மறைமலை நகரில் கொள்கை மழை கொட்டியது.சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு மறைமலை நகரில் நடைபெற்றது. உலகத் தலைவர் தந்தை பெரியார் தொடங்கிய இயக்கத்திற்கு நூற்றாண்டு நிறைவு விழா. அவர் மறைந்து அரை நூற்றாண்டுக்கு பின் நடைபெறுகிறது. மாநாட்டின் தொடக்கம் முதல் நிறைவு வரை கொள்கை முழக்கம் ஒன்றே ஒலித்துக் கொண்டிருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பே பெரியார் திடலில் உருவான மாநாட்டிற்கான கரு, அக்டோபர் 4 காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 12 மணி நேரம் கருத்து கன மழையாக பொழிந்தது.
அனைத்திலும் கொள்கை கோலோச்சியது!
கம்பத்தின் உச்சியில் பட்டொளி வீசி பறக்கும் கழகக் கொடியேற்றம்,
தலைவர்கள் நிகழ்த்திய உரை ,
கொள்கை மணக்கும் தீர்மானங்கள்,
அமைக்கப்பட்டிருந்த வரலாற்றுக் கண்காட்சி,
கருத்தரங்கில் அறிஞர் பெருமக்களின் பேச்சு,
இசை ததும்பும் கலை நிகழ்ச்சிகள்,
கருத்தமைந்த நாடகம்,
ஒளிபரப்பப்பட்ட காணொளி,
நேர்த்திமிகு திராவிடர் இன எழுச்சிப் பேரணி,
அறிவுப் புதையல் புத்தகங்கள் வெளியீடு,
சுயமரியாதைச் சுடரொளிகள் படத்திறப்பு
அடர்த்தியான நிகழ்ச்சிகள் அனைத்திலும் கொள்கை கோலோச்சியது. தோழர்களின் உணர்வைத் தட்டியெழுப்பி உணர்ச்சியூட்டியது.
92 வயது நிரம்பிய முதுபெரும் தலைவர், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் இளைப்பாறுதல் இன்றி நிகழ்ச்சிகளில் ஒன்றி இருந்தார். உற்சாகமாய்த் திகழ்ந்தார். மாலை அய்ந்து மணி வரை ஆழ்வார் பேலஸ் அரங்கம் நிரம்பி வழிந்தது.
அதன் பிறகு பொது வெளியில் நடைபெற்ற நிறைவு விழா மாநாட்டில்…
கரவொலி இருந்தது; விசில் சத்தம் இல்லை.
இருக்கைகள் பல்லாயிரக்கணக்கில் இருந்தன. சேதாரம் ஒன்று கூட இல்லை.
பெருங்கூட்டம் இருந்தது; தள்ளுமுள்ளு இல்லை.
தென்றல் நடந்த சுவடு போல் சுமூகமாய், பெரும் மாநாடு எழுச்சியுடன் நடந்து முடிந்தது.
மாநாட்டு நிறைவுரை நிகழ்த்திய தமிழ்நாடு முதலமைச்சர், சமூகநீதிக்கான சரித்திர நாயகர், மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்,
* விழாவிற்குப் பொருத்தமான உரை நல்கினார்கள்.
* ஒவ்வொரு சொல்லையும் கவனமாகப் பயன்படுத்தினார்கள்.
* திராவிட மாடல் என்பதை எளிமையாய் எடுத்துரைத்தார்கள்.
* சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அரசு செய்துள்ள முன்னெடுப்புகளில் சிலவற்றைப் பட்டியலிட்டார்.
* எதிர்ப்புகளைச் சுட்டிக்காட்டி, அதற்கு , ‘செயல்க ளால் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறேன்!’ என்று அவருக்கே உரிய முறையில் எடுத்துச் சொன்னார்.
‘கருப்புச் சட்டைக்காரர்களுக்கு
ஒரு சல்யூட்’
* ‘பகுத்தறிவுச் சிந்தனையும், சுயமரியாதை உணர்வும் கொண்ட ஒரு கருப்புச் சட்டைக்காரர் ஓர் ஊரையே முன்னோக்கி இழுத்துச் செல்லும் ஆற்றல் பெற்றவர்!’ என்று புகழாரம் சூட்டி, ‘கருப்புச் சட்டைக்காரர்களுக்கு ஒரு சல்யூட்’ என்று மெய்ப்பாட்டோடு பேசியது தோழர்களைச் சிலிர்க்கச் செய்தது.
* ‘என்னை வழி நடத்துவது ‘தகைசால் தமிழர் ‘ ஆசிரியர் அய்யா அவர்கள்தான்’ என்றும், ‘திராவிட முன்னேற்றக் கழகம் செல்ல வேண்டிய பாதையை ‘பெரியார் திடல்’ தான் தீர்மானிக்கிறது’ என்பதை மீண்டும் அழுத்தம் திருத்தமாக மாநாட்டில் அறிவித்தார்.
* ‘நடந்தால் பீடு நடை! பேசினால் வீரநடை!’ என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களைப் படம் பிடித்த முதலமைச்சர், ‘அவரிடம் நாம் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்று நெகிழ்ந்து உரையாற்றினார்.
பெரியார் உலகத்திற்கு
ஒன்றரைக் கோடி ரூபாய்!
* ஆசிரியர் அய்யா அவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்பட்டபோது, அதனை அப்படியே இயக்கத்திற்குக் கொடுத்துவிட்டவர் தமிழர் தலைவர் அவர்கள். ‘தகைசால் தமிழர்’ விருதுடன் வழங்கப்பட்ட ரூபாய் 10 லட்சத்தையும் சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகத்திற்கு அளித்துவிட்டார். ‘பெரியார் உலகத்துக்கு’ திராவிட முன்னேற்றக் கழகம் பங்களிக்காமல் இருக்க முடியுமா? என்று வினா எழுப்பிய முதலமைச்சர் அவர்கள், ‘தி.மு.க.வின் 126 சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை- மாநிலங்களவையைச் சார்ந்திருக்கக்கூடிய 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடைய ஒரு மாத ஊதியத்தை – ஒன்றரைக் கோடி ரூபாய் பெரியார் உலகத்திற்கு வழங்குவதாக அறிவித்தபோது மாநாடு பலத்த கரவொலி எழுப்பி உற்சாகமாய் வரவேற்றது.
தனிப்பட்ட நபரை பாராட்டுவது அல்ல; தத்துவத்தைச் செயல்படுத்தும்
ஆட்சியைப் பாராட்டுவது!
* தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் உரை சுருக்கமாக அமைந்தது.
* திராவிடர் கழகத்தின் செயல் திட்டத்தை அறி வித்தார்.
* சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட நோக்கத்தை வெளிப்படுத்தினார்.
* தந்தை பெரியார் உலகமயமாவதை எடுத்து ரைத்தார்.
* ஜப்பானில், சிங்கப்பூரில், லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழங்கியதை நினைவு கூர்ந்தார்.
* திராவிட மாடல் தத்து வத்தைப் பட்டியலிட்டார்.
* மீண்டும் தி.மு.க. ஆட்சி வரக்கூடாது என்று திட்டமிட்டு பணியாற்றும் மனுவின் மைந்தர்களை அடையாளப்படுத்தினார்.
* தந்தை பெரியார் அவர்களுக்கு ஆட்சியைக் காணிக்கையாக்கிய அண்ணாவை நினைவு கூர்ந்தார்.
* தந்தை பெரியார் அவர்களை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்த கலைஞரின் துணிவைச் சுட்டி காட்டினார்.
* தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை ‘சமூகநீதி நாள்’ என்று அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டினார்.
* முதலமைச்சரைப் பாராட்டுவது என்பது தனிப்பட்ட நபரை பாராட்டுவது அல்ல; தத்துவத்தைச் செயல்படுத்தும் ஆட்சியைப் பாராட்டுவது என்று விளக்கினார்.
* தேர்தல் இலக்கு அல்ல என்றும், தத்துவத்தைக் காப்பதும் வளர்ப்பதுமே நோக்கம் என்றும் தெளி வுப்படுத்தினார்.
மாநாட்டுக் கருத்தரங்கின் நிறைவுரையாக தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி உரையாற்றினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள், கனிமொழி அவர்களுக்குக் கொள்கை வழி செறிவானதோர் அறிமுகத்தை வழங்கினார்கள்.
கனிமொழி கருணாநிதி எம்.பி., உரை
*கனிமொழி அவர்களின் உரையில் வரலாற்று பாடமாக விரிந்தது.
*தந்தை பெரியார் அவர்களின் சாதனைகளைப் பட்டியலிட்டார்.
* ஒன்றிய ஆட்சியில் இருப்பவர்கள் அறிவியல் மனப்பான்மைக்கு எதிராக நடந்து கொள்வதை வேதனையுடன் வெளிப்படுத்தினார்.
* திராவிட இயக்கத்தின் சாதனைகளைப் பட்டி யலிட்ட அவர், இன்னும் போக வேண்டிய தூரம் இருக்கிறது என்பதையும் நினைவூட்டினார்.
* பெண் கல்வி வளர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டி பெருமை கொண்ட அவர், மூடநம்பிக்கைகளைக் களைவதிலும் கவனம் கொள்ள வேண்டும் என்றார்.
மனிதநேயமே தந்தை பெரியாரின் அடிப்படைக் கொள்கை!
திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா அவர்கள், வரலாற்றுச் செய்தி களை அடுக்கினார். சுயமரியாதை இயக்கத்தின் சாத னைகளைப் பட்டியலிட்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் திருமாவளவன், பண்பாட்டுப் படையெடுப்பைக் காட்சிப்படுத்திக் காட்டினார். ‘திராவிடர் கழகத் தொண்டனாக – களப்போராளியாகவே இருந்திருக்கலாம்’ என்று மனம் திறந்து பேசினார். மனிதநேயமே தந்தை பெரியாரின் அடிப்படைக் கொள்கை என்றுரைத்தார்.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை நிரல் படுத்தி விளக்கினார்கள். ‘சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு’ என்பதையும் எடுத்துரைத்தார்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் நிகழ்த்திய தலைமையுரை சுயமரியாதை இயக்கத்தைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்திருந்தது. சுயமரியாதை இயக்கத்தின் சாதனைகளை நினைவு கூர்ந்தார். ஜாதி வெறி, மத வெறி, பெண்ணடிமைத்தனம் ஒழியும் வரை சுயமரியாதை இயக்கம் இருக்கும் என்றார்.
சுயமரியாதை இயக்கம் தேர்தலுக்குப் போகாமலே அரசியல் சட்டத்தைத் திருத்திய பெருமை பெற்றது என்ற வரலாற்றை எடுத்துரைத்தார்.
வேறுபட்ட இரண்டு தத்துவத்திற்கு இடையே நிகழும் போராட்டம் என்பதை விளக்கினார்.
சுயமரியாதை இயக்கம் சாதித்தது என்ன? என்று வினா எழுப்பி, தோளில் துண்டு போடவும், காலில் செருப்பு அணியவும், நாற்காலியில் அமரவும் உரிமை பெற்று தந்த இயக்கம் என்றார்.
தொற்றுநோய் போக்கும் மருந்தாக சுயமரியாதை இயக்கம் தொண்டாற்றுகிறது!
சுயமரியாதை இயக்கம் என்பது மருத்துவமனை போன்றது என்று உவமை மூலம் உணர்த்திய அவர், தொற்றுநோய் போக்கும் மருந்தாக சுயமரியாதை இயக்கம் தொண்டாற்றுகிறது என்றார் .
இந்திய வரலாற்றில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு மூன்று இயக்கங்கள் தோன்றின என்று கூறி அந்த வரலாற்றை கோடிட்டுக் காட்டினார் .
சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பட்டியலிட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், உடன்படாதவர்கள்உண்டு; இயக்கத்திற்கு கடன்படாத வர்கள் உண்டா? என்று வினா தொடுத்தபோது கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது. சுயமரியாதை இயக்கம் பல நூற்றாண்டுகளைப் புரட்டிப் போட்ட இயக்கம் என்பதற்குச் சான்றுகளை அடுக்கினார்.
அரசியல் சட்ட முகப்புரையை வரிசைப்படுத்தி பாடம் நடத்தினார். அது சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை என்றார். அதற்கு எதிரானது மனுதர்மம் என்று விளக்கினார்.
சுயமரியாதை இயக்கம் என்ற
மய்யப் புள்ளியைச் சுற்றியே…
தேவதாசி ஒழிப்பு, குலக் கல்வி திட்டம் ஒழிப்பு, சமத்துவம், சமூக நீதி வழங்கல், பெண்களுக்குச் சொத்துரிமை, இவற்றுக்காகப் பாடுபடுவது சுயமரி யாதை இயக்கம் என்பதை வரலாறு தெரியாதவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். கழகத் தலைவர் ஆசிரியர் அய்யாவின் உரை முழுவதும் சுயமரியாதை இயக்கம் என்ற மய்யப் புள்ளியைச் சுற்றியே அமைந்தது.
திராவிடர் கழகத்தின் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கம் சுயமரியாதை இயக்கம் மாமருந்தாக திகழ்வதை மக்கள் நெஞ்சில் பதித்தது.
மானம் காக்கத் துடிக்கும் இனத்தின் உணர்வை வெளிப்படுத்திய மாநாடு!
மறைமலைநகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு வரலாற்றில் நிலைத்து இடம் பெறும் பெருமையுடையதாகும். சில அரசியல் கட்சிகளின் மாநாடுகளில் ஓங்கி ஒலிக்கும் வெற்றுக் கூச்சல்கள் இங்கு இல்லை; சவால்கள் இல்லை; மலிவான தாக்குதல்கள் இல்லை; உண்மைப் போல் ஒப்பனை செய்யப்பட்ட பொம்மைகள் இல்லை; தத்துவம் மட்டுமே பேசப்பட்ட மாநாடு. கொள்கையை மட்டுமே முன்னிறுத்திய அறிவார்ந்த மாநாடு. மானம் காக்கத் துடிக்கும் இனத்தின் உணர்வை வெளிப்படுத்திய மாநாடு. கருத்து மழை பொழியட்டும் என்று மறைமலைநகரில் கரு மேகங்கள் காத்திருந்த விந்தையான மாநாடு. சரித்திரத் சாதனைகள் படைத்த சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு வரலாறு படைத்ததில் வியப்பென்ன?