புதுடில்லி, செப்.22- தீர்ப்பாயத்தில் இருக்கும் நிர்வாக தரப்பினர் சிலர் அரசுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க தயங்குகிறார்கள் என்று, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் அகில இந்திய மாநாட்டில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.
10-ஆவது மாநாடு
மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் 100-வது அகில இந்திய மாநாடு டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 20.9.2025 அன்று நடைபெற்றது. இந்த மாநாட்டை உச்ச நீதிமன்றம்நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, சதீஷ் சந்திர சர்மா, பிரசன்னா பி.வரலே, விஜய் பிஸ்னோய் மற்றும் பிரதமர் கவனிக்கும் துறைகளின் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், சட்ட அமைச்சர் அர்ஜூன்ராம் மெக்வால் ஆகியோர் முன்னிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- தீர்ப்பாயங்கள் அரசு அதிகாரிகளுக்கு நீதி கிடைப்பதையும், அவர்களின் செயல்திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளில் அதிக நிலைத்தன்மையும், அதன் செயல் பாட்டில் வெளிப்படைத் தன்மையும் இருக்க வேண்டும். தீர்ப்பாயத்தை அணுகும் ஒவ்வொருவரும் அந்த முடிவு நன்கு நியாயமானது என்று உணர வேண்டும்.
தயங்குகிறார்கள்
தீர்ப்பாய உறுப்பினர்களில் சிலர் நிர்வாக தரப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு சட்ட பகுத்தறிவில் பயிற்சி தேவைப்படுகிறது. நிர்வாகத் தரப்பில் இருந்து வரும் சிலர், அரசுக்கு எதிராகஉத்தரவு பிறப்பிக்க தயங்குகிறார்கள். இதை நான் தனிப்பட்ட முறையில் கவனித்து இருக்கிறேன். அவர்கள் இது பற்றி சிந்திக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பாய முடிவுகளும் மேல்முறையீடு செய்யப்படுகின்றன. ஒரு வழக்கு மேல்முறையீடு செய்ய தகுதியானதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க மத்திய அமைப்புகளை பயன்படுத்த வேண்டும். இப்படி பயன்படுத்தினால் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை குறையும்.
நீதிபதிகளும், வழக்குரைஞர்களும் நீதி என்ற தங்கத்தேரின் இரு சக்கரங்களைப் போன்றவர்கள். இதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதில் யாரும் உயர்ந்தவர்களோ, தாழ்ந்த வர்களோ இல்லை. நாம் இணைந்து செயல்படாவிட்டால் நீதி நிர்வாகம் சரியாக செயல்பட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரிகள் வலியுறுத்துகிறார்கள்
நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி குறிப்பிட்ட மேல் முறையீடு தொடர்பான பிரச்சினையை சட்ட அமைச்சர் அர்ஜூன்ராம் மெக்வால் வேறு விதமாக சுட்டிக்காட்டினார். அவர் பேசும்போது, “தீர்ப்பாயத்தின் உத்தரவு சரியாக இருந்தாலும், அதிகாரிகள் மேல்முறையீடு செய்ய வலியுறுத்துகிறார்கள்” என்றார். இந்த போக்கை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
இந்த மாநாட்டில் இந்திய அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி மற்றும் பல சட்ட நிபுணர்கள் கலந்து கொண்டனர்.