சுராசந்த்பூர், செப்.13 பிரதமர் நரேந்திர மோடியின் மணிப்பூர் வருகையை முன்னிட்டு, அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு வளைவுகள் அடித்து நொறுக்கப்பட்டதால், மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பல்வேறு அமைப்புகள் இன்று (செப். 13) முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
பின்னணி
மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கிய மெய்தி மற்றும் குக்கி-சோ இனக்குழுக்களுக்கு இடையேயான வன்முறையில் 260–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50,000க்கும் அதிக மானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த வன்முறையைத் தொடர்ந்து, மாநி லத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. வன்முறைக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி இன்று (செப்.13) மணிப்பூர் செல்கிறார். இம்பால் பள்ளத்தாக்கு மற்றும் குக்கி மக்கள் வசிக்கும் சுராசந்த்பூர் ஆகிய இரு பகுதிகளுக்கும் அவர் செல்லவுள்ளார். இந்தப் பயணத்தின்போது, சுமார் ரூ.8,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களையும் அவர் அறிவிக்க உள்ளார்.
வன்முறைச் சம்பவம்
பிரதமரின் வருகைக்கு குக்கி-சோ அமைப்புகள் வரவேற்பு தெரிவித்தாலும், சில நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில், சுராசந்த்பூர் மாவட்டத்தில் பிரதமரை வரவேற்பதற்காக அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள், கொடிகள் மற்றும் விளம்பரப் பதாகைகள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் ஹெலிகாப்டரில் வந்திறங்கும் பி.எஸ்.எஃப். ஹெலிபேட் அருகே உள்ள கிராமங்களிலும் இந்த வன்முறைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வன்முறையில் ஈடுபட்ட கும்பலை காவல்துறையினர் தடுத்தபோது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சுராசந்த்பூர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும், அப்பகுதி ‘ட்ரோன்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட மண்டலமாக’ அறி விக்கப்பட்டுள்ளது. மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆறு தீவிரவாத அமைப்புகளின் கூட்டமைப்பான ஒருங்கி ணைப்புக் குழு, இன்று (செப்.13) மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கிடையே, மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் உள்ளூர் நிர்வாகிகள் 13 பேர் பதவி விலகி தங்களின் பாஜக கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டையை குப்பையில் வீசினார்கள்.