புதுடில்லி, அக்.4 இருசக்கர வாகன உற்பத்தியாளர்களான பஜாஜ், ஹீரோ மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் கொலம்பியாவில் சிறப்பாக செயல்படுவதாக மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தென் அமெரிக்காவில் நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கொலம்பியாவில் இஅய்ஏ பல்கலைக்கழகத்தில் இன்றைய எதிர்காலம் என்ற தலைப்பில் ராகுல் உரையாற்றினார்.
இந்நிலையில் ராகுல்காந்தி பஜாஜ் நிறுவனத் தின் பல்சர் பைக் முன் நின்று ஒளிப்படம் எடுத்துள்ளார். இந்த படத்தை தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் ராகுல்,‘‘பஜாஜ், ஹீரோ மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் கொலம்பியாவில் சிறப்பாக செயல்படுவதை பார்ப்பதற்கு பெருமையாக இருக்கிறது. இந்திய நிறுவனங்கள் சலுகைகள் மூலமாக அல்ல – புதுமையால் வெல்ல முடியும் என்பதை இது காட்டுகின்றது. சிறந்த பணி” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரீல்ஸ் மோகம்
‘வந்தே பாரத்’ ரயில் மோதி 4 மாணவர்கள் பலி
பாட்னா, அக்.4 பீகாரில் ஜோக்பானி – தனாபூர் இடையே அதிவேகமாக இயங்கி வரும் வந்தே பாரத் ரயில், நேற்று (அதிகாலையில்) பூர்னியா – கஸ்பா ரயில் நிலையங்களுக்கு இடையில் வந்தபோது ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இளம் வயது மாணவர்கள் அய்ந்து பேர் ரயில் பாதையில் ஆபத்தான முறையில் நின்று ரீல்ஸ் காட்சிப் பதிவு எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த ரயில் அவர்கள் மீது மோதியது.இந்த விபத்தில் 5 மாணவர்களும் படுகாயமடைந்தனர். அவர்களை ரயில்வே காவல்துறையினர் உடனடியாக மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மூன்று பேரும், சிகிச்சை பலனின்றி ஒருவரும் என மொத்தம் நான்கு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.மற்றொரு மாணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிவேக ரயில் பாதையில் ரீல்ஸ் எடுக்க முயன்றதால் ஏற்பட்ட இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.