சென்னை அக்.4- கரூர் துயர சம்பவத்தில் பொறுப்பேற்காத விஜய்க்கு தலைமைப்பண்பு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல அய்.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழுவை நியமித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது.
வழிகாட்டு நெறிமுறை
இந்த சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் நடத்தும் ‘ரோடு ஷோ’வுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும், அதுவரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என். செந்தில்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட்ஜெனரல் ரவீந்திரன், ‘வழிகாட்டு நெறிமுறை கள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி வழங் கப்படாது ‘ என்றார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் அரசு வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா, ‘கரூரில் 41 பேர் பலியான வழக்கில் புலன் விசாரணை சரியான பாதையில் செல்கிறது’ என்றார்.
ஆழ்ந்த இரங்கல்
விசாரணையின்போது நீதிபதி, ‘இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித் துக்கொள்வதாக தெரிவித்தார். பின்னர், ‘கரூர் சம்பவம் தொடர்பான காட்சிப்பதிவுகளை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. இந்த வழக்கில் த.வெ.க.வைச் சேர்ந்த 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஓரிரு நிபந்தனைகளை தவிர பெரும்பாலான நிபந்தனைகள் மீறப்பட்டு உள்ளதாகவே தெரிகிறது.
கரூர் பிரசாரத்துக்கு சென்ற போது விஜய் பயணித்த பேருந்து மோதி ஒரு விபத்து ஏற்பட்டதாக காட்சிப்பதிவுகள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக தனியாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்பட்டு உள்ளதா? வழக்குப்பதிவு செய்ய காவல்துறையினருக்கு என்ன தயக்கம்?. இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யாவிட்டால் காவல்துறையினரை மக்கள் எப்படி நம்புவார்கள்?.
பிரசார வாகனம்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் களுக்கு காவல்துறையினர் கருணை காட்டுவதை ஏற்க முடியாது. விபத்து தொடர்பாக தனியாக வழக்குப்பதிவு செய்து, பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா?’ என்றார்.
பின்னர், இந்த விவகாரத்தை உயர்நீதிமன்றம் கண்மூடி வேடிக் கை பார்த்து கொண்டிருக்காது’ என நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
‘கலவரம் நடப்பது போல் நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். அனைத்தையும் காவல்துறை அனுமதித்துள்ளது’ எனக்கூறி அதிருப்தியை வெளிப்படுத்திய நீதிபதி, ‘இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அரசு வக்கீல், ‘த.வெ.க பிரசாரத்துக்கு அவர்கள் கேட்ட இடத்தைத்தான் ஒதுக்கினோம். பிரசாரத் துக்கு 11 நிபந்தனைகள் விதிக் கப்பட்ட நிலையில் இரு நிபந்த னைகளை மட்டும் த.வெ.க. கடைபிடித்தது. மீதமுள்ள நிபந்தனைகள் மீறப்பட்டன.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதே இடத்தில் பிரசாரம் செய்துள்ளார். த.வெ.க நிகழ்ச்சிக்கு 559 காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டனர். டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி திடீரென செப்டம்பருக்கு மாற்றப்பட்டு உள்ளது’ என விளக்கம் அளித்தார். விசாரணை முடிவில் நீதிபதி,’கரூரில் 41 பேர் பலியான வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல அய்.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில், நாமக்கல் காவல்துறை கண்காணிப்பாளர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டார்.
வழக்கு தொடர்பான ஆவணங்களை உடனடியாக சிறப்பு புலனாய்வு குழு வசம் ஒப்படைக்க, கரூர் காவல்துறையினருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
விஜய்க்கு கண்டனம்
வழக்கு விசாரணையின் போது நீதிபதி, ‘கரூர் சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் பலியான நிலையில், கட்சித்தொண்டர்களை, ரசிகர்களை பொறுப்பற்ற முறையில் கைவிட்டு விட்டு ஓடிய த.வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தலைமைப்பண்பு இல்லை. அவர்கள் சம்பவத்துக்கு பொறுப்பேற்கவும் இல்லை என நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
மேலும் நீதிபதி, ‘கரூர் விபத்து மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு கோர்ட்டு இதை கண்மூடி வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது, த.வெ.க. தனது பொறுப்பை தட்டிக்கழிக்கமுடியாது’ என்றும் கருத்து தெரிவித்தார்.
இதற்கிடையே நாமக்கல்லில் விஜய் பிரசாரத்தில் ஈடுபட்ட போது தனியார் ஆஸ்பத்திரி மீது தாக்குதல் நடத்தியதாக கூறி மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சதீஷ்குமார் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார் விசாரித்தார்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஏ.முருகவேல், ‘மனுதாரர் எந்த குற்றமும் செய்யவில்லை. அரசியல் காரணங்களுக்காக மனுதாரரை வழக்கில் சேர்த்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த ஒரே காரணத்துக்காக மனுதாரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என வாதாடினார்.
தள்ளுபடி
காவல்துறை சார்பில் ஆஜரான வக்கீல் சந்தோஷ், ‘காவல்துறையின் நிபந்தனைகளை முறையாக பின்பற்றுவதாககூறி மனுதாரர் தான் அனுமதி பெற்றார். அவரது கட்சியினரின் செயல்பாடுகளால் 5 லட்சம் ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட் டுள்ளது. பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக மேலும் 8 வழக்குகள் மனுதாரருக்கு எதிராக பதிவு செய்யப் பட்டுள்ளது’ என்றார்.
மேலும், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்களையும் அவர் தாக்கல் செய்தார். இந்த ஒளிப்படங்களை பார்த்த நீதிபதி. ‘கட்சியினர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், எதுவும் தெரியாது என மனுதாரர்எப்படி கூறலாம்?. கட்சியினரை கட்டுப்படுத்த தெரியாதா?. பொறுப்புடன் செயல்பட வேண்டாமா? என சரமாரியாக கேள்வி எழுப்பினார். பின்னர், முன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சி.பி.அய்.க்கு
மாற்றக்கோரிய மனு
இதேபோல் கரூரில் 41 பேர் பலியான வழக்கை சி.பி.
அய்.க்கு மாற்றக்கோரி பா.ஜனதா கவுன்சிலர் உமா ஆனந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள பா.ஜனதா தரப்பில் முறையிடப்பட்டது.
அதற்கு நீதிபதிகள் வேல்முருகன், அருள்முருகன் அடங்கிய அமர்வு, மதுரை உயர்நீதிமன்றக் கிளையை அணுக உத்தரவிட்டனர்.