நாம் வாழும் இந்த உலகம்,ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்த அரசியல் வரலாறுகளையும், மக்கள் இயக்க வரலாறுளையும் பதிவு செய்து கொண்டே தான் சுற்றிக் கொண்டு வந்திருக்கிறது.
கெட்ட வாய்ப்பாக இந்தியாவில் தோன்றிய சமூக சீர்திருத்த இயக்கங்கள் எல்லாம், மக்கள் இயக்கங்கள் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்ற அடிப்படை இலக்கணங்களுக்கு சற்று தொலைவிலேயே நின்று செயல்பட்ட நிலையால் தொடர்ந்து தோல்வியை தழுவின.
இவற்றிற்கெல்லாம் விதிவிலக்காக, ஒரு மக்கள் இயக்கத்தின் அடிப்படை இலக்கணங்களோடு அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் 1925இல் தொடங்கிய மக்கள் இயக்கம், சுயமரியாதை இயக்கம் எனும் அடிவேராய் தொடங்கி திராவிடர் கழகமாய் விரிந்து பரந்த ஆலமரமாய் அழகோடு நிற்கிறது.
உலக வரைபடத்தில் எந்த பகுதியிலும் நடைபெறாத ஜாதிய கொடுமைகள், தீண்டாமை கொடுமைகள், பெண்ணடிமை கொடுமைகள் நடைபெறும் நாடு இந்தியா .. காரணம் இந்துத்துவ பார்ப்பனியம்.. இந்துத்துவ பார்ப்பனியம் என்னும் மதக் கொடூரத்தால் கொல்லப்பட்டவர்கள் லட்சக் கணக்கானோர்.. ஆயிரக்கணக்கான பவுத்தர்கள், சமணர்கள், அந்தந்த மதங்களின் தலைவர்கள், பார்ப்பனியத்தோடு போராடி எதிர்த்து நின்ற சூத்திரர்கள், நந்தர்கள், சித்தர்கள், வள்ளலார்கள்,அசுரர்கள், நரகாசுரர்கள், ராவணர்கள் என லட்சக்கணக்கானோர் .. உயிரோடு விட்டால் வேறு ஜாதி ஆண்களை திருமணம் செய்து விடுவார்கள் என்ற ஒற்றை காரணத்திற்காக கணவனின் சிதையில் உயிரோடு எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்கள், உரமாக,வீசி எறியப்பட்ட பெண் குழந்தைகளின் இரத்தமும் எலும்பும் சதைகளும் புதைந்து கிடக்கும் மேற்கு வங்க நிலங்கள்!
இன்றும் தொடரும்
பெண் குழந்தை மரணங்கள்..
மதக் கொடூரத்தால்,
லட்சக்கணக்கான அளவில் கொல்லப்பட்டவர்கள் எரிந்து போன சாம்பல் அடுக்குகளும் எலும்புக் கூடுகளும்,
நம் காலடியில், இந்திய மண்ணின் அடியாழத்தில் உறைந்து போய் கிடக்கின்றன..
இத்தகைய கொடூர தத்துவமாம் இந்துத்துவ பார்ப்பனியத்தை புத்தருக்கு பின் துணிச்சலாக எதிர்த்து நின்ற தலைவர்கள் அறிவாசான் தந்தை பெரியாரும், புரட்சியாளர் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களும்..
அறிவாசான் தந்தை பெரியாருக்கு பின், வீராங்கனை அன்னை மணியம்மையாருக்கு பின் தமிழர் தலைவர் அவர்கள் திராவிடர் கழகத்தை வழி நடத்துகிறார்கள்..
இந்தியாவிலேயே ஜாதி-தீண்டாமை ஒழிப்பின் உண்மை வரலாறாக இயங்கிக் கொண்டிருப்பது திராவிடர் கழகம் மட்டுமே..
தந்தை பெரியார் அவர்கள், அவருடைய காலகட்டத்திலேயே பல ஆதி திராவிடர் மாநாடுகள், ஜாதி-தீண்டாமை ஒழிப்பு மாநாடுகள் நடத்தி இருக்கிறார்..
தந்தை பெரியார் என்னும் மாபெரும் மனித நேய வரலாற்றின் இரண்டாம் பாகமாய் விளங்கும் தமிழர் தலைவர் அவர்களும் சமீப காலகட்டங்களில்,
தருமபுரியில் ஜாதி-தீண்டாமை ஒழிப்பு மாநாடு,
ஓசூரில் ஜாதி-தீண்டாமை ஒழிப்பு மாநாடு,
செந்துறையில் ஜாதி-தீண்டாமை ஒழிப்பு மாநாடு
திருச்சி சிறுகனூரில் ஜாதி-தீண்டாமை ஒழிப்பு மாநாடு,
சென்னையில் ஜாதி-தீண்டாமை ஒழிப்பு மாநாடு
என ஜாதி-தீண்டாமை ஒழிப்பு மாநாடுகளை நடத்திய தலைவர்.
இந்தத் திசையில் அக்டோபர் 4 அன்று செங்கற்பட்டு – மறைமலைநகரில் நடைபெறும் மாநாடு – வரலாற்று முக்கியத்துவம் உள்ளது. வாரீர் தோழர்களே, குடும்பம் குடும்பமாக வாரீர்!
– தகடூர் தமிழ்ச்செல்வி
மாநில செயலாளர், திராவிடர் கழக மகளிரணி