புதுடில்லி, அக்.1- லடாக்கில் உரிமைகளுக்காகப் போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி மோடி, மக்களுக்கு துரோகம் செய்து விட்டார். இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி வற்புறுத்தி உள் ளார்.
துப்பாக்கி சூடு
லடாக்கை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும், தங்களின் மொழியை அரசியல மைப்பு 6 ஆவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 24.9.2025 அன்று லடாக்கில் போராட்டம் நடந்தது. அப்போது வன்முறை வெடித்ததால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இதையடுத்து போராட்டத்தை முன்னின்று வழிநடத்தியதாக கருதப்பட்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ராஜஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டார்.
ராணுவ வீரரும் இறந்தார்
துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களில் ஒரு வரான சேவாங் தார்ச்சின், கார்கில் போரில் பங்கெடுத்த ராணுவ வீரர் ஆவார்.
லடாக் மரணங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், இந்த விவகாரத்தில் பாரதீய ஜன தாவை கடுமையாக விமர்சித்து வருகிறது.
பிரதமர் மோடி லடாக் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக காங்கிரஸ் உயர் மட்ட தலைவர்கள், குற்றம் சாட்டி உள்ள னர். இதுகுறித்து. காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
தியாகத்துக்கு கிடைத்த மரியாதை
‘‘கார்கில் போரில் சேவாங் தார்ச்சின் தனது கடமையை நிறைவேற்றினார். அவரது தந்தை யும் ஒரு ராணுவ வீரர் தான். அதற்கு ஈடாக அவருக்கு என்ன கிடைத்தது. லடாக்கில் மோடி அரசாங்கத்திடமிருந்து ஒருதோட்டா!
கல்வான் பள்ளத்தாக்கில் நமது 20 ராணுவ வீரர்கள் நாட்டிற்காக உயிரை தியாகம் செய்தபோது, அவர்களின் வீரத்தை மோடிஜி, நினைவில் கொள்ளாமல் சீனாவுக்கு பரிசுத்த சான்றிதழ் வழங்கினார். அதுபோன்றவர்கள் சேவாங் தார்ச்சின் போன்ற வீரர்களின் தியா கத்துக்கு என்ன மரியாதை காட்டுவார்கள். பாரதிய ஜனதா வெற்று தேசியவாதம் பேசுகிறது.
இவ்வாறு அவர் எழுதி உள்ளார்.
ராகுல்காந்தி காணொளி
தென் அமெரிக்காவில் 4 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்ட காணொளிப் பதிவில் பேசி இருப்பதாவது:-
அப்பா ராணுவத்தில், மகன் ராணுவத்தில் தேச பக்தி அவர்களின் ரத்தத்தில் ஓடியது. ஆனால் அவர் லடாக்கிற்காகவும், அவர்களது உரிமைகளுக்காகவும் நின்றதால் பா.ஜனதா அரசாங்கம் இந்த துணிச்சலான தேசத்தின் மகனை சுட்டுக் கொன்றது. அவரது தந்தையின் வலி நிறைந்த கண்கள் ஒரு கேள்வியைக் கேட்கின்றன, இதுதேசத்திற்கு சேவை செய்ததற்கான வெகுமதியா என்று?
நீதி விசாரணை வேண்டும்
பிரதமர் அவர்களே, நீங்கள் லடாக் மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டீர்கள். அவர்கள் தங்கள் உரிமைகளைக் கோருகிறார்கள். அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள் வன்முறை மற்றும் பயத்தின் அரசியலை நிறுத்துங்கள்.
லடாக்கில் நடந்த இந்த கொலைகள் குறித்து பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும், குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம்…
இவ்வாறு அவர் பேசி உள்ளார் .
இதுபோல காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேசும் வலைத்தள பதிவு வெளி யிட்டு பா.ஜனதாவுக்கு கண்டனம் தெரி வித்துள்ளார்.