விடுதலைப் போராட்ட வீரர்கள் யாரும்
‘‘ஜாதியை ஒழிக்கவேண்டும் என்றோ, ஜாதியின் பெயரால் நிகழ்கிற ஒடுக்குமுறைகளைப் பற்றியோ சிந்திக்கவில்லை!’’
இது எனக்குக் கவலையாக இருந்தது என்கிறார் நூலாசிரியர் மனோஜ் மிட்டா!
‘‘ஜாதியை ஒழிக்கவேண்டும் என்றோ, ஜாதியின் பெயரால் நிகழ்கிற ஒடுக்குமுறைகளைப் பற்றியோ சிந்திக்கவில்லை!’’
இது எனக்குக் கவலையாக இருந்தது என்கிறார் நூலாசிரியர் மனோஜ் மிட்டா!
‘சாதிப் பெருமை’ ஆங்கில நூலினை வெளியிட்டு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., சிறப்புரை
சென்னை, செப்.26 ‘‘நாடு விடுதலை அடைந்தால் போதும்; ஜாதியை ஒழிக்கவேண்டும் என்றோ, ஜாதியின் பெயரால் நிகழ்கிற பாகுபாடுகளைப்பற்றியோ, ஒடுக்கு முறைகளைப் பற்றியோ, வன்கொடுமைகளைப்பற்றியோ விடுதலைப் போராட்ட வீரர்கள் யாரும் சிந்திக்கவில்லை. இது எனக்கு பெரிய கவலையைத் தந்தது’’ என்கிறார் இந்நூலாசிரியர் மனோஜ் மிட்டா அவர்கள். அய்தரா பாத்தில் பிறந்தாலும், எந்த அளவிற்கு ஒரு சமூகப் பொறுப்பாளராக, ஒரு பெரியாரிய மாணவராக அவர் இருக்கிறார் என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்திருமாவளவன் எம்.பி., அவர்கள்.
- விடுதலைப் போராட்ட வீரர்கள் யாரும் ‘‘ஜாதியை ஒழிக்கவேண்டும் என்றோ, ஜாதியின் பெயரால் நிகழ்கிற ஒடுக்குமுறைகளைப் பற்றியோ சிந்திக்கவில்லை!’’ இது எனக்குக் கவலையாக இருந்தது என்கிறார் நூலாசிரியர் மனோஜ் மிட்டா!
- ‘சாதிப் பெருமை’ ஆங்கில நூலினை வெளியிட்டு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., சிறப்புரை
- என் பயணத் திட்டத்தையே மாற்றிக் கொண்டேன்!
- திராவிட அரசியலை முன்னெடுத்துச் செல்வதில் துணையாக நிற்பவர் தோழர் விஜயசங்கர்!
- திராவிடர் கழகம் சமூகநீதிக்கான பாதுகாப்பு அரண்!
- ‘சாதிப் பெருமை’ புத்தகத்தின் முகப்புரையில்!
- விடுதலைப் போராட்ட வீரர்கள் யாரும், ஜாதி என்கிற சமூகக் கூறு குறித்து சிந்திக்கவில்லை!
- எனக்கு பெரிய கவலையைத் தந்தது: நூலாசிரியர்!
- ஒவ்வொரு தலைப்பும் மிக ஆழமான தரவுகளைக் கொண்டிருக்கின்றது!
- விட்டல்பாய் பட்டேல்
- குற்றவியல், குடிமையியல் சட்டங்களையெல்லாம் ஆயத் தொடங்கினேன்!
- சமூகம் உருவாக்கி வைத்திருக்கின்ற பிம்பம்!
- ஜாதிப் பிரச்சினை என்று வருகிறபோது, காந்தியார் ஒரு மகாத்மா இல்லை!
- ஜாதி அமைப்புச் சீர்திருத்தம் குறித்த கதையாடல்களில் நேரு, ஒரு கவுரவ வேடத்தில்தான் வந்தார்!
‘சாதிப் பெருமை’ ஆங்கில நூலினை வெளியிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., சிறப்புரை
‘‘சாதிப் பெருமை’’ (Caste Pride) தமிழ்மொழி பெயர்ப்பு நூல் அறிமுக விழா, திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பெரியார் நூலக வாசகர் வட்டம் ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில், கடந்த 11.9.2025 அன்று மாலை 6.30 மணிக்கு சென்னை – பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் நடைபெற்றது. இந்நூல் அறிமுக விழாவிற்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை வகித்தார். இவ்விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள் ‘Caste Pride’ ஆங்கில நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
இந்நிகழ்வை தலைமை வகித்துச் சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற, நிறைவாக நம்மிடையே சிறப்புரை வழங்கவிருக்கின்ற தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே, மற்றும் இந்நிகழ்வில் பங்கேற்று இருக்கின்ற தமிழ்ச் சொந்தங்களே, உங்கள் அனைவருக்கும் என்னு டைய பணிவார்ந்த வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தம்பி பிரின்சு என்னாரெசு அவர்கள் சொன்ன தைப்போல, இந்த நிகழ்வில் நான் பங்கேற்கவேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் கருதியதைவிட, நான் பெரிதும் விரும்பினேன்.
தோழர் விஜயசங்கர் அவர்களிடத்தில் நான் பேசுகின்றபொழுது, இரண்டு, மூன்று நாள்களுக்கு முன்பு இந்த நூலை என்னிடத்தில் வழங்கியபோது, இதனை நாம் அறிமுகப்படுத்தவேண்டும்; இந்த விழாவில் நாம் பங்கேற்கவேண்டும் என்கின்ற விருப்பத்தைத் தெரிவித்து இருந்தேன்.
‘ஏற்பாடு செய்வோம்’ என்று சொல்லிவிட்டுப் போனார்.
என் பயணத் திட்டத்தையே
மாற்றிக் கொண்டேன்!
மாற்றிக் கொண்டேன்!
நான், என்னுடைய திட்டப்படி, இன்றைக்கு வெளிநாடு செல்வதற்காக ஏற்பாடு ஆகியிருந்தது. இரண்டு நாள்களுக்கு முன்பு, தோழர் விஜயசங்கர் அவர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, ‘‘11 ஆம் தேதி இந்த நிகழ்வில் பங்கேற்க இயலுமா? பெரியார் திடலில், பகுத்தறிவாளர் கழகம் இந்நிகழ்வினை ஒருங்கிணைக்கிறது’’ என்று சொன்னதும், நான் என் பயணத் திட்டத்தையே மாற்றிக் கொண்டேன்.
ஜெர்மனிக்குப் போய், அங்கிருந்து லண்ட னுக்குப் போவதாகத் திட்டமிட்டிருந்தோம். இப்போது ஜெர்மனிக்குப் போவதை நான் தவிர்த்துவிட்டு, இந்த நிகழ்வில் பங்கேற்பதுதான் முக்கியமானது என்று உங்கள் முன் நிற்கின்றேன். இதை மகிழ்ச்சியோடு தெரிவிப்பதில் பெரு மைப்படுகிறேன்.
திராவிட அரசியலை முன்னெடுத்துச் செல்வதில் துணையாக நிற்பவர்
தோழர் விஜயசங்கர்!
தோழர் விஜயசங்கர்!
தோழர் விஜயசங்கர் அவர்கள், மிகவும் முற்போக்கான சிந்தனையாளர். அவருக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு என்றாலும், அவர் நம்மவர்தான்.
தெய்வச் செயலின்மீது அவருக்கு நம்பிக்கை உண்டு என்றாலும்கூட, அவர், நம்முடைய ஆசிரியர் அவர்களுக்கு உற்ற துணையாக நிற்பவர். நம்முடைய திராவிட அரசியலை முன்னெடுத்துச் செல்வதில் துணையாக நிற்பவர்.
நம்முடைய பல நிகழ்வுகளில் அவர் பங்கேற்று இருக்கின்றார். நான், பிஎச்.டி., பண்ணுகிறபோது, அவரு டைய உதவியை நாடி, அவருடைய அலுவலகத்திற்குச் சென்றபோது, எனக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்தார். அவருக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.
மனோஜ்மிட்டா அவர்கள், ஆங்கிலத்தில் இந்த நூலை எழுதி வெளியிட்டபோது, அந்த வெளியீட்டு விழாவில் என்னால் பங்கேற்க முடியவில்லை. நம்முடைய கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் ரவிக்குமார் அவர்கள் பங்கேற்றதை இங்கே நினைவு கூர்ந்தார்.
அந்தப் புத்தகத்தை, எப்பொழுதும் கையி லேயே வைத்திருப்பார். விமானத்தில் பயணிக்கின்ற போதெல்லாம் இந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டு வருவதை நான் கவனித்திருக்கின்றேன்.
எனக்கும் அந்தப் புத்தகம் கிடைத்தது. இந்தப் புத்தகம் தமிழில் வெளிவந்தால், நலமாக இருக்குமே என்கிற எண்ணம் எனக்கு மேலிட்டது.
திராவிடர் கழகம் சமூகநீதிக்கான பாதுகாப்பு அரண்!
நாமெல்லாம், திராவிட அரசியலை மேலும் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லவேண்டும். திராவிடர் கழகம் சமூகநீதிக்கான பாதுகாப்பு அரண் என்கின்ற கருத்துக்கு வலு சேர்க்கின்ற ஆவணமாக இந்தப் புத்தகம் இருக்கிறது.
‘‘சாதிப் பெருமை’’ என்ற மனோஜ் மிட்டா அவர்கள் எழுதியிருக்கின்ற இந்தப் புத்தகம், சராசரியான ஒரு சமூகவியல், வெறும் தரவுகளைத் திரட்டித் தொகுத்துத் தந்திருக்கின்ற நூல் அல்ல.
மிக ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டி ருக்கின்றார். இந்த ஒரு தொகுப்பை வெளிக் ெகாண்டு வருவதற்கு, அவருக்கு ஏழு ஆண்டுகள் ஆகியிருக்கிறது.
‘சாதிப் பெருமை’ புத்தகத்தின் முகப்புரையில்!
அவர், தன்னுடைய முகப்புரையில் சொல்லுகிறார், ‘‘1984 ஆம் ஆண்டு நடந்த டில்லிப் படுகொலை குறித்து ஒரு நூலை நான் வெளியிட்டேன். அதன் பிறகு, 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் படுகொலை தொடர்பான ஒரு புத்தகத்தை வெளி யிட்டேன். மூன்றாவதாக நான் எழுத நினைத்தது, இந்தியா முழுவதும் விளிம்பு நிலை மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படுகின்ற வன்கொடுமைகளைத் தொகுக்கவேண்டும் என்பதுதான். அதுகுறித்து நான் ஆய்வுகளை மேற்கொள்ள முனைந்தேன்.
சுதந்திர இந்தியாவில், அதாவது நாடு விடுதலை பெற்ற பிறகு, ஜாதி குறித்தும், தீண்டாமை குறித்தும், சட்டமன்றங்களிலும், அரசியல் நிர்ணய சபையிலும் என்ன விவாதங்கள் நடந்திருக்கின்றன என்பது குறித்து நான் ஆய்வு செய்ய முற்பட்டேன். எனக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
இதுவே, இப்படி இருக்கிறது என்றால், நாடு விடுதலைப் பெறுவதற்கு முன்பு – காலனி இந்தியாவில், அதாவது பிரிட்டிஷ் இந்தியாவில், இதுகுறித்து என்ன வெல்லாம் விவாதங்கள் நடந்திருக்கின்றன என்பதை ஆய்வதற்கு நான் முற்பட்டேன்.
எனக்கு ஏராளமான ஆவணங்கள் கிடைத்தன, தரவுகள் கிடைத்தன. அவையெல்லாம் பொக்கிஷங்கள்’’ என்று சொல்லுகிறார்.
விடுதலைப் போராட்ட வீரர்கள் யாரும், ஜாதி என்கிற சமூகக் கூறு குறித்து சிந்திக்கவில்லை!
‘‘அதிலே எனக்கு என்ன தோன்றியது என்றால், 1947 ஆம் ஆண்டு இந்த நாடு விடுதலைப் பெறுவதற்கான போராட்டம் தீவிரமடைந்திருந்தது. நாடு விடுதலைப் பெற்றது.
இந்த நாட்டின் விடுதலையில் ஆர்வம் கொண்டிருந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் யாரும், ஜாதி என்கிற சமூகக் கூறு குறித்து எதுவும் சிந்திக்கவில்லை என்பதுதான் எனக்கு அதிர்ச்சி.
அந்தக் கோணத்தில் ஒருவர் சிந்திக்கவில்லை, அதைப் பொருட்படுத்தவில்லை. சமத்துவ சிந்தனை களை உயர்த்திப் பிடிக்கவில்லை.
எனக்கு பெரிய கவலையைத்
தந்தது: நூலாசிரியர்!
தந்தது: நூலாசிரியர்!
நாடு விடுதலை அடைந்தால் போதும்; ஜாதியை ஒழிக்கவேண்டும் என்றோ, ஜாதியின் பெயரால் நிகழ்கிற பாகுபாடுகளைப்பற்றியோ, ஒடுக்குமுறை களைப்பற்றியோ, வன்கொடுமைகளைப்பற்றியோ விடுதலைப் போராட்ட வீரர்கள் யாரும் சிந்திக்கவில்லை. இது எனக்கு பெரிய கவலையைத் தந்தது’’ என்கிறார்.
எந்த அளவிற்கு ஒரு சமூகப் பொறுப்பாளராக, அய்தராபாத்தில் பிறந்தாலும், ஒரு பெரியாரிய மாணவராக அவர் இருக்கிறார் என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
ஒவ்வொரு தலைப்பும் மிக ஆழமான தரவுகளைக் கொண்டிருக்கின்றது!
இந்தப் புத்தகத்தைப்பற்றி தோழர் விஜயசங்கர் அவர்கள் சொன்னதைப்போல, ஒவ்வொரு தலைப்பும் மிக ஆழமான தரவுகளைக் கொண்டிருக்கின்றது. நிறைய செய்திகளை நமக்குத் தருகிறது.
இந்த நூலைப் படிக்கின்ற ஒவ்வொருவரும், திராவிட அரசியல் எவ்வளவு இன்றியமையாத தேவை என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.
பல பேர் இன்றைக்கு, திராவிடமே தமிழர்களின் எதிரி என்று அரைவேக்காட்டுத்தனமாக உளறிக் கொண்டிருக்கின்றார்கள்.
தேசியப் பார்வை இல்லாமல் ஒரு குறுகிய பார்வை கொண்டு அணுகுகின்ற ஒவ்வொருவரும் அப்படித்தான் சிந்திப்பார்கள்.
இந்தப் புத்தகத்தில், ஒவ்வொரு தலைப்பின் கீழ் கொண்டு வந்திருக்கின்ற செய்திகள் நமக்கு அதிர்ச்சி அளிக்கின்றன.
முகப்புரையில் அவர் சொல்லுகிறார். ஏராளமான தரவுகளைத் திரட்டியிருக்கிறார்.
விட்டல்பாய் பட்டேல்
கலப்புத் திருமணச் சட்டம், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் முதன்முதலாக, விட்டல்பாய் பட்டேல் என்பவரால், 1918 ஆம் ஆண்டு அறி முகப்படுத்தப்பட்டது. ஒரு நூறாண்டுக்கு முன்பு.
மத்திய சட்டமன்றத்தில் (டில்லியில் இருக்கக்கூடிய இன்றைய பார்லிமெண்ட்) அறிமுகப்படுத்தப்பட்டது.
1918 இல் அம்பேத்கர் என்ற ஒரு ஃபேக்டர், இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அம்பேத்கரிய அரசியல் என்பது அப்போது முளை பெறாத காலம். அவர், அந்த சிந்தனை கொண்டிருந்தார்; நூல்கள் எழுதினார், போராட்டக் களத்தில் இருந்தார் என்றாலும்கூட, அவருடைய தாக்கமில்லாத காலத்தில், இத்தகைய சிந்தனையாளர்களும் இருந்தி ருக்கின்றார்கள். அதிலே ஒருவர்தான் விட்டல் பாய் பட்டேல். பட்டேல் என்பது ஒரு ஜாதிப் பெயர்தான். இருந்தாலும்கூட, ஜாதி ஒழிப்புச் சிந்தனை என்பது ஆங்காங்கே முகிழ்த்திருக்கின்றன.
குற்றவியல், குடிமையியல் சட்டங்களையெல்லாம் ஆயத் தொடங்கினேன்!
இந்தப் புத்தகத்தின் முகப்புரையில் மனோஜ் மிட்டல் அவர்கள், ‘‘இந்த ஆய்விலே எனக்கு என்ன தோன்றியது என்றால், பாகுபாட்டு உணர்வின் அடிப்படைகளை நான் புரிந்துகொள்ளவேண்டும். சுதந்திர இந்தியாவில் எப்படி இருந்தது என்பது குறித்து, குற்றவியல், குடிமையியல் சட்டங்களையெல்லாம் ஆயத் தொடங்கினேன். அதுகுறித்த விவாதங்களையும் ஆயத் தொடங்கினேன்.
அப்போது, எந்த அளவிற்கு இவர்கள் ஜாதியக் கூறுகளை உதாசீனப்படுத்தி இருக்கிறார்கள்; புறந்தள்ளி யிருக்கிறார்கள் என்பதைக் காண முடிந்தது.
இதைத் தொகுப்பதற்கு நான் எடுத்த முயற்சியில், இந்தப் புத்தகத்தை இரண்டு பாகங்களை அல்லது மூன்று பாகங்களாகக் கொண்டு வரவேண்டும் என்பதுதான். முதல் பாகத்திற்கே எனக்கு ஏழாண்டுகள் பிடித்திருக்கின்றன’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்குப் பிறகுதான், இனி அடுத்தடுத்து, அவர் தொகுத்து வைத்திருக்கின்ற தரவுகளையெல்லாம் புத்தகங்களாக ஆக்கவேண்டிய நிலை.
அந்தப் போராட்டத்தில் முதல் செய்தி, விடுதலைப் போராட்ட வீரர்கள் யாரும் சமத்துவத்தை உயர்த்திப் பிடிக்கவில்லை என்பது ஓர் அதிர்ச்சி.
சமூகம் உருவாக்கி வைத்திருக்கின்ற பிம்பம்!
இரண்டாவது செய்தி, சமூகத்தை அல்லது தேசத்தை ஈர்க்கக் கூடிய அளவிற்குப் பேராளுமையாக விளங்கியவர் காந்தியார், ஜவகர்லால் நேரு போன்ற அந்தத் தலைவர்கள் தொடர்பாக இந்த சமூகம் உருவாக்கி வைத்திருக்கின்ற பிம்பம், அது நேர்மையானதாக இல்லை.
ஜாதிப் பிரச்சினை என்று வருகிறபோது, காந்தியார் ஒரு மகாத்மா இல்லை!
அதற்கு அவர் சொல்கிறார், ‘‘ஜாதி அமைப்பு சீர்திருத்த வரலாற்றில் எம்.கே.காந்திக்கு, ‘மகாத்மா’ என்று அதிகமாக அறியப்பட்டவருக்கு கேந்திரமான பங்கு இருக்கிறது. ஆனால், இந்தக் குறிப்பிட்ட பின்னணியைப் பொறுத்தவரையில், அவர் பெரும்பாலும் ஒரு மகாத்மாவாக வெளிப்பட வில்லை. ஜாதிப் பிரச்சினை என்று வருகிறபோது, அவர் ஒரு மகாத்மா இல்லை’’ இது மனோஜ் மிட்டல் கணிப்பு.
ஜாதி அமைப்புச் சீர்திருத்தம் குறித்த கதையாடல்களில் நேரு, ஒரு கவுரவ வேடத்தில்தான் வந்தார்!
‘‘ஜவகர்லால் நேரு அவர்களைப்பற்றி இந்த சமூகம் ஒரு பிம்பத்தை உருவாக்கியிருக்கிறது. ஆனால், ஜாதியைப் பொறுத்தவரையில் அவர் எவ்வாறு இருந்தார் என்றால், ஜாதி அமைப்புச் சீர்திருத்தம் குறித்த கதையாடல்களில் நேரு, ஒரு கவுரவ வேடத்தில்தான் வந்தார்.
அவர் சீர்திருத்தத்தை ஆதரிக்கவும் இல்லை; சீர்திருத்தத்தை எதிர்க்கவும் இல்லை’’ என்று பதிவு செய்திருக்கிறார்.
(தொடரும்)