புதுடில்லி, அக். 7- பீகாரில் கடந்த சட்டமன்ற தேர்தலில் கடும் போட்டி நிலவிய 59 தொகுதிகளில் பெரும்பாலான பெண் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
23 லட்சம் பெண்கள் நீக்கம்
டில்லியில், காங்கிரஸ் தலைமையகத்தில் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் உத்தரவுப்படி, வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் பீகாரில் தேர்தல் ஆணையம் மிகப்பெரிய மோசடி செய்துள்ளது.
பீகாரில், சராசரியாக 3 கோடியே 50 லட்சம் பெண் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் சுமார் 23 லட்சம் பெண்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக் கப்பட்டுள்ளன, வரும் சட்டமன்றத் தேர்தலில் அவர்களால் ‘வாக்களிக்க முடியாது. இது, அரசியல் சாசனத்துக்கு எதிரான முடிவு.
கடும் போட்டி
பீகாரில், கோபால்கஞ்ச், சரண், பெகுசாரை,சமஸ்டிபூர், போஜ்பூர், புர்னியா ஆகிய 6 மாவட்டங்களில்தான் பெரும்பாலான பெண் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அந்த மாவட்டங்களில் 59 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
கடந்த 2020ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை பார்த்தால், 59 தொகுதிகளில் 34இல் பா.ஜனதா கூட்டணியும், 25 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளன. அத்தொகுதிகளில் கடும் போட்டி நிலவியது. தற்போது, வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் அதே தொகுதிகளில் தேர்தல் ஆணையம் மோசடி செய்துள்ளது.
இப்போது எங்கள் கேள்விகள் என்னவென்றால், கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மேற்கண்ட பெண் வாக்காளர்கள் அளித்த வாக்குகளும் மோசடியானதுதானா? அந்த போலி வாக்குகளில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான், மத்தியில் ஆட்சி அமைக்க உதவினார்களா?
ஒருபுறம், தேர்தலில் பெண்களை கவர அவர்களது வங்கிக்கணக்கில் பணம் போட்டு விட்டு, மறுபுறம், தேர்தல் ஆணையத்துடன் கைகோர்த்துக் கொண்டு அவர்களின் பெயர்களை பிரதமர் நீக்குகிறார். நாங்கள் கூறிய வாக்குத் திருட்டு அம்பலமாகி விட்டது.இதற்கு எதிராக காங்கிரஸ் நடத்தி வரும் கையெழுத்து பிரச்சாரத்தில், 5 கோடி கையெழுத்துகள் பெறப்படும்.
கடைசி நிமிடத்தில், பெயர்களை சேர்க்கவும், நீக்கவும் சதி நடக்கிறது. அந்த சதியை அம்பலப்படுத்துவோம். பிரதமரும், தேர்தல் ஆணையமும் எவ்வளவு முயன்றாலும் வாக்குத் திருட்டு நடக்க அனுமதிக்க மாட் டோம். இவ்வாறு அவர் கூறினார்.