ஆர்.எஸ்.எஸ்.க்கு மாணவர்களைத் திரட்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு எதிராக, அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான முறையில், ஒரு போட்டி அரசை நடத்துவதற்கு என்றே நாட்டை நாசமாக்கிக் கொண்டுள்ள, பாசிசத்தை நோக்கி மெல்ல, மெல்ல நகர்ந்து கொண்டுள்ள நரேந்திர மோடி அரசால், தமிழ்நாட்டு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி வந்த நாள் முதல், இன்று வரை போட்டி அரசாகச் செயல்படுவது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் கலகத்தை உருவாக்கவும், ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை அதில் புகுத்தவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு ஆள் பிடிக்கும் பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் என்பது பரம ரகசியம்.

ஆளுநர் மாளிகையைப் பராமரிப்பது, அங்கு பணிபுரியும் காவல்துறை உள்ளிட்ட ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் இதரச் செலவுகள் அனைத்தும் மேற்கொள்வது மாநில அரசுதான்.

ஆளுநர் நடத்துகின்ற நிகழ்ச்சிகள், தேநீர் விருந்துகள் உட்பட அனைத்துச் செலவுகளையும் மாநில அரசு ஏற்கின்றது.

ஏன் ஆளுநருக்குச் சம்பளத்தை மட்டுமல்ல, அவர் ஊர்,ஊராகச்சுற்றுகின்றார் அல்லவா? அதற்கான செலவினங்கள், பாதுகாப்புப் பணிகள் உள்ளிட்ட அனைத்துச் செலவினங்களையும் மாநில அரசே மேற்கொள்கிறது என்பதையும் வாசகர்கள் நன்கு அறிவார்கள்.

சென்னையில் உள்ள உயர் கல்வி நிறுவனமான அய்.அய்.டியில் ‘திங்க்’ என்கின்ற அமைப்பின் சார்பில், இரு நாட்கள் மாநாடு நடைபெறுகிறது.

இம்மாநாட்டில் மாணவர்களைப் பங்கேற்கச் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அம்மாநாட்டை ஆளுநர் ரவி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார் (20.9.2025)

அம்மாநாட்டில் ‘திங்க்’ அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அக்க்ஷவர்தன் என்பவரும், ஏ.பி.வி.பி. என்று அழைக்கப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவு) அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளர் ஆஷிஷ் சவுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

அம்மாநாட்டில் பாரதத்திற்குப் புதுமையான உருவாக்கங்கள், உலகை வழி நடத்துங்கள் என்பது தலைப்பாகும்.

மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றிய ஆளுநர் ரவி, தான் ஒரு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரச்சாரப் பீரங்கி என்பதனை மெய்ப்பிக்கும் வகையில், கீழ்க்கண்டவாறு உரையாற்றி உள்ளதாக நாளேடுகள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அவற்றின் சுருக்கம் வருமாறு,

  1. சுதந்திரத்திற்குப் பின்னர் நமது பாடத்திட்டங்களில், பாரதத்தின் உண்மையான சிந்தனைகள் புறக்கணிக்கப் பட்டன.
  2. காலனித்துவச் சிந்தனையால் கல்வி பாதிக்கப் பட்டது.
  3. 5000 ஆண்டுகள் பழமையான நமது பாரத நாடு ஆன்மிகம், கலாச்சாரம், வேத சிந்தனைகள், தர்மம் என்ற அடிப்படையாய் உருவானது.
  4. அனைவரும் ஒரே குடும்பம் என்பதை வலியுறுத்தியது.
  5. சுதந்திர இந்தியாவில் மொழி, ஜாதி, இனம்,மதம் போன்றவற்றால் பிரச்சினையை ஏற்படுத்தினர்.
  6. நரேந்திர மோடி ஆட்சி உருவான பின்னர்தான் நாட்டில் வன்முறை குறைந்துள்ளது.
  7. ஆப்ரேஷன் சிந்தூர் போன்ற நடவடிக்கைகள் இதற்கு முன்பு இருந்த ஆட்சியாளர்களால் செய்திருக்கவே முடியாது.
  8. இந்தியாவில் பிளவுகள் ஏற்படாமல் இருக்க, மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

மேற்கண்டவை ஆளுநர் ரவி மாணவர்கள் மத்தியில் ஆற்றிய உபதேசமாகும்.

அவரது உரை உள்நோக்கமுடையது. தமிழ்நாட்டு மக்கள் வழங்கி வரும் வரிப் பணத்தைக் கொண்டு கூலி (சம்பளம்) பெற்று வரும், மோடியின் கைக்கூலியான ஆளுநர் ரவி, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை உமிழ்ந்து வருகின்றார்.

நாம் ஒருமுறை அல்ல, பலமுறை பகிரங்கரமாகக் கூறிவந்துள்ளோம், ஆளுநர் ரவியே! ஆளுநர் பதவியைத் துறந்து, ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பகிரங்கமாகச் செயல்படு,

பாரதிய ஜனதா கட்சியின் ஆகப்பெரும் தலைவராகப் பொறுப்பேற்றுச் செயல்படு, ஆட்சேபனை இல்லை என்று கூறி வருகின்றோம்.

நாம் மட்டுமல்ல, ஜனநாயகத்தில், அரசியல் சட்டத்தில் நம்பிக்கை உடையோர் அனைவரும் இக்கருத்தை மிக வலிமையாக, வலியுறுத்திக் கூறி வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் சின் கைக்கூலியான ஆளுநர் ரவியிடம் நேர்மை குறித்துப் பேசிப் பயனில்லை. நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்தான், அது இயற்கையாக அமைந்தது.

வாலை நிமிர்த்த முடியாது என்பதற்காக, நாய் பைத்தியம் பிடித்து, அனைவரையும் கடித்து, குதறும் என்றால், அத்தகைய நாயை அனுமதித்தால் அது முட்டாள்தனம் அல்லவா?

நாய்க்குச் சோறு போட்டு வளர்த்தோம் என்பது உண்மைதான். ஆனால் அதற்கு இப்போது பைத்தியம் மிகவும் மோசமாகிவிட்ட பின்னரும், நாம் அதற்குச் சோறு போடத்தான் வேண்டுமா? அவ்வாறு செய்தால் அது அநீதியல்லவா! இத்தகைய அநீதியை நாம் செய்தால் ஊரார் ஏற்றுக்கொள்வார்களா?  பைத்தியம் பிடித்த நாய்க்குச் சோறு போட்டு வளர்க்கிறான் பாவி என, ஊர் மக்கள் நம்மைக் காரித் துப்ப மாட்டார்களா?

சுதந்திரத்திற்குப் பின்னர் பாரதத்தில் உண்மையான சிந்தனைகள் புறக்கணிக்கப்பட்டனவாம்,

உண்மையான சிந்தனைகள் என்ன என்பதனை ஆர்.எஸ்.எஸ்.ரவி பகிரங்கமாக, வெளிப்படையாகப் பேசத் தயாரா? உள்ளொன்று வைத்து, புறம் ஒன்று பேசுபவரிடம் உறவு கொள்ளலாகாது என்று, எங்கள் தமிழ் மூதாட்டி அவ்வையார் எங்களுக்குப் பாடம் நடத்திவிட்டுச் சென்றுள்ளார் என்பது ரவிக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை என்பது மட்டுமல்ல, அதனை தெரிந்து கொள்ளவும் விரும்ப மாட்டார்.

சுதந்திரத்திற்குப் பின்னர் அல்ல, அந்நியர்கள் ஆட்சிக் காலத்திலேயே, ரவியின் ஆர்.எஸ்.எஸ். கொள்கை நிராகரிக்கப்பட்டது.

உங்களின் வேத மந்திரமான நான்கு வர்ணக் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அனைவருக்கும் படிப்பதற்கான உரிமை உண்டு என்பது நிலைநிறுத்தப்பட்டது.

அவை குறித்து பகிரங்கமான விவாதத்திற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், அதன் அடிவருடிகளான ரவி போன்ற பித்தலாட்ட, பிற்போக்குக் கும்பலும் முன் வருவார்களா?

காலனியச் சிந்தனை குறித்து ரவிக்கும், அவரது தலைமை பீடமான நாக்பூர் கும்பலுக்கும் பேசுவதற்குக் கிஞ்சிற்றும் அருகதை இல்லை. காலனிய ஆதிக்கத்திற்குத் துணை போன, வெஞ்சாமரம் வீசிய கும்பல், காலனி ஆதிக்கத்திற்குக் குடை பிடித்து, அவர்கள் கால்களைக் கழுவி சேவகம் புரிந்த கும்பலா காலனி ஆதிக்கச் சிந்தனை குறித்துப் பேசுவது?

5000 ஆண்டு கால பழமைச் சிந்தனைகள் யாரைப் பாதுகாத்தது? யாரைப் புறந்தள்ளியது என்பது கூடவா தெரியாமல் மக்கள் உள்ளனர்?

கடவுளை நம்புகிறவனை முட்டாள் என்று பகிரங்கமாகக் கூறுவதற்கான துணிச்சலும், ஆற்றலும் கொண்ட பெரியார் வாழ்ந்த மண் மட்டுமல்ல, அத்தத்துவம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அய்ம்புலன்களால் உணர முடியாத எதனையும் ஏற்க மாட்டோம் என்று பகிரங்கமாகப் பறைசாற்றும் கம்யூனிஸ்டுகள் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற மண், எங்கள் மண்.

மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியத்தையும் ஏற்றுக் கொண்டுள்ள மண், எங்கள் மண்.

சுயமரியாதை, கம்யூனிஸ்ட் இயக்கங்கள் நூற்றாண்டு கண்டது மட்டுமல்ல, என்றென்றும் அழியா இயக்கங்கள் மட்டுமல்ல, என்றென்றும் நீடித்து, நிலைத்து நிற்கக்கூடியது. ஏனெனில் அவை முட்டாள்தனமான, மூடநம்பிக்கைகளுடையது அல்ல, மாறாக விஞ்ஞானத் தன்மை கொண்டது. விஞ்ஞானம் வளரும், வளர்ந்து கொண்டே இருக்கும்.

விஞ்ஞானம் வளர்வது போன்று, மார்க்சியம் வளரும். பெரியாரிசம் வளரும். அதன் வளர்ச்சிகளை ரவியின் கத்திரிக்கோல் கொண்டு கத்தரித்து விட முடியாது.

மனிதனைக் கடவுள்தான் படைத்தான் என்றால், கடவுள் பொதுவானவன் என்பது உண்மையானால், கடவுள் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பது உண்மையானால், சமூகத்தில் ஏன் இந்த வேறுபாடுகள்? ஏன் இந்த ஏற்றத்தாழ்வுகள்? அது விதி என்றால் அத்தகைய இழிவான விதியை மாற்றியமைப்பதுதான் மார்க்சியம். அந்த விதியை மாற்றி அமைப்பதுதான் பெரியாரியம்.

நாங்கள் பிரம்மாவின் நெற்றியில் இருந்தோ, தோளில் இருந்தோ, தொடையில் இருந்தோ, பாதத்தில் இருந்தோ பிறக்கவில்லையடா முட்டாள்களே !

எங்களைப் பத்து மாத காலம் வயிற்றில் சுமந்து, அவளது கருவறையில், அவளது ரத்தத்தை உணவாகக் கொண்டு மெல்ல, மெல்ல வளர்ச்சி பெற்று, குழந்தையாய் இம்மண்ணில் பிறந்தோம்.

மதம் அறியா, ஜாதி அறியா எங்களை, மதம் என்ற பெயரால், ஜாதி என்ற பெயரால் பிளவுபடுத்தி, மோதவிட்டு வடிகின்ற ரத்தத்தை ருசி பார்த்த, பார்த்துக் கொண்டுள்ள கும்பல், எக் கும்பல் ரவியாரே?

ஆபரேஷன் சிந்தூர் போன்ற நடவடிக்கைகளை இதற்கு முன்னர் இருந்த ஆட்சியாளர்கள் செய்திருக்க முடியாது என்று ஆணவத்தோடும், அகம்பாவத்தோடும் கூறுகின்ற ரவியே, உனக்குத் தெரியுமா? சீனா, இந்தியா யுத்தம். பாகிஸ்தான், இந்தியா யுத்தம்,வங்கதேசம் உருவானது எவையும் உனக்குத் தெரியாது என்பது மட்டுமல்ல, தெரிந்தாலும் அவைகளை தடித்த ஜமுக்காளம் கொண்டு மூடி மறைக்கத்தான் தெரியும்.

நாட்டின் விடுதலைக்காக, நாட்டு மக்கள் ஒன்றுபட்டுப் போராடி வெற்றி கண்டது போல், நாட்டிற்கு ஆபத்து என்றால், நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு, ஓர் அணியாய் அணிவகுத்து நின்றது உனக்குத் தெரியாது, தெரிந்து கொள்ளவும் மாட்டாய்.

பாகிஸ்தானுக்கும், இந்தியாவிற்கும் நிகழ இருந்த போரை நான்தான் தடுத்து நிறுத்தினேன் என்று ஒரு முறையல்ல, 50க்கும் மேற்பட்ட முறை திரும்பத் திரும்ப அமெரிக்காவின் அடாவடியும், நரேந்திர மோடியின் உயிருக்கு உயிரான நண்பருமான ட்ரம்ப் கூறி வருவதை, உன் எஜமான் மோடி வாய் திறந்து கண்டிக்காததன் ரகசியம் என்ன?

இந்தியாவில் மத ரீதியாக, ஜாதி ரீதியாக, மொழி ரீதியாகப் பிளவுபடுத்துவது எத்தகைய அயோக்கியக் கும்பல் என்பதனை நாட்டு மக்கள் அறிந்திடாதவர்கள் அல்ல!

நாட்டின் விடுதலைக்குத் தலைமை தாங்கிய, நாட்டு மக்களை ஒருங்கிணைத்த, தேசப்பிதா எனப் போற்றப்பட்ட  காந்தியாரை நாடு விடுதலை பெற்ற அய்ந்து மாதம் 15 நாட்களில் படுகொலை செய்த கொடியவன் யாரடா? (நாடு விடுதலை பெற்றது 1947 ஆகஸ்ட் 15, காந்தி படுகொலை செய்யப்பட்டது 1948 ஜனவரி 30)

கொடியவன் கோட்சேவிற்குக் கோவில் கட்டுவீர்கள், அவன் மிகச்சிறந்த தேச பக்தன் எனப் பாராட்டிப் பேசுவீர்கள், அவனுக்குத் துணை நின்ற, படுகொலைக்குச் சதித் திட்டம் தீட்டிய சாவர்க்காருக்கு நாடாளுமன்றத்தில் படம் வைத்து பூஜிப்பீர்கள், நீங்களா மத மோதல் பற்றிப் பேசுவது?

நாட்டை மத ரீதியில், ஜாதி ரீதியில், மொழி ரீதியில் பிளவுபடுத்தும் புல்லுருவிகள் யார்? கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு சேவகம் செய்து, அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் அடிமைகளே நீங்களா மாணவச் செல்வங்களுக்கு உபதேசம் செய்வது?

தமிழ்நாட்டு மாணவர்களே ! இளைஞர்களே! என்ன செய்து கொண்டுள்ளீர்கள்?

வெந்ததைத் தின்று, விதி வந்தால் சாவோம் என்பதை நம்பும் முடிவிற்கு வந்து விட்டீர்களா?

ஒருபோதும் வர மாட்டீர்கள் ! மாவீரன் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் வாரிசுகளே ! மார்க்ஸ், பெரியார், அம்பேத்கரின் போதனைகளைப் பெற்ற கொள்கை மறவர்களே !

வீர சிங்கங்களே ! நூற்றாண்டு கண்ட போர்க்குணம் மிக்கப் போர் மறவர்களே ! உங்களின் உணர்வை வெளிப்படுத்துவீர் !

எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல, எதற்காக வாழ்ந்தோம் என்பது முக்கியமாகும்.

ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு ஆள் சேர்க்கும் பணியை, அதுவும் மாணவர் செல்வங்களை மூளைச் சலவைச் செய்யும் முட்டாள்கள் நடமாட அனுமதிக்கலாமா? கரங்கள் உயர வேண்டாமா? கருப்புக் கொடிகள் எங்கெங்கும் பறந்திட வேண்டாமா?

அனுமதியோம்! அனுமதியோம்! ஆர்எஸ்எஸ் சை அனுமதியோம் என்று போர்க்குரல் எழுப்ப வேண்டாமா? போர்ப்படைகள், கொள்கைப் படைகள் ஒன்றிணைந்து போர்க்குரல் விண்ணைப் பிளக்க வேண்டாமா? இனியும் ஏன் தாமதம்?

– கிராமத்தான்

(நன்றி: ‘ஜனசக்தி’ செப்.28– அக்.4, 2025)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *