அரியலூர், செப், 13- அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் BS-V1 இரண்டு புதிய புறநகர் பேருந்துகள் மற்றும் ஒரு புதிய குளிர் சாதன பேருந்து சேவையையும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகம் சார்பில், பொதுமக்கள், மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள் உள்ளிட் டோர்களுக்கு அரசு பேருந்து சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் (லிட்) திருச்சி மண்டலம், ஜெயங்கொண்டம் மற்றும் குன்னம் கிளை சார்பில் BS-V1 இரண்டு புதிய புறநகர பேருந்துகளையும் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்தின் சார்பில் புதிய குளிர் சாதன பேருந்து சேவையையும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதன்படி குன்னம் கிளை புறநகர் பேருந்து எண்.TN 45 /N-4811 தஞ்சாவூரில் இருந்து அரியலூர், பெரம்பலூர் வழியாக சேலம் வழித்தடத்திலும், ஜெயங்கொண்டம் கிளை புறநகர் பேருந்து எண்.TN 45/N-4809 ஜெயங்கொண்டத்தில் இருந்து விருத்தாச்சலம், விழுப்புரம் வழியாக சென்னை கிளாம்பாக்கம் வழித்தடத்திலும், விழுப்புரம் கோட்டத்தின் சார்பில் புதிய குளிர் சாதன பேருந்து அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து ஜெயங்கொண்டம், விருத்தாசலம், விழுப்புரம் வழியாக மாதவரம் வரை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.