ஓய்வுபெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கும்போது, அவருக்கு தனிச்செயலாளராக இருந்தவருமான லட்சுமிகாந்தன் பாரதி அய்.ஏ.எஸ் அவர்கள் நூறாம் பிறந்தநாள் காணுவதை அறிந்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொலைப்பேசி வாயிலாக நேற்று (7.10.2025) அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தமிழர் தலைவரின் குரல் கேட்டதும் பெரிதும் மகிழ்ந்தார் லட்சுமிகாந்தன் பாரதி அவர்கள். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நேரில் அவரைச் சென்று சந்தித்து வாழ்த்த விருப்பம் தெரிவித்தபோது, தானே வந்து ஆசிரியர் அவர்களைச் சந்திக்க வேண்டும் என்றார். அதனை அன்போடு மறுத்து, தான் நேரில் வருவதாகத் தெரிவித்தார் ஆசிரியர்.
தனித்தன்மையுடனும், நேர்மையுடனும் தனது பணிக்காலத்தில் செயலாற்றிய பெருமைக்குரியவர் என்று பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து திரு.லட்சுமி காந்தன் பாரதி அவர்களை ஆசிரியர் பாராட்டினார். அலுவலகத்தில் தன்னைச் சந்திக்க வருவோரைக் காத்திருக்க வைக்காமல், எத்தனை மணிக்குச் சந்திக்கலாம் என்பதை அறிவிப்பாக மாட்டி வைத்த பாங்கைப் பொருத்தமாக நினைவுகூர்ந்தார்.