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களே, தோழர் வேல்முருகன் அவர்களே, தோழர் நித்தியானந்த் அவர்களே, தோழர் பாலசுப்பிரமணியம் அவர்களே, தமிம் அன்சாரி அவர்களே,
இந்நிகழ்வில் சிறப்பாக பங்கேற்றுக் கொண்டி ருக்கக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேனாள் செயலாளர்களும், இந்நாள் தேசிய பொறுப்பாளர்களுமாக இருக்கக் கூடிய அருமைத் தோழர்கள் பாலகிருஷ்ணன் அவர்களே, இராமகிருஷ்ணன் அவர்களே,
புரட்சிகரமான வணக்கம்!
சுயமரியாதை வணக்கம்!!
இந்த மேடையில் அமர்ந்திருக்கக்கூடிய அனைத்து இயக்கங்களைச் சார்ந்த, எதிரில் இருக்கக்கூடிய அருமைத் தோழர்களே, தாய்மார்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் புரட்சிகரமான வணக்கம்! சுயமரியாதை வணக்கம் உங்கள் அனைவருக்கும்.
இந்த நேரத்தில், காலத்தை அறிந்து, உலகத்திற்கு ஒரு பெரிய கொடுமை– மனிதநேயக் கொடுமை நடந்துகொண்டிருப்பதைத் தடுப்பதற்காக ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்து, அனைவரையும் ஒன்று திரட்டி, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் போகிறோம் என்ற ஓர் அருமையான அறிவிப்பையும் தந்திருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் அவர்களையும் அழைத்து, ஏற்பாடு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அனைவரின் சார்பாக அன்பார்ந்த நன்றி! வாழ்த்துகள்!! பாராட்டுகள்!!
குறிப்பாக, தோழர் சண்முகம் அவர்கள், இந்த கண்டனக் கூட்டத்தினுடைய தலைவர். அவருக்கு உறுதுணையாக இருக்கக்கூடியவர்கள் இந்நாள், முன்னாள், எந்நாளும் இருக்கக்கூடிய தோழர்கள் மட்டுமல்ல; இந்த மேடையில் இருக்கின்ற நாங்களும், அந்தக் கொடியை உயர்த்திப் பிடித்து, அந்த உணர்வை, அந்த உரிமையை முழங்குவோம் என்பதுதான் மிக முக்கியமான ஒன்றாகும்.
‘‘காசா இனப்படுகொலையைக்
கண்டிக்கின்ற கண்டன இயக்கம்’’
தோழர்களே, ஒன்றே ஒன்று – ‘‘காசா இனப் படு கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்’’ என்று இங்கே தலைப்பைப் போட்டிருக்கிறார்கள்.
ஆனால், நண்பர்களே! முதலமைச்சர் அவர்கள் இங்கே கலந்துகொண்டு உரையாற்றும்போது, ஒரு சிறிய திருத்தத்தைச் செய்தார்.
என்ன அந்தத் திருத்தம் தெரியுமா?
இது வெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தோடு முடியாது.
ஆகவே, ‘‘காசா இனப்படுகொலையைக் கண்டிக்கின்ற கண்டன இயக்கம்’’ என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
இந்த இயக்கம், இந்த ஒரு நிகழ்ச்சியோடு நின்று விடாது. இதனுடைய எதிரொலி, செயல்திட்டம், தேவை எல்லா இடங்களிலும் பரவும் என்பதுதான் மிக முக்கியமானதாகும்.
அதுமட்டுமல்ல, மனிதநேயம் என்பது மிகவும் முக்கியமானதாகும்.
அய்.நா. சபை என்பது கொலு பொம்மையா?
ஓர் அதிகாரமும் இல்லாமல், வேடிக்கைக் காட்டு கின்ற விந்தை மனிதர்களா?
அய்.நா. சபையில் மனித உரிமை ஆணையம் என்பது இருக்கிறது; அது என்ன தீர்மானம் போட்டிருக்கிறது?
இதோ என்னுடைய கையில் இருக்கிறது, ஆதா ரத்தோடுதான் சொல்கிறேன்.
காசாவில், இஸ்ரேலால் நடத்தப்படுவது
ஓர் இனப்படுகொலையே!
அந்தத் தீர்மானத்தில் மிக முக்கியமாக, காசாவில், இஸ்ரேலால் நடத்தப்படுவது ஓர் இனப்படுகொலை (ஜெனோசைடு) என்று அவர்கள் அறிவித்து, குற்றவாளியாக இஸ்ரேலை நிறுத்தி இருக்கிறது. இஸ்ரேல் மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது.
அப்படிக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அந்தக் குற்றவாளியை விசாரணை செய்து தண்டனை வழங்கப்படவேண்டாமா?
அந்த குற்றவாளிக்கு உலகம் முழுவதும் இருப்பவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக துண்டறிக்கை அடித்திருக்கிறார்கள். கம்யூ னிஸ்ட் தோழர்களும், திராவிடர் கழகத் தோழர்களும் எப்போதும் சிக்கனமாக இருப்போம்; செய்யவேண்டிய செயலைச் சிறப்பாகச் செய்வோம்; சொல்லவேண்டிய கருத்துகளைச் சிறப்பாகச் சொல்வோம்.
60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கொன்று உள்ளது!
அந்தத் துண்டறிக்கையில் உள்ளவற்றைப் படிக்கிறேன், ‘‘காசா பகுதியில், கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதிமுதல், இஸ்ரேல், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கொன்று உள்ளது.’’
இது எவ்வளவு பெரிய கொலைகார நிலை?
உயிர்கள் அல்லவா, மனித உயிர்கள் அல்லவா?
மதங்கள் பிரிக்கலாம்; ஆனால், நாங்கள் மனங்களால் ஒன்றுபட்டு இருக்கின்றோம்.
ஒவ்வொரு நாளும் பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டு வருகின்றனர், இஸ்ரேல் படைகளால்.
இதில் என்ன அரசியல் இருக்கிறது?
நோபல் பரிசு வேட்டையாளரான டிரம்ப், தசா வதாரங்களில் ஒருவர் அவர்.
இங்கே பார்த்தால் ஒரு மாதிரி சொல்வார்; அங்கே பார்த்தால் வேறுவிதமாக சொல்வார். அவரோடு கூடிக் குலாவுகிறவர்கள் இருக்கிறார்கள்; அவர்களை மீற முடியாதவர்கள் இருக்கிறார்கள்.
இந்தக் காலகட்டத்தில், இதை ஒரு மக்கள் இயக்க மாகக் கட்டமைத்து, நாடெங்கும் பிரச்சார இயக்கமாகக் கொண்டு போகவேண்டிய கடமை இருக்கிறது.
அவர்கள், இனப்படுகொலை செய்கிறார்கள் என்கிறபோது, எங்கே நடவடிக்கை?
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நடவடிக்கைக் கிடையாது?
அதேபோல, காசாவிலே இனப்படுகொலை, நட வடிக்கை கிடையாது.
எங்கெல்லாம், யாருக்கெல்லாம் மனித நேயத்திற்கு இடமில்லையோ, அவர்களுக்கெல்லாம் ஆதரவாக இருப்பதுதான், இந்த மக்கள் கூட்டம். இதில் கட்சி இல்லை; ஜாதி இல்லை; வேறுபாடு இல்லை என்பதை நன்றாக உணர்ந்து, இந்த இயக்கத்தை வலுப்படுத்துவோம்; இந்தக் கோரிக்கைகளை வலி யுறுத்துவோம்.
தமிழ்நாட்டு மண்தான், இந்தியாவிற்கு வழிகாட்டக் கூடிய மண்!
சட்டமன்றத்தில், தீர்மானம் நிறைவேற்று வதற்காகச் சொல்லியிருக்கிறார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள். ஒரு மாநில சட்ட மன்றம்தானே என்று நினைக்காதீர்கள்.
இந்த மண் தான் இந்தியாவிற்கு வழிகாட்டக் கூடிய மண்; இந்த மண்தான் சிறப்பான மண்.
எனவே, தமிழ்நாட்டிலிருந்து எது கிளம்பி னாலும், அது வெற்றியாக இருக்கும் என்பது மட்டுமல்ல, உலகத்திற்கே வழிகாட்டக் கூடியதாக இருக்கும்.
அப்படிப்பட்ட இந்தப் பெரியார் மண்ணில், புரட்சி மண்ணில், சிங்காரவேலர் மண்ணில், காமராஜர் மண்ணிலே இந்தக் கண்டன இயக்கம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கி்ன்றது.
மனிதநேயத்தோடு கண்டிக்கின்றோம்!
எனவேதான், கைகோர்த்து நிற்கின்றோம், கண்டன இயக்கமாக இதனைக் கட்டிக் கொண்டு போவோம்!
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்!
வன்முறையைக் கண்டிக்கின்றோம்!
மனிதநேயத்தோடு கண்டிக்கின்றோம்.
இக்கண்டன இயக்கத்திற்கு ஏற்பாடு செய்த தோழர்களுக்கு நன்றி!
இது முதல் கட்டம்தான், முடிவல்ல!
அந்த முதல் கட்டத்தை நாம் தொடங்கியிருக்கின்றோம்; இது வளர வேண்டும். நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.