அமெரிக்காவில் உள்ள வட கரோலினா – கேரியில் உலகத் தலைவர் தந்தை பெரியார் 147ஆம் பிறந்தநாள் விழா கருத்தரங்கம்! மருத்துவர் சோம. இளங்கோவன், முனைவர் துரை. சந்திரசேகரன் பங்கேற்பு

5 Min Read

அமெரிக்கா பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் வட கரோலினா- கேரியில் தந்தை பெரியார் 147–ஆம் பிறந்தநாள் விழா சீர்மிகு கருத்தரங்கம் பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர்
டாக்டர் சோம. இளங்கோவன் தலைமையில்
14.9.2025 மாலை 2:30 மணி முதல் 5.30 மணி வரை கேரி அபெக்ஸ் கம்யூனிட்டி சென்டரில் நடைபெற்றது. அகிலன் வரவேற்புரை ஆற்றினார்.
பெரியார் பிஞ்சுகள் இனியா -இலக்கியா தந்தை பெரியார் புகழ் பரப்பும் பாடல்களை பாடினர்.

தந்தை பெரியார் அவர்களின்  லட்சியத்தை, தொண்டறத்தை, தியாகத்தை எடுத்து இயம்பும் வகையில் நிகழ்வில் பங்கேற்றவர்கள் தங்களுக்கு தெரிந்த பிடித்தமான ஒரு கருத்தை  முன் வைத்தனர்.

டாக்டர் சரோஜா இளங்கோவன், மோகன் வைரக்கண்ணு, கலைச்செல்வி, சுஜாதா, அறிவுப் பொன்னி, பாபுஜி, அரவிந்த், அம்ஜத், எழில் வடிவன், பிரகாஷ், நந்தினி, இளஞ்செழியன், மீனா, ராசராசன், மாலதி, கிருஷ்ணன்,ஜெரால்ட், பிரியா ஆகியோர் கருத்து அறிவித்தார்கள்.

அவர்களின் கருத்துகள் புதுமையாகவும் சுவையாகவும் நன்றி உணர்வின் வெளிப் பாடாகவும் இருந்தது.

இறுதியாக கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் “பெரியாரின் போராட்டங்கள்”எனும் தலைப்பில் ஒரு மணி 20 நிமிடம் கேட்போர் பிணிக்கும் தகைமையில் சிறப்புரை ஆற்றினார்.

 

வர்ஜீனியா-சாண்டிலியில் தந்தை பெரியார் படத்திறப்பு!

வட அமெரிக்கா-சாண்டி லிசவுத்ரைடிங்கில் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்தநாள் விழா வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்க இயக்குநர் எழில் வடிவன் கலைவாணன் தலைமையில் 16.9.2025 செவ்வாய் மாலை ஆறு மணி முதல் எட்டு முப்பது மணி வரை நடைபெற்றது. பெரியார் பன்னாட்டு அமைப்பு அறிவுப் பொன்னி வரவேற்புரை ஆற்றினார்.

மேனாள் வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்கத் தலைவர் அறிவுமணி ராமலிங்கம் தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்தார்.  திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார்.

அய்யாவைப் பற்றிய அழகு மொழிகள்: தந்தை பெரியாரைப் பற்றிய ஏதேனும் ஒரு தகவலை, செய்தியை தர வேண்டும் எனும் அடிப்படையில் மேரி பொன்முடி ,கலைச்செல்வி, சுஜாதா, சத்தியா, ப்ரீத்தி, ஆனி, ஜாய், சத்திய நாராயணன், மோகன்ராஜ், புண்ணியராஜ், கிரானின் ஆகியோர் கருத்துகளை பரிமாறினர்.

இனியா-இலக்கியா பெரியார் பற்றிய பாடலை பாடினர். பெரியார் படத்துக்குமலர் தூவல் மூலம் மரியாதை செலுத்தினர். “தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் அடைந்த புகழை, பெருமையைக் காட்டிலும் தற்போது அதிகமான புகழையும் பெருமையையும் அடைவதாக நாங்கள் கருதுகிறோம். அமெரிக்காவுக்கு நாங்கள் வந்து பல ஆண்டுகள் பெரியாரைப் பற்றிய செய்திகளைவிட  அண்மைக்காலமாக பெரியார் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுவதை பார்த்து மகிழ்கிறோம்.” என்று பேசிய பலரும் குறிப்பிட்டனர்.

அவர் தமது உரையில்பெரியாரின் போராட்ட வாழ்வை, அதனால் ஒடுக்கப்பட்ட மக்கள் அடைந்த உயர்வை, மனித சமத்துவத்தின் மாண்பை, எடுத்துரைப் பதாக அமைந்தது

அவரின் உரையில் கூறியதாவது:  தந்தை  பெரியார்  காங்கிரசில் இருந்த போது 1921,1922இல் காந்தியாரே வியந்த கள்ளுக்கடை மறியல் போர், 1924இல் முதல் மனித உரிமைப் போர் என்று வரலாற்றில் பதியப்படும் வைக்கம் போர், அதே ஆண்டில்  சேரன்மாதேவி குருகுலத்தின் ஜாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான போர்,
1927இல் இந்திய துணைக் கண்டத்தை குலுக்கிய நாகை ரயில்வே தொழிலாளர் போராட்டம்,
1938இல் முதலமைச்சர்  ராஜகோபாலாச்சாரியின் கட்டாய ஹிந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ் மொழியை பாதுகாக்க பெரியாரால் நடத்தப்பட்ட போர், அதே ஆண்டு ரயில்வே நிலையங்களில் உணவகத்தில் பிராமணாள் -இதராள் வேறுபாடு ஒழிப்புக் கிளர்ச்சி,
1947இல் வடநாட்டார் ஆளுநராக நியமிக்கப் படுவதை எதிர்த்து கருப்புக்கொடி காட்டும் போர்
1948,52,53,55 என தொடர்ந்து தமிழ் மொழியை இரண்டாம் தர மொழியாக ஆக்கிடும் ஹிந்தி திணிப்பை எதிர்த்து தொடர் போராட்டம்,
1953இல் புத்தர் விழா நடத்தி பிள்ளையார் உருவ பொம்மை உடைப்புப் போராட்டம்,
1954இல் ராஜகோபால் ஆச்சாரியின் குலக் கல்வித் திட்ட எதிர்ப்புப் போர், 1955இல் இந்திய தேசியக்கொடி எரிப்புப் போர் அறிவிப்பு பிரதமர் நேருவின் வாக்குறுதியால் போராட்ட ஒத்திவைப்பு,
1956இல் ராமன் உருவப்பட எரிப்பு கிளர்ச்சி, 1957இல் உலகை உலுக்கிய ஜாதி ஒழிப்பு போராட்டம்-அரசியல் சட்ட எரிப்புப் போர் 1957,58இல் பிராமணாள் ஓட்டல் முன்பு பிரா மணாள் பெயர் அழிப்பு கிளர்ச்சி  1960ல்  தமிழ்நாடு நீங்கலாக தேசப்பட எரிப்பு போர்
1968இல் தமிழ்நாட்டுக்கு முழு விடுதலை கோரி ‘டில்லி ஆதிக்க கண்டன நாள்’அறிவிப்பு
1969,70இல் கோவில் கருவறை நுழைவுக் கிளர்ச்சி அறிவிப்பு முதலமைச்சர் கலைஞரின் வேண்டுகோளை ஏற்று போராட்டம் ஒத்திவைப்பு.
இப்படி தந்தை பெரியார் பல்வேறு உரிமைப் போராட்டங்களை  தமிழர்தம் வாழ்வு ரிமைக்கான ஆர்ப்பாட்டங்கள் ஏராளம் நடத்தி பெரும்பாலான போராட்டங்களின் நோக்கங்கள் வெற்றி பெற வைத்து ,சிறை சென்று ஈகம் செய்து, பல்லாயிரக்கணக்கான தொண்டர்களையும் நாட்டு மக்களின் நலனுக்காக, உரிமைக்காக ,சமூக நீதிக்காக, ஜாதி ஒழிப்புக்காக, மனித சமத்துவத்துக்காக, பெண் உரிமைக்காக, சுயமரியாதைக்காக பல்வேறு தொண்டறப் பணிகளை வாழ்நாள் முழுக்க செய்திருக்கிறார். அதன் விளைவாக ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் ஒளி வீசியது. கல்வி வேலை வாய்ப்பு சாத்தியமானது. இந்திய துணைக்கண்டத்தில் தனித்துவம் மிக்க மாநிலமாக தமிழ்நாடு திகழ தந்தை பெரியாரின் போராட்டங்கள் பெரியார் தொண்டர்களின் ஈகங்கள் பெரிது தோழர்களே!

கடல் கடந்து வாழக்கூடிய அமெரிக்க வாழ் தமிழர்கள் இன்றைக்கு நுகரும் இந்த வாழ்க்கைக்கு பெரியாரும், பெரியார் தொண்டர் களும் உழைத்திருக்கிறார்கள் என்பதை நினைவு கூறுவோம். பெரியாரின் கொள்கைகளை உலகு மயப்படுத்தி வரும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் 92 வயதிலும் துவளாது, உடல் துன்பங்களை தாங்கிக் கொண்டு அய்யாவின் அரும் பணியை திராவிடர் கழகத்தின் மூலமாக ஆற்றி வருகிறார். தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை தொடர்கிறார்.

செப்டம்பர் 17 தத்துவ பேராசான் தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள். அவரின் படம் ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இருக்கட்டும். ஒவ்வொருவர் உள்ளத்திலும் அவரின் கொள்கை உணர்வாக தங்கட்டும்.  சிறப்பான விழாவை ஏற்பாடு செய்த மருத்துவர் சோம. இளங்கோவன் உள்ளிட்ட தோழர்களுக்கு நன்றி. முடிவில் டாக்டர் சரோஜா இளங்கோவன் நன்றி கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *