*ஜாதிப் பெருமையை ஊக்கப்படுத்துகின்ற இயக்கங்கள் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் அமைப்புகள்!
* ஜாதி உணர்வைச் சிதைக்கின்ற ஓர் அரசியலாக, வலிமைப் பெற்ற ஓர் அரசியலாக, ‘திரவிடியன் பாலிடிக்ஸ்!’
பெரியாரை எதிர்க்கின்றோம் என்கின்ற பெயரில், தி.மு.க.வை எதிர்க்கின்றோம் என்கின்ற பெயரில்,
பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையாக இருக்கின்ற
திராவிட அரசியலையே சிதைக்கப் பார்க்கிறார்கள்!
சென்னை, செப்.29 ஜாதிப் பெருமையை ஊக்கப்படுத்துகின்ற இயக்கங்கள் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் அமைப்புகள். ஜாதி உணர்வைச் சிதைக்கின்ற ஓர் அரசியலாக, வலிமைப் பெற்ற ஓர் அரசியலாக, ‘திராவிடியன் பாலிடிக்ஸ்’ இருந்தது. இதை, பெரியாரை எதிர்க்கின்றோம் என்கின்ற பெயரில், தி.மு.க.வை எதிர்க்கின்றோம் என்கின்ற பெயரில், ஒட்டுமொத்தமாக, ஆரிய எதிர்ப்புக் கொள்கையாக இருக்கின்ற, பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையாக இருக்கின்ற திராவிட அரசியலையே சிதைக்கப் பார்க்கிறார்கள் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள்.
‘‘சாதிப் பெருமை’’ (Caste Pride) தமிழ்மொழி பெயர்ப்பு நூல் அறிமுக விழா, திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பெரியார் நூலக வாசகர் வட்டம் ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில், கடந்த 11.9.2025 அன்று மாலை 6.30 மணிக்கு சென்னை – பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் நடைபெற்றது. இந்நூல் அறிமுக விழாவிற்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை வகித்தார். இவ்விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள் Caste Pride ஆங்கில நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
ஆதிக்கம் செலுத்தக்கூடிய சமூகத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு…
சர் தாமஸ் மன்றோ என்ன சொல்கிறார் என்றால், ‘‘ஆதிக்கம் செலுத்தக்கூடிய சமூகத்தினரின் ஆதர வைப் பெறுவதற்கு, தண்டனைக் கொள்கைகள் அவசியமானது’’ என்கிறார்.
பி.ஜே.பி. தமிழ்நாட்டிற்குள் வளர்ந்தால் என்னாகும்?
அது வெறும் சராசரியான அரசியல் கட்சி கிடை
யாது.
இன்னும் 50 ஆண்டுகள்
நாம் போராடவேண்டி இருக்கும்!
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டு இருக்கின்ற சரிவை, கருத்தியல் ரீதியாக ஏற்பட்டு இருக்கின்ற பின்னடைவை ஈடுகட்டுவதற்கே இன்னும் 50 ஆண்டுகள் நாம் போராடவேண்டி இருக்கும். அவ்வளவு மோசமான சரிவை இந்தத் தேசம் சந்தித்திருக்கிறது. பிற்போக்குத் தனத்திற்குக் கொண்டு போய்விட்டார்கள்.
கும்பல் கும்பலாகக் கொலை செய்கிறார்கள்!
ஜாதியின் பெயரால், எல்லா இடங்களிலும் கும்பல் கும்பலாக உள்ளே புகுந்து அடிக்கிறார்கள். ஒரே ஒரு தலித் இளைஞர் ஏதோ ஒரு தவறைச் செய்தால், ஒட்டுமொத்த ‘சேரி’யைக் கொளுத்துகிறார்கள். பல பேரை வெட்டிப் படுகொலை செய்கிறார்கள். கும்பல் கும்பலாகக் கொலை செய்கிறார்கள். விழுப்புரத்தில் 12 பேர்; கீழ்வெண்மணியில் 44 பேர்; மேலவளைவில் 7 பேர்; ஊஞ்சனையில் 5 பேர் என்று இப்படி கும்பல் கும்பலாக ஒடுக்கப்பட்ட மக்களை எந்தக் காரண முமின்றி வெறும் ஆதிக்க வெறியால் கொன்று குவிக்கி றார்கள்.
அந்த வெறி எப்படி பாதுகாக்கப்படுகிறது, பரா மரிக்கப்படுகிறது என்றால், ‘ஜாதிப் பெருமை’ என்கின்ற அடிப்படையில் ஊக்கப்படுத்தப்படுகிறது.
Caste Pride என்ற மிக அருமையான ஒரு சொல்லாடலை மனோஜ் மிட்டா அவர்கள் அவருடைய நூலுக்குத் தலைப்பிட்டு இருக்கிறார்.
ஜாதி என்கின்ற பயங்கரவாதத்தை அம்பலப்படுத்து வதற்காக அவர் கையாண்டிருக்கின்ற அந்த சொல்லில், எந்த அளவிற்குத் தெளிவாக இருக்கின்றார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அதைப் புரிந்துகொள்வதற்கே நமக்கு ஒரு பார்வை தேவை.
மெல்ல மெல்ல எல்லாவற்றையும் அவர்கள் கபளீகரம் செய்து வருகிறார்கள்!
‘‘நாங்கள் ஆண்ட ஜாதி’’, ‘‘நாங்கள் அந்த ஜாதி இல்லை, இந்த ஜாதி’’, இப்படியெல்லாம் பெருமைப்பட்டுப் பேசுகின்ற உன்னுடைய நிலம் பறிபோகிறது, உன்னு டைய மொழி சிதைக்கப்படுகிறது, உன்னுடைய பாரம்பரியக் கலாச்சாரம் சிதைக்கப்படுகிறது. மெல்ல மெல்ல எல்லாவற்றையும் அவர்கள் கபளீகரம் செய்து வருகிறார்கள் என்பதைப்பற்றியெல்லாம் உனக்குக் கவலையில்லை.
புதிய புதிய சட்டங்களையெல்லாம் கொண்டு வந்து, எதிர்காலச் சந்ததிகளை நசுக்கப் பார்க்கிறார்கள்; அடிமைப்படுத்தப் பார்க்கிறார்கள். அதைப்பற்றி இவனுக்குப் பார்வையே கிடையாது.
ஜாதிப் பெருமையை ஊக்கப்படுத்துகின்ற இயக்கங்கள்ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்
‘‘நான் ஆண்ட வம்சம்; அரச வம்சம்’’ என்கின்றான். இந்த ஜாதிப் பெருமையை ஊக்கப்படுத்துகின்ற இயக்கங்கள் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் அமைப்புகள்.
இதை ஏன் அவர்கள் செய்கிறார்கள் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஒரு முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவரிடம், குர்ஆனைக் கொடுத்துப் படியுங்கள் என்று சொன்னால், அதை அவன் படித்துவிட்டு, ‘அல்லா ஒருவரே’ என்று சொல்லிவிட்டுப் போவான். எளிமையாக அவனை ஒருங்கிணைக்க முடியும்.
ஒரு கிறித்தவ மதத்தைச் சார்ந்தவரிடம், ஏசுவையோ அல்லது மாதாவையோ சொல்லி, அவனை ஒருங்கி ணைக்க முடியும்.
கடவுளைச் சொல்லி ஹிந்து மதத்தைச் சேர்ந்தவரை ஒருங்கிணைக்க முடியாது!
ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரிடம், எந்தக் கடவுளைச் சொல்லி ஒருங்கிணைக்க முடியும்?
கடவுளைச் சொல்லி ஹிந்து மதத்தைச் சேர்ந்தவரை ஒருங்கிணைக்க முடியாது. மற்ற மதத்துக்காரர்களுக்கு இருப்பதுபோல, ஒரு பொது நூல், ‘புனித’ நூல் எதுவும் இல்லை.
ஹிந்து மதத்தில் நிறுவனரும் கிடையாது; ஹோலி டெக்ஸ்ட்டும் கிடையாது
ஹிந்துக்களை ஒருங்கிணைப்பதற்கு மிக மிக முக்கி யமான தேவை என்னவென்றால், ஜாதிப் பெருமைதான்!
அதைத்தான் குடிப்பெருமை என்று சொல்கிறார்கள். அதனால்தான், அவர்களை பி.ஜே.பி. டீம் என்று நாம் சொல்கிறோம்.
ஜாதியை ஒழிக்கவேண்டும் என்றுதானே சொல்ல வேண்டும்; ஜாதியில் பெருமைப்படுவதற்கு என்ன இருக்கிறது? ஜாதிப் பெருமை என்றாலும், குடிப் பெருமை என்றாலும் ஒன்றுதான்.
ஜாதிப் பெருமிதம் என்பது, ஒவ்வொரு ஜாதியும், நான் வேறு என்கின்ற உணர்வை உண்டாக்குகிறது. அந்த உணர்வு வந்த பிறகு, அவனுக்கு ஹிந்து என்கின்ற உணர்வு மேலோங்கும்.
தமிழன் என்று நாம் சொன்னால்,
ஹிந்து என்கின்ற உணர்வு வராது!
ஹிந்து என்கின்ற உணர்வு வரவேண்டும் என்றால், ஜாதி உணர்வு இருந்தால்தான் வரும். ஜாதி உணர்வை விட்டு, தமிழன் என்று நாம் சொன்னால், அவனுக்கு ஹிந்து என்கின்ற உணர்வு வராது. ஏனென்றால், ஜாதி உணர்வு இல்லாதபோது, ஹிந்து உணர்வு வராது.
இந்த ஜாதி உணர்வைச் சிதைக்கின்ற ஓர் அரசியலாக, வலிமைப் பெற்ற ஓர் அரசியலாக, திராவிடியன் பாலி டிக்ஸ் இருந்தது.
திராவிட அரசியலையே
சிதைக்கப் பார்க்கிறார்கள்!
இதை, பெரியாரை எதிர்க்கின்றோம் என்கின்ற பெயரில், தி.மு.க.வை எதிர்க்கின்றோம் என்கின்ற பெயரில், ஒட்டுமொத்தமாக, ஆரிய எதிர்ப்புக் கொள்கையாக இருக்கின்ற, பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையாக இருக்கின்ற திராவிட அரசியலையே சிதைக்கப் பார்க்கிறார்கள்.
திராவிட அரசியலை எதிர்க்கிறார்கள் என்றால், அம்பேத்கர் அரசியலை எதிர்க்கிறார்கள் என்று பொருள்.
திராவிட அரசியலை எதிர்க்கிறார்கள் என்றால், தந்தை பெரியாரின் அரசியலை எதிர்க்கிறார்கள் என்று பொருள். திராவிட அரசியலை எதிர்க்கிறார்கள் என்றால், ஜோதிபாபூலேவின் அரசியலை எதிர்க்கிறார்கள் என்று பொருள். திராவிட அரசியலை எதிர்க்கிறார்கள் என்றால், புரட்சியாளர் அம்பேத்கர், ஜோதிபா பூலே ஆகியோர் முன்னெடுத்த சமூகநீதி அரசியலை எதிர்க்கிறார்கள் என்று பொருள்.
திரவிடியன் பாலிடிக்ஸ்சில்
தேசியக் கண்ணோட்டம் தேவை!
மனோஜ் மிட்டா அவர்கள் இங்கே உரையாற்றும்போது சொன்னார், ‘‘திராவிடம் என்றால், ஒரு குறிப்பிட்ட பகுதியாகச் சுருக்கிப் பார்க்கிறார்கள்’’ என்று. அப்படி யில்லை. திரவிடியன் பாலிடிக்ஸ்சில் தேசியக் கண்ணோட்டம் தேவை. ஏனென்றால், தீண்டாமை என்பது ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்குள் இல்லை. அது தேசம் முழுவதும் இருக்கிறது.
ஜாதி என்பது, தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் இருக்கின்ற தேசிய நிகழ்வுகள்.
தீண்டாமை, ஜாதீய வன்முறை, ஜாதீய பாகுபாடு இவையெல்லாம் தேசிய அளவில் இருக்கிறது. ஆகவே, தேசிய அளவிலான பார்வை நமக்குத் தேவைப்படுகிறது.
ஏனென்றால், நாம் இந்தியாவை ஒப்புக்கொண்டோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஒப்புக்கொண் டோம். இவற்றை ஏற்றுக்கொண்ட பிறகு, அரசியல மைப்புச் சட்டத்தைச் செயல்படுத்தவேண்டும். அப்போதுதான், இந்த சமூகத்தில், சமத்துவத்தை உருவாக்க முடியும். அது சமத்துவத்திற்கான ஓர் ஆயுதம்.
நான்கு வழக்குகள்!
தோழர்களே, மனோஜ் மிட்டா அவர்கள், இது தொடர்பாக நான்கு வழக்குகளைக் கையிலெடுத்தார்.
- “தி குயின் வர்சஸ் நபி ஷாகிப்’ வழக்கு – 1883 ஆம் ஆண்டு.
- ‘ரெட்டிகாடு வெர்சஸ் கொண்டாரெட்டி’ வழக்கு – 1900 ஆம் ஆண்டு.
‘‘ஜாதியின் விதிகளை ஏற்றுக்கொண்டால், ஜாதித் தலைவர்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டால், ஜாதிக் கூட்டங்களிலும், சடங்குகளிலும் கலந்துகொண்டால், உண்மையில் அந்த ஜாதிக்காரராகத் தொடர்ந்தால், அவர் ஒழுங்குமுறைச் சட்டத்தின் வரம்பிற்குள் வருவார்’’ என்று ரெட்டிகாடு வழக்கில் சொல்கிறார்கள்.
- உப்பளக்கோட்டையா நகரம். நகரம் ஒரு பறையர் அல்ல. சிறிது நிலம் வைத்திருக்கும் ஒரு கோவண்ட் லா விவசாயி என்பதைக் கவனித்தார். அதனால், அவருக்குத் தண்டனையைக் குறைத்தார்கள்.
- மாடசாமி நாடான் வழக்கு. சாணார் பிரிவிலிருந்து பின்னர் சமூகத்தின் மேல்நோக்கிச் சென்ற நாடார் பிரிவைச் சேர்ந்தவர்தான் மாடசாமி நாடான். இப்போது நாடார் என்று சொல்கிறார்கள்; முன்பு சாணார் என்று அழைக்கப்பட்டார்கள். இவரும், கிறித்தவ மதத்திற்கு மாறிவிடுகிறார்.
ஸ்டாக்ஸ் சட்டம், மதத்தைக்கூட ஓர் அளவுகோலாக வைக்கவில்லை; ஜாதியைத்தான் அளவுகோலாக வைக்கிறது. கீழ்ஜாதியாக இருந்தால், கடும் தண்டனை வழங்கவேண்டும்; அதை உறுதிப்படுத்துகின்ற சட்டம்தான் ஒழுங்குமுறைச் சட்டம். அந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தியவர் சர் தாமஸ் மன்றோ. அவருடைய மனநிலை எப்படி இருந்தது என்றால், நம்முடைய அரசாங்கத்திற்கு மேல்ஜாதி ஆதிக்கச் சக்திகள் ஆதரவாக இருக்கவேண்டும் என்றால், கீழ்ஜாதி மக்கள்மீது அவர்கள் கொண்டிருக்கும் வெறுப்பை, தண்டனைக் கொள்கைமூலம் நிறுவனப்படுத்தவேண்டும்.
ஹிந்துக்களில் ஒரு பிரிவினரின் மனிதத் தன்மையை அழித்திருக்கிறது ஜாதி!
ஸ்டாக்ஸ் தண்டனை பிறருக்கு வேண்டுமானால், இழிவானதாக இருக்கலாம். தமக்கு இல்லை என்று எண்ணும் அளவிற்கு, ஹிந்துக்களில் ஒரு பிரிவினரின் மனிதத் தன்மையை அழித்திருக்கிறது ஜாதி.
அதாவது, கீழ்ஜாதியாக உணரக்கூடியவன், அதை இழிவு என்று கருதக்கூடாது. மேல்ஜாதியாக இருக்கின்ற வன் வேண்டுமானால், துளைகள் போடப்பட்ட சட்டகத்திற்குள் கால்களை நுழைத்து நிற்கின்ற தண்டனையை இழிவாக நினைத்தால் நினைக்கலாம். அதில் தவறில்லை. ஆனால், கீழ்ஜாதிக்காரன், இந்தத் தண்டனை எனக்கு இழிவில்லை என்று நினைக்க வேண்டும். அப்படித்தான் நினைக்கிறான்.
அந்த அளவிற்கு, அவனுடைய மனிதத்தன்மையை இந்த ஜாதி அழித்திருக்கிறது.
மிக நுட்பமான விஷயம் இது.
அதாவது, மலம் அள்ளுவது இழிவானது இல்லை என்று ஒருவரை நினைக்க வைக்கிறான். மார்பகத்தில் துணி போடாமல் இருப்பது ஒன்றும் இழிவானது இல்லை என்று ஒரு சமூகத்துப் பெண்களை நினைக்க வைக்கிறார்கள்.
செருப்புப் போடாமல் போவது, இழிவானது கிடையாது, அது வழக்கம்தான். நாங்கள் செருப்புப் போடாமல்தான் போவோம் என்று ஏற்றுக்கொள்ள வைக்கிறார்கள்.
இந்தக் கோவிலுக்குள் நாங்கள் போகக்கூடாது. அவர்கள்தான் போகவேண்டும். ஏனென்றால், நாங்கள் கீழ்ஜாதி.
இந்த உளவியலை இந்த சமூகம் கட்டமைத்திருக்கிறது. இது எவ்வளவு குரூரமான ஓர் உளவியல், எவ்வளவுக் கேவலமான ஓர் உளவியல் இது.
இந்த உளவியலை இங்கே நிறுவியிருப்பது எது என்றால், Caste Structure, in the social structure of the Hindu Society.அதுதான் இப்படி உருவாக்கி இருக்கிறது.
மேற்கண்ட நான்கு வழக்குகளை மேற்கோள் காட்டி யிருக்கிறார் இந்நூலாசிரியர்.
நூலாசிரியரின் முயற்சியை
நான் வெகுவாகப் பாராட்டுகிறேன்!
இதுபோன்ற தரவுகள் நிறைய. ஒரு பாராவை எடுத்துக்கொண்டு, நாம் ஒரு மணிநேரம் உரையாற்றலாம். அவ்வளவு தகவல்கள். இந்த சமூகத்தைப்பற்றிய ஒரு நீண்ட நெடிய ஆழமான ஓர் ஆய்வை நடத்தியிருக்கிறார் எழுத்தாளர் மனோஜ் மிட்டா அவர்கள். அவருடைய இந்த முயற்சியை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன்.
ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய மிக முக்கியமான ஓர் ஆவணம் இந்த நூல்!
ஜாதி ஒழிப்புக் களத்திலே போராடக்கூடிய ஒவ்வொ ருவரும், திராவிட அரசியலை உயர்த்திப் பிடிக்கிற ஒவ்வொருவரும், சமத்துவத்திற்காகப் போராடுகின்ற ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய மிக முக்கியமான ஓர் ஆவணம் இந்த நூல் என்று சொல்லி, என்னுரையை முடிக்கின்றேன்.
– இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
யின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள் உரையாற்றினார்.