பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு!

4 Min Read

அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் ஆற்றிய உரை
‘‘இதோ பெரியாரில் பெரியார்’’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள புத்தகத்திலிருந்து
10 கேள்விகள் கேட்கும் போட்டி நடத்தப்படும்!
அதற்கான பதிலை சரியாக எழுதும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்; ஆசிரியர்களுக்கும் போட்டி தனியே நடத்தப்படும்!

பாபநாசம், செப்.11  அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் ஆற்றிய உரைகளில் மிகச் சிறந்த உரையினை ‘‘இதோ பெரியாரில் பெரியார்’’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டு இருக்கின்றோம்.  அந்தப் புத்தகத்தை மாணவச் செல்வங்களாகிய நீங்கள் எல்லோரும் படித்து, அதைப்பற்றி ஆய்வு செய்வதற்கு வாய்ப்பாக, ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்யவிருக்கின்றோம். அந்தப் புத்தகத்திலிருந்து 10 கேள்விகள் கேட்கப்படும். அதற்கான பதிலை சரியாக எழுதும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்; ஆசிரியர்களுக்கும் இப்போட்டி தனியே நடத்தப்படும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பட்டுக்கோட்டை அழகிரி மேல்நிலைப்பள்ளி சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை!

கடந்த 8.9.2025 அன்று தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில், திராவிடர் சமுதாய நல  கல்வி அறக்கட்டளையின்கீழ் இயங்கிவரும் பட்டுக்கோட்டை அழகிரி மேல்நிலைப் பள்ளியின் செயலாளர் கலியமூர்த்தி, பள்ளியின் தலைமைச் செயலாளர் சா.வரதராஜன், நிர்வாக செயலாளர் ம.அண்ணாதுரை, நிதி செயலாளர் சே.ஆனந்தகுமார் ஆகியோரால் “பெரியார் உலக’’த்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களிடையே திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரையாற்றினார்.

இந்தியா

அவரது கருத்துரை வருமாறு:

எல்லையற்ற மகிழ்ச்சி!

திராவிட இயக்கத் தளபதிகளில் முன்னணி தளபதியான சுயமரியாதை வீரர் பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களின் பெயரால், இந்தப் பகுதியில் இவ்வளவு அற்புதமான பள்ளி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றபோது எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

அருமையான மாணவச் செல்வங்கள், ஆசிரியர்ப் பெருமக்கள், தலைமை ஆசிரியர், பள்ளி நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்கள் அத்துணைப் பேருக்கும் எங்களுடைய இயக்கத்தின் சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏறத்தாழ 700 பிள்ளைகள்  படிக்கின்ற பள்ளி இது. அதில் மாணவர்கள் எவ்வளவு? மாணவிகள் எவ்வளவு? 400 மாணவர்கள், 300 மாணவிகள் என்று சொன்னார்கள். கொஞ்சம்தான் வித்தியாசம் இருக்கிறது. அடுத்ததாக 50 விழுக்காடு அளவிற்குச் சமமாக வந்துவிடும்.

கவனச் சிதறல்கள் இல்லாமல்….

மிகச் சிறப்பான வகையில் இந்தப் பள்ளி, இயற்கையான சூழலில், பிள்ளைகளின் கவனச் சிதறல்கள் இல்லாமல் நடைபெறுகிறது.

ஏனென்றால், நகரப் பகுதிகளில் கவனச் சிதறல்கள் இருக்கும். இந்தச் சுற்றுச்சூழலைப் பார்த்தாலே, மிகச் சிறப்பாக இருக்கிறது.

ஒரு பள்ளிக்கூடம் நடத்துவதில் என்னென்ன சிக்கல்கள் இருக்கின்றன என்பது எங்களுக்கும் தெரியும்.

பெற்றோர் – ஆசிரியர் சங்கத்தினை மிகச் சிறப்பாக அமைத்திருக்கிறார்கள். இதை ஒரு தனிக் கல்விக் கூடமாகக் கூட கருதாமல், நாடு தழுவிய அளவில், பெரியார் கல்வி நிறுவனங்கள் என்று, திருச்சியில் தந்தை பெரியார் தொடங்கிய ஒரு கல்விக் குடும்பம் இருக்கிறது. அந்தக் கல்விக் குடும்பத்தில் இந்தப் பள்ளியும் சேர்க்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் தனி அக்கறை செலுத்துவோம்!

இந்தப் பள்ளியினுடைய வளர்ச்சியில், நாங்கள் தனி அக்கறை செலுத்துவோம். மீண்டும் இன்னொரு வாய்ப்பில் இங்கே வந்து நீண்டதொரு உரையாற்றுவேன்.

தந்தை பெரியார் அவர்களை உலகமயமாக்கிக் கொண்டிருக்கின்றோம். உலகம் பெரியார் மயமாகிக் கொண்டிருக்கின்றது.

திருச்சி சிறுகனூரில் 40 ஏக்கர் பரப்பளவில், சுமார் 100 கோடி ரூபாய் செலவில் “பெரியார் உலகம்’’ அமையவிருக்கிறது. நம்முடைய மாணவச் செல்வங்களையெல்லாம் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும்போது, தஞ்சையில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு (நிகர்நிலை) வாருங்கள். அங்கே உள்ளவற்றை சுற்றிப் பாருங்கள். (ஆண்டிற்கொருமுறை சென்று வருகிறோம் என்று பள்ளி பொறுப்பாளர்கள் சொன்னார்கள், அதைக் கேட்டவுடன், மிக்க மகிழ்ச்சி என்றார் ஆசிரியர்).

பல்கலைக் கழகத்தோடு ஒரு தொடர்பு ஏற்படுத்தக் கூடிய நிறுவனமாக இப்பள்ளியை ஆக்குகின்றோம்.

ஆகவே, இந்தப் பள்ளி மாணவர்கள், படிப்பை முடித்தவுடன், மேற்கொண்டு என்ன படிக்கவேண்டும் என்கின்ற ஆலோசனையைக் கேட்கலாம். பல்கலைக் கழகத்திலிருந்து பேராசிரியர்களையும் இங்கே வரவழைத்து, உங்களுக்கு வகுப்பெடுக்கச் சொல்கி றோம்.

இந்தப் பள்ளி, இன்றுமுதல் பெரியார் கல்வி நிறு வனங்களோடு சேர்ந்த ஒரு பள்ளியாகும். இப்பள்ளியின் வளர்ச்சியில் எங்களுக்கு அக்கறை உண்டு, கவலை உண்டு.

‘‘இதோ பெரியாரில் பெரியார்!’’

பட்டுக்கோட்டை அழகிரி அவர்களைப்பற்றி ஒவ்வொரு மாணவர்களும் தெரிந்துகொள்ளவேண்டும்.

அதற்காக ஒரு அறிவிப்பை வெளியிடுகிறோம். அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் ஆற்றிய உரைகளில் மிகச் சிறந்த உரையினை ‘‘இதோ பெரியாரில் பெரியார்’’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டு இருக்கின்றோம்.

அந்தப் புத்தகத்தை மாணவச் செல்வங்களாகிய நீங்கள் எல்லோரும் படித்து, அதைப்பற்றி ஆய்வு செய்வதற்கு வாய்ப்பாக, ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்யவிருக்கின்றோம்.

முதல் பரிசு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்!

அந்தப் புத்தகத்திலிருந்து 10 கேள்விகள் கேட்கப்படும். அதற்கான பதிலை சரியாக எழுதும் மாண வர்களுக்கு முதல் பரிசாக ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் அளிக்கப்படும். இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசும் வழங்கப்படும்.

அதேபோன்று, ஆசிரியர்களுக்கும்  அந்தப் போட்டி வைக்கப்படும். ஆசிரியர்களுக்குத் தனி பரிசு வழங்கப்படும். இயக்கத்தின் சார்பாக ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும். ஏனென்றால், அவர்களையெல்லாம் ஊக்கப்படுத்துவதற்காகத்தான். பணத்திற்காக அல்ல.

செப்டம்பர் மாதம் இறுதியில்
போட்டி நடைபெறும்!

ஆகவே, ‘‘இதோ பெரியாரில் பெரியார்’’ புத்தகத்தை நன்றாகப் படித்து, செப்டம்பர் மாதம் இறுதியில் இப்போட்டிகளை நடத்தி, அக்டோபர் மாதம் பரிசுகள் வழங்கப்படும். அதற்கான  ஏற்பாடுகளைச் செய்வதற்கு தோழர்கள் ஒத்துழைப்புக் கொடுக்கவேண்டும்.

சுயமரியாதை இயக்க நூற்றாண்டில், இப்படி ஒரு பள்ளி மிகச் சிறப்பாக இயங்குவதற்காக பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களுடைய அன்பிற்கும், வரவேற்பிற்கும், நன்கொடைக்கும் நன்றி!

பெரியார் கல்வி நிறுவனங்களுக்கு, இப்பள்ளி மாண வர்களை சுற்றுலா போன்று அழைத்துச் செல்லுங்கள்.  இப்பள்ளி மாணவர்கள் மேற்படிப்புப் படிக்கக் கூடியவர்களுக்கு, பெரியார் பல்கலைக் கழகத்தில் (நிகர்நிலை) முன்னுரிமை கொடுக்கப்படும்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *