சென்னை, அக்.2- ரூ.8428.50 கோடி மதிப்பில் ஓசூர் மாநகராட்சி, தருமபுரி மற்றும் கிருஷ் ணகிரி நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 20 ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய பகுதி களுக்கு, குடிநீர் வழங் கிட ‘ஒகேனக்கல் கூட் டுக் குடிநீர் திட்டம் மூன்றாம் கட்டமாக செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இது தொடர்பான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் குடிநீர்த் திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும், பாதாள சாக்கடைத் திட்டங்களை நிறைவேற்றுவ தற்காகவும் 1971 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கப்பட்டது. அரசு தற்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தமிழ்நாட்டின் 16 மாநகராட்சிகள், 72 நகராட்சிகள், 328 பேரூராட்சிகள் மற்றும் 47,980 ஊரகக் குடியிருப்புகளில் உள்ள 5.28 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் சராசரியாக நாளொன்றுக்கு 2,353 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டம்
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங் களின் உள்ளூர் நீராதார ங்களில் புளோரைடு உப்புத் தன்மை நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக யிருந்த நிலையில், அதன் பயன்பாட்டால் பொதுமக்கள் பல்வேறு உடல் நலபிரச்சி னை களைச் சந்தித்து வந்தனர். இந்த நிலையை மாற்றுவதற்காக, ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டம் (முதல் மற்றும் இரண்டாம் கட்டம்), தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சார்ந்த ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 6,758 ஊரகக் குடியிருப்புகளில் உள்ள 34.75 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.1928.80 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2009 ஆம் ஆண்டில் தமிழ்நாடு துணை முதலமைச்சராக பொறுப்பிலிருந்து காலத்தில் இத்திட்டத்திற்காக ஜப்பான் நாடு சென்று, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனத்தினிடம் நிதி உதவி பெற்றுவந்தார்கள். அந்த நிதி உதவியின் துணை கொண்டு திட்டம் வடிவமைக்கப்பட்டது. அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 26.02.2008 அன்று தருமபுரியில் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 30 லிட்டர் வீதம் 145.00 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவினை நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் வீதமும், பேரூராட்சிகளுக்கு 70 லிட்டர் வீதமும் மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு 55 லிட்டர் வீதமும், உயர்த்தி வழங்கும் வகையில், 304.83 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் பொருட்டு, காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்-3 ஆம் கட்டம் செயல்படுத்தபடும் என்று அறிவித்தார்கள்.
நீர் சுத்திகரிப்பு
அதன்படி, இத்திட்டத் திற்கு தேவையான நீரினை (Raw Water) காவிரியாற்றில், ஒகேனக்கலில் அமையவிருக்கும் தலைமையிடத்திலிருந்து, யானைபள்ளம் மற்றும் கனவாய் நீருந்து நிலையங்களின் வழியாக, 20.20 கி.மீ தொலைவில் பருவதனஹள்ளி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் 242.50 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிக்கப்படவுள்ளது.பின்னர், பருவதனஹள்ளியில் அமையவுள்ள 157.25 இலட்சம் லிட்டர் நீர் சேமிப்பு தொட்டியிலிருந்து, குழாய்கள் மூலம் 32 அழுத்த விசைத்தொட்டிகள் 324 முதன்மை சமநிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் 598 தரைமட்ட தொட்டிகளில் நீர் சேகரிக்க ப்படும். அங்கிருந்து தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள நகர்ப்புர மற்றும் ஊரக பகுதிகளில் 1009 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு; அதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.
இத்திட்டத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு ரூ.8428.50 கோடி. இதில், ஊரக பகுதிகளுக்கான ஒன்றிய அரசின் பங்களிப்புத் தொகை ரூ.2,283.40 கோடி, மாநில அரசின் மற்றும் தொழில்துறை பங்களிப்புத் தொகை ரூ.1761.00 கோடியாகும். ஊரக, நகர்ப்புர பகுதிகளுக்கான மாநில அரசின் பங்களிப்புத் தொகையான ரூ.4384.10 கோடிக்கு வெளிப்புற நிதி உதவி மூலம் நிதி பெறுவதற்காக ஒன்றிய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஜப்பான் பன்னாட்டு நிதி உதவிபெறப்படவுள்ளது. 11 தொகுப்புகளாக செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் முதல்கட்டமாக தொகுப்பு-2A மற்றும் திட்ட மேலாண்மை ஆலோசகருக்கான ஒப்பந்தப்புள்ளி கோர கொள்கை அளவில் ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் – 3 ஆம் கட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம், ஓசூர் மாநகராட்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 20 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 6,802 ஊரக குடியிருப்புகளைச் சார்ந்த 38.81 இலட்சம் மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் வழங்கப்படும். தமிழ்நாட்டில் தொழில்துறையில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ஓசூர் மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு களை வழங்கக்கூடிய தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியடையவும் பெரிதும் உதவும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.