வாஷிங்டன், செப்.11- ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது அய்ரோப்பிய நாடுகள் 100 சதவீதம் வரி விதிக்க வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீத வரி விதித்தது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதித்தது. இதனால் மொத்த வரி 50 சதவீதமாக உயர்ந்தது.
இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி தனது நிலைப்பாட்டில் இருந்து சற்று இறங்கி வந்தார். பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். இதனை பிரதமர் மோடியும் ஏற்றுக்கொண்டார்.
இதனிடையே இந்தியாவுக்கு எதிராக,டிரம்ப் மீண்டும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவின் பொருளாதார பாதிப்பை அதிகரிப்பதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகளின் உயர் அதிகாரிகள் வாஷிங்டனில் கூடி ஆலோசனை நடத்தினர்.
டிரம்ப் வலியுறுத்தல்
அப்போது, டிரம்ப் தொலைபேசி மூலம் அதிகாரிகளை தொடர்பு கொண்டார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா மீது 100 சதவீதம்வரை வரி விதிக்குமாறு அய்ரோப்பிய நாடு களை அவர் கேட்டுக்கொண்டார். ஒரு ஆங்கில பத்திரிகையில் இத்தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் கூட்டு முயற்சியின் ஒரு அங்கமாக டிரம்ப் இதை வலியுறுத்தியதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியா, சீனா மீது அய்ரோப்பிய நாடுகள் விதிக்கும் எந்த வரியையும் பிரதிபலிக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக ஒரு அமெரிக்க அதிகாரி கூறினார்.