பாட்னா, அக்.4 பீகார் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆளும் அய்க்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சஞ்சீவ் குமார், எதிர்க் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத் தில் (ஆர்ஜேடி) இணைந் துள்ளார். ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சிக்கு தாவிய நிகழ்வு பீகா ரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் தேர்தல்
பீகாரில் நிதிஷ் குமாரின் அய்க்கிய ஜனதா தளம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. நிதிஷ் குமார் முதலமைச்சராக உள்ளார். இவரது கட்சி பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக நிதிஷ் குமார் பீகாரின் முதலமைச்சராக நீடித்து வருகிறார். எனவே எதிர் வரும் தேர்தலிலும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று தீவிரமாக முயன்று வருகிறார்.
எதிரணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் கைகோர்த்துள்ளன. பீகார் அரசி யல் களம் தகித்து வருகிறது. பீகார் மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பீகாரில் ஆளும் அய்க்கிய ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர் சஞ்சீவ் குமார் அக் கட்சியில் இருந்து விலகி ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் நேற்று (3.10.2025) இணைந்தார். மாநிலத் தலைவர் மேன் கானி லால் மண்டல் உள்ளிட்டோர் முன்னிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சில் அவர் தன்னை இணைத்துக்கொண்டார்.
சஞ்சீவ் குமாரின் வருகை ககாரியா மாவட்டத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியை மேலும் வலுப்படுத்தும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி தெரிவித்துள்ளார். மேனாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி பிரசாத் முன்னிலையில் தான் சஞ்சீவ் குமார் இணைய இருந்தார். மோசமான வானிலை காரணமாக தேஜஸ்வி ஹெலிகாப்டரில் வரமுடியாததால் காணொலி மூலமாக நிகழ்வில் பங்கேற்றார் தேஜஸ்வி.
பின்னடைவு
பீகார் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் சஞ்சீவ் குமார் ஆளும் அய்க்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகி யிருப்பது அக்கட்சியிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் எதிர்க்கட்சியான ஆர்ஜேடிக்கு பலம் கூடியுள்ளதாக கருதப்படுகிறது.
கடந்த 2020 சட்டமன்றத் தேர்தலில், சஞ்சீவ் குமார், ஆர்ஜேடியின் திகம்பர் பிரசாத் திவாரியை 951 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சஞ்சீவ் குமார் வெளிப்படையாகப் பேச்சுக்கு பெயர் பெற்றவர். விவசாயிகளின் உரிமைகள் மற்றும் சாலை மற்றும் பாலம் கட்டுமானத் திட்டங்களில் நடந்த முறைகேடுகள் போன்ற பிரச்சினைகள் தொடர்பாக கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் தனது சொந்த என்.டி.ஏ அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடங்கப்பட்டபோது ஒன்றிய அரசை அவர் விமர்சித்திருந்தார். பூமிஹார் ஜாதியைச் சேர்ந்த சஞ்சீவ் குமார், ஆர்ஜேடியில் இணைந்தது, பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்விக்கு ஒரு ஊக்கமாக கருதப்படுகிறது.