‘சாதிப் பெருமை’ நூலினை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை

ஆரியத்தினுடைய விரிவாக்கம்தான் ஆர்.எஸ்.எஸ். அதனுடைய உத்தரவுக்குக் கீழ்ப்படிவதுதான் பா.ஜ.க.!
இந்தியாவில், அரசியல் போராட்டம் என்பது முகப்பு;
ஆனால், உள்ளே இருப்பது முழுவதும் சமுதாய இழிவை நீக்குவதா? நிரந்தரப்படுத்துவதா? என்பதற்கான போராட்டம்தான்!
‘சாதிப் பெருமை’ நூலினை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை

சென்னை,  செப்.14 ஆரியத்தினுடைய விரிவாக்கம்தான் ஆர்.எஸ்.எஸ். அதனுடைய உத்தரவுக்குக் கீழ்ப்படி வதுதான் பா.ஜ.க. இது வெறும் அரசியல் என்று பார்க்காதீர்கள். இந்தியாவில், அரசியல் போராட்டம் என்பது முகப்பு. ஆனால், உள்ளே இருப்பது முழுவதும் சமுதாய இழிவை நீக்குவதா? நிரந்தரப்படுத்துவதா? என்பதற்கான போராட்டம்தான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

Contents

‘சாதிப் பெருமை’ நூலினை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

‘‘சாதிப் பெருமை’’  (Caste Pride) தமிழ்மொழி பெயர்ப்பு நூல் அறிமுக விழா, திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பெரியார் நூலக வாசகர் வட்டம் ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில், கடந்த 11.9.2025 அன்று மாலை 6.30 மணிக்கு சென்னை – பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் நடைபெற்றது. இந்நூல் அறிமுக விழாவிற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ‘சாதிப் பெருமை’ மொழி ஆக்க நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

நூலாசிரியர்  மனோஜ் மிட்டா!

‘‘சாதிப் பெருமை’’  (Caste Pride)  என்ற அருமை நூலின் ஆசிரியர், ஆய்வாளர், சிறந்த ஊடகவியலாளர், ஒரு நல்ல ஆய்வை பல ஆண்டுகளாகச் செய்து, இந்தப் புத்தகத்தை சிறப்பாக எழுதியிருக்கின்ற நூலாசிரியர்  மனோஜ் மிட்டா அவர்களே,

விஜயசங்கர்

இந்த நூலை தமிழில் மொழி பெயர்க்கவேண்டும் என்று சொன்னபோது, அந்தக் கருத்துகள் சிதை வடையாமல், நூலாசிரியர் என்ன கருத்தினை எழுதி யிருக்கிறாரோ, அதை அப்படியே தரக்கூடிய ஆற்றல் உள்ளவர் – கொள்கைப் பின்னணி இருக்கக் கூடிய நம்மு டைய அருமைச் சகோதரர் விஜயசங்கர் அவர்களே,

இவர், தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என்றாலும் சரி, ஆங்கிலத்தில் இருந்து தமிழில்  மொழி பெயர்க்கவேண்டும் என்றாலும் சரி, அந்தப் பணியை மிகச் சிறப்பாக செய்யக்கூடியவர்.

இந்நிகழ்வில் பங்கேற்று இருக்கக்கூடிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தி னைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எழுச்சித் தமிழர்  தொல்.திருமாவளவன்

எல்லாவற்றையும்விட, இந்த நூலுக்கு நல்ல ஆய்வுரையை மிகச் சிறப்பாகத் தந்த பெருமை நம்முடைய எழுச்சித் தமிழர்  தொல்.திருமாவளவன் அவர்களுடையது நீண்ட விளக்கவுரை  சிறப்பாக அமைந்திருக்கின்றது. மூத்த சகோதரர் என்ற முறையில், அவரை நான் பாராட்டுவது புதிதல்ல.

பெரியார் திடல்தான் எங்களுடைய தாய்க்கழகம்!

அவர், ஒன்றை தெளிவுபடுத்தினார். பெரியார் திடல்தான் எங்களுடைய தாய்க்கழகம் என்று சொன்னார்.

பார்ப்பனீயமும், ஆரியமும் இன்றைக்கு ஏதாவது செய்து தி.மு.க. கூட்டணியை அசைத்துவிடலாம் என்று நினைக்கின்றன. நீங்கள் என்ன செய்தாலும் அசைக்க முடியாத ஒருவராக, எங்களின் மூன்றாவது குழல் ஒலிக்கும்.

அரசியல் கூட்டணியல்ல –
கொள்கைக் கூட்டணி!

மூன்று குழல்களும் இடம்பெற்று ஒருங்கிணைத்துள்ள  கூட்டணியை உங்களால் அசைக்க முடியாது. இது வெறும் அரசியல் கூட்டணியல்ல – கொள்கைக் கூட்டணியாகும்.

2026 இல் வருகின்ற தேர்தலிலும் இந்தக் கூட்ட ணியே வெற்றி வாகை சூடப்போவது உறுதி!

இந்தக் கூட்டணி உடைந்துவிடும் என்று சொன்ன வர்கள், கேள்வி கேட்டவர்கள் எல்லாம் அந்தக் கூட்டணியை விட்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள்; பலரை நாடிக் கொண்டிருக்கிறார்கள். கட்சிகளே பெயர் மாற்றம் அடைகின்றது இப்போது. நல்ல வாய்ப்பு அது.

அண்ணாவிற்கு இருந்த ஓர் அவப்பெயர்  இப்போது மாறியிருக்கிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதற்குப் பதிலாக அமித்ஷா தி.மு.க. என்ற அளவிற்கு வருகிறபோதுகூட, எத்தனையோ மாற்றங்கள் வரலாம்; ஆனால், அந்த மாற்றத்தை இவரிடமிருந்து எதிர்பார்த்தால், ஏமாந்து போவீர்கள் என்பதற்கான அடையாளம்தான் அவருடைய இன்றைய உரை.

பெரியார் திடலில் உருவானவர்!

ஏனென்றால், அவர் பெரியார் திடலில் உருவானவர். இந்தத் திடல்தான் எல்லோருக்கும் மூலிகை.

கலைஞர் அவர்கள் ஒருமுறை சொன்னார், ‘‘கீரியும், பாம்பும் சண்டை போட்டால், கீரியின் உடலில் ரத்தக் காயம் ஏற்படும். அந்த ரத்தக் காயத்தை சரிப்படுத்துவதற்காக, ஒரு மூலிகையில் போய் கீரி புரளுமாம். அந்த ரத்தக்காயம் சரியாகிவிடும். அதுபோலத்தான், எப்போதெல்லாம் ஆரியத்தால், தாக்கப்படுகின்றமோ, அந்தக் காயங்கள் ஆறுவதற்கான மாமருந்து பெரியார் திடல்தான்’’ என்றார்.

இன்றைக்கு எழுச்சித் தமிழரின் உரையைக் கேட்டால் என்ன சொல்வார்கள் என்றால், ‘‘என்ன, இவரும் போய் பெரியார் திடலில் சேர்ந்துவிட்டாரே’’ என்று.

பகுத்தறிவு உள்ள எவரும், சுயமரியாதை உள்ள எவரும், தெளிவுள்ள எவரும், உறுதியுள்ள எவரும் பெரியார் திடலிலிருந்துதான் புறப்பட்டு இருப்பார்களே தவிர, வேறெங்கும் இருந்து அல்ல.

அந்த அளவிற்கு மிக அற்புதமான உரையாற்றிய எழுச்சித் தமிழர் அவர்கள், சிறப்பான பல கருத்துகளைச் சொன்னார்.

படித்தால் மட்டும் போதாது; பரப்புங்கள்!

தமிழாக்கம் செய்யப்பட்ட இந்த நூலை பலரும் இங்கே வாங்கியிருக்கிறீர்கள். இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்தால் மட்டும் போதாது; அதனைப் பரப்புங்கள். அதைத்தான், அவரும்  இங்கே சொன்னார்.  அதை நான் வழிமொழிகிறேன்.

எப்போதும் அவர் முன்மொழிவார்; நான் வழிமொழி வேன். அல்லது நான் முன்மொழிவேன், அவர் வழிமொழிவார்.

இந்தப் புத்தகத்தினுடைய கருத்துகள் நாடெங்கும் போய்ச் சேரவேண்டும். இந்தப் புத்தகம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. மான வாழ்வு, உரிமை வாழ்வுக்குரிய மிகப்பெரிய தத்துவங்களை நமக்குச் சொல்கிறது.

இது வெறும்  புத்தகமல்ல – மிகச் சிறந்த ஒரு போரா யுதமாகும்.

தமிழ்நாட்டில் திராவிட ஆட்சியின் வேரைப் பிடுங்கி எறிவோம் என்று வடக்கே இருந்து ஒருவர் சொன்னார்.

ஆனால், வேர் எங்கே இருந்து தெரியாதவர்கள்தான் அவர்கள். அந்த வேருக்கு மூலம் இதுபோன்ற புத்தகங்களில் உள்ள கருத்துகளில்தான் இருக்கிறது.

உதாரணத்திற்கு உங்களுக்குச் சொல்கிறேன், இந்தப் புத்தகத்தைப் படிக்கவேண்டும்; அருள்கூர்ந்து பரப்ப வேண்டும்.

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களே நொந்து போகக்கூடிய அளவிற்குச் செய்திருக்கிறார்கள்.

“தந்திர மூர்த்தி போற்றி!
தாசர் தம் தலைவா போற்றி!’’

அரசியலமைப்புச் சட்டத்தை வரையறுக்கக் கூடிய குழுவில்,  ‘‘தன்னை ஒரு வாடகைக் குதிரையாகத்தான் பயன்படுத்தினார்கள்’’ என்று பாபா சாகேப் அம்பேத்கர் சொல்லக்கூடிய அளவிற்குத் தள்ளியது ஆரியம்.

‘ஆரிய மாயை’ என்றாலே, “தந்திர மூர்த்தி போற்றி! தாசர் தம் தலைவா போற்றி!’’ என்று அண்ணா சொன்னார்.

தன்மானத்தைச் சொல்லக்கூடிய சுயமரியாதை இயக்கம் தலைவணங்கி வாழ்த்துகிறது!

இந்தப் புத்தக நூலாசிரியர் மனோஜ் மிட்டா அவர்கள், பல விஷயங்களை வெளியே கொண்டு வந்திருக்கின்றார்.  அவருக்குத் தமிழ்கூறும் நல்லுலகம் மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர், தன்மானத்தைச் சொல்லக்கூடிய சுயமரியாதை இயக்கம் தலைவணங்கி வாழ்த்துகிறது.

இந்தப் புத்தகம் உருவாவதற்கு அவர் ஏழாண்டு காலம் உழைத்திருக்கிறார். திடீரென்று, புத்தகம் எழுதுகிறேன் என்று சொல்லி, அதிலிருந்து கொஞ்சம், இதிலிருந்து கொஞ்சம் என்று புத்தகமாக கொண்டுவரவில்லை. பல ஆய்வுகளைச் செய்துதான் இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார்.

தேனீக்கள் பல இடங்களுக்குச் சென்று தேனைச் சேகரித்துக் கொண்டு வந்து தேன்கூட்டில் சேகரித்து வைக்கும். அந்தத் தேனை, மருந்தில் குழைத்துச் சாப்பிடவேண்டும் என்பதற்காக நாம் தேனை மட்டும்தான் எடுக்கிறோம். அதற்காக அந்தத் தேனீ பட்டிருக்கின்ற பாடு என்பது மிகவும் முக்கியமாக எண்ணத்தக்கது.

தேனீக்களுக்கு இரண்டு அம்சங்கள் உண்டு. தேனீ தேனையும் தரும், யாராவது தேன் கூட்டைக் கலைத்தால், கொட்டவும் செய்யும். அந்த ஆற்றல் இந்தப் புத்தகத்திற்கு உண்டு.

நம்முடைய எழுச்சித் தமிழர் அவர்கள், என்ன புத்தகம் வெளியிடப் போகிறோமோ, அந்தப் புத்தகத்தை மேடையிலேயே படித்துவிடுவார், மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே! காதை அங்கே கொடுப்பார்; கண்களை புத்தகத்தின்மீது வைத்திருப்பார்; மூளை வேறொன்றை சிந்தித்துக் கொண்டிருக்கும்.

கோடுகளால்தான் மிக முக்கிய ஆபத்துகளே இருக்கின்றன!

புத்தகத்தைப் படித்துக் கொண்டே சில முக்கிய கருத்துகளை, முக்கிய வரிகளை கோடிட்டுக் கொண்டே வருவார். ஏனென்றால், கோடுகளால்தான் மிக முக்கிய ஆபத்துகளே இருக்கின்றன.

அதனால் நாங்கள் கோடு போட்டு, கோடு போட்டு புத்தகத்தைப் படிக்கின்றோம்.

அதில் மிக முக்கியமான ஒரு செய்தி – இந்தியாவில், மகாராட்டிர மாநிலம், பாபா சாகேப் அம்பேத்கர் மண். அதேபோன்று தமிழ்நாடு, தந்தை பெரியாருடைய மண்.

தந்தை பெரியாரும், அம்பேத்கரும் ஒரு நாணயத்தினுடைய இரண்டு பக்கங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

மனக் தாதா பாய் என்ற
தாதாப் நவ்ரோஜி

அந்த மாநிலத்திலிருந்து ஒரு மனிதநேயர். இன்னுங்கேட்டால், தலித் என்று அழைக்கப்படக்கூடிய ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் அல்ல.

மனக் தாதா பாய் என்ற தாதாப் நவ்ரோஜி அவர்கள், மத்திய சட்டசபைக்குப் போகிறார்.

‘‘மக்களைப் பிரித்து, தீண்டாதவர்கள், எட்டி நில் என்றெல்லாம் சொல்லி அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார்களே, இதுதான் உன்னுடைய இந்து மதம் என்று சொல்லுகிறாயே, இந்த மதத்தைக் கொஞ்சம் சீர்திருத்தவேண்டாமா?’’ என்று வெள்ளைக்காரர்கள் ஆண்ட அந்தக் காலத்திலேயே தனி நபர் மசோதாவைக் கொண்டு வருகிறார்.

இது மிக முக்கியமான தகவல். இந்தத் தகவலை, இந்நூலாசிரியர் மனோஜ் மிட்டா அவர்கள்தான் கொடுத்திருக்கிறார்.

நமக்கே பல அரிய தகவல்கள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. இதைப் படித்தவுடன் எனக்கு ஒரு வியப்பான தகவல் கிடைத்தது.

அந்த மசோதாவிற்கு ஆதரவு கொடுங்கள் என்று மனக் ஜி கேட்கிறார். ஆதரவு கொடுக்க யாரும் முன்வர வில்லை.

மனிதநேயத்தைப்பற்றி பேசுகிறார்கள், ஒடுக்கப் பட்ட சமுதாயத்தைப்பற்றி பேசுகிறார்கள். நாயைக் கொஞ்சுகிறான், பூனையை எடுத்து முத்தம் கொடுக்கி றான். ஆறறிவு படைத்த என்னுடைய சகோதரனை, எட்டி நில், தள்ளி நில், கிட்டே வராதே, உன்னைத் தொடக்கூடாது, உன்னைப் பார்க்கக் கூடாது என்று சொன்னார்கள்.

ஆரியத்தினுடைய விரிவாக்கம்தான்
ஆர்.எஸ்.எஸ். அதனுடைய உத்தரவுக்குக் கீழ்ப்படிவதுதான் பா.ஜ.க.!

அவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பது பற்றி இங்கே நம்முடைய திருமா அவர்கள் சொன்னார்கள். செருப்புப் போடாதே என்பதற்கு, அறிவியலைக் காரணம் காட்டுகிறார்கள்.  இதுதான் ஆரியத்தின் வேலை. ஆரியத்தினுடைய விரிவாக்கம்தான் ஆர்.எஸ்.எஸ். அதனுடைய உத்தரவுக்குக் கீழ்ப்படிவதுதான் பா.ஜ.க.

சமுதாய இழிவை நீக்குவதா? நிரந்தரப்படுத்துவதா? என்பதற்கான போராட்டம்தான்!

இது வெறும் அரசியல் என்று பார்க்காதீர்கள். இந்தி யாவில், அரசியல் போராட்டம் என்பது முகப்பு. ஆனால், உள்ளே இருப்பது முழுவதும் சமுதாய இழிவை நீக்குவதா? நிரந்தரப்படுத்துவதா? என்பதற்கான போராட்டம்தான்.

1916 ஆம் ஆண்டு மனக் ஜி கொண்டு வந்த மசோதாவை ஆதரிப்பதற்கு யாரும் முன்வரவில்லை.

அப்போது முதன்முறையாக, அந்த மசோதாவிற்கு ஆதரவு கொடுத்தவர் யார் தெரியுமா?

தெரிந்துகொள்ளுங்கள் –

திராவிட இயக்கம் என்ன செய்தது? ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்று சில கூலிப் பட்டாளங்களை விட்டுக் கேட்கிறார்கள்.

முன்பெல்லாம், திராவிட இயக்கத்தைச் சொன்னார்கள். அந்தப் பட்டியலில், சரியாகவோ, தவறாகவோ ஒன்றைச் சொல்லுகிறார்கள்.

திருமாவளவன் போன்ற எழுச்சியுள்ள, கொள்கை உள்ள உணர்வாளர்களைப்பற்றி அங்கேயே இருக்கின்ற சில கூலிப் பட்டாளங்களைப் பிடித்து, ஒரு அவதூறை உண்டாக்கலாமா? என்பதைப் போன்றே – தவறான செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஈழவர், தீயர் தெருக்களில் நடப்பதற்கே  உரிமை இல்லாமல் இருந்தது!

அன்றைய காலகட்டத்தில், கேரள மாநிலம் திரு விதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கத்தில், தாழ்த்தப்பட்ட குலத்தோர் என்று அழைக்கப்பட்ட ஈழவர், தீயர் தெருக்களில் நடப்பதற்கே  உரிமை இல்லாமல் இருந்தது. அவர்கள் போகும்போது, ‘ஊ’ என்று சத்தம் எழுப்பிக் கொண்டே செல்லவேண்டும். எச்சிலைக் கீழே துப்பக்கூடாது. அதற்காக, கழுத்தில் ஒரு குடுவையைக் கட்டிக்கொண்டு, எச்சில் ஊறினால், அந்தக் குடுவையிலே துப்ப வேண்டும்.

இந்தத் தகவல்கள் எல்லாம் மண்டல் கமிஷன் அறிக்கையில் பதிவாகியிருக்கிறது.

என்னங்க, அவர்கள் மட்டும் கழுத்தில் குடுவையைக்  கட்டிக் கொள்ளவேண்டுமா? என்று கேட்டால், அதற்கு என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

பொருந்தாத விளக்கத்தைச் சொல்கிறார்கள் அவர்கள்!

அந்தக் காலத்திலேயே சயின்சைக் கண்டு பிடித்தி ருக்கிறார்கள் பாருங்கள், அது சாதாரணமானதல்ல. நடக்கும்போது, கண்ட இடத்தில் எச்சில் துப்பக்கூடாது என்பதற்காகத்தான், கழுத்தில் குடுவையைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். சுகாதாரத்திற்காகத்தான். இதை நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு, ஸநாதனம் என்று சொல்கிறீர்களே? என்றனர்.

(தொடரும்)

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *