கரூர், செப்.29- கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று முன்தினம் (27.9.2025) பிரசாரம் மேற்கொண்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூரில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவே கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறினார். இந்த துயரகரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்த துயரமான சம்பவத்தால், கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று (28.9.2025) துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கரூரில் நேற்று (28.9.2025) கடைகள் அடைக்கப்படும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
குக்கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தரும்
மினி பேருந்து திட்டத்தை எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, செப்.29-
புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சிற்றுந்து (மினி பஸ்):தமிழ்நாடு அரசு புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தை கடந்த ஆண்டு அறிவித்தது. பின்னர் அதில் சில திருத்தங்களை மேற்கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி அரசாணையை பிறப்பித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள், தனி நபர்கள் என்று மொத்தம் 23 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்குகளை எல் லாம் நீதிபதி என்.மாலா விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் இந்த திட்டமே, போக்குவரத்து சட்டத்துக்கு எதிரானது என்று வாதிடப்பட்டது.
அடிப்படை உரிமை: அரசுத் தரப்பில், மக்கள் எளிதாக நகர் பகுதிகளை அணுகும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.மாலா பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:- குக்கிராமங்களில் உள்ள மக்கள் எளிதாக நகர் பகுதிக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் வந்து செல்லும் ஒரு போக்குவரத்து வசதியை அரசு செய்து கொடுத்துள்ளது. இவ்வாறு போக்குவரத்து வசதியை பெறுவது மக்களின் அடிப்படை உரிமையாகும்.
தள்ளுபடி : கிராமங்களில் உள்ள சாலைகள் எல்லாம் பரிதாப கரமான நிலையில்தான் உள் ளது. அந்த சாலைகளில் வழக்கமான பெரிய வகை பேருந்துகளை எல்லாம் இயக்க முடியாது என்பதால்தான் மினி பேருந்துகளை இயக்கும் திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. அதுவும் இந்த திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அரசின் கொள்கை முடிவில் இந்த உயர் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, இந்த வழக்குகளை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.