ஓசூர், செப்.12 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.1,100 கோடி முதலீட்டில் 1,200 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கிடும் வகையில் மல்டிலேயர் மற்றும் எச்.டி.அய். பிரிண்டட் சர்கியூட் போர்ட்ஸ் எனும் புதிய உற்பத்தி தொழிற் சாலையை தொடங்க உள்ளது.
இதேபோன்று ஓசூர் சிப்காட் குருபரபள்ளி தொழிற்பூங்காவில் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனம் 400 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் ரூ.450 கோடி முதலீட்டில் 2 புதிய விரிவாக்க திட்டங்களை செயல்படுத்த உள்ளது.. புதிய தொழிற்சாலை மற்றும் விரிவாக்க திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (11.9.2025) அடிக்கல் நாட்டினார். மேலும் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட புதிய உற்பத்தி பிரிவையும் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வலுசேர்க்கும். தமிழ்நாட்டின் மத்திய மற்றும் தென் மாவட்டங்களிலும் இதுபோன்ற விரிவாக்க திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டின் திறன் வளத்தை கருத்தில் கொண்டு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மய்யத்தை சென்னையிலும், கோவையிலும் அமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் நீங்கள் மேற்கொள்ளும் தொழில் முயற்சிகளுக்கு தேவையான எல்லா உதவிகளையும் தி.மு.க. அரசு முழுமையாக வழங்கும் என்றார்.