டில்லி, செப்.10 குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் சி.பி. ராதா கிருஷ்ணன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து, காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டியிட்ட பி. சுதர்சன் ரெட்டி 300 வாக்கு களைப் பெற்று தோல்வி அடைந் தார். இந்த வெற்றிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் சி.பி. ராதா கிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து, காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட் டுள்ளது. அந்தப் பதிவில், “குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக நின்றன. எதிர்க்கட்சிகளின் செயல்திறன் சந்தேகத்திற்கு இடமின்றி மரியாதைக்குரியதாக இருந்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், “கூட்டணி வேட்பாளர் ஓய்வு பெற்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி 40% வாக்குகளைப் பெற்றார். ஆனால் 2022-இல் நடந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெறும் 26% வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தன. எனவே, பா.ஜ.க.வுக்கு எண்கணித முறையில் வெற்றி என்றாலும், உண்மையில் அது தார்மீக மற்றும் அரசியல் ரீதியாக ஒரு தோல்விதான். சித்தாந்த ரீதியான போர் குறையாமல் தொடர்கிறது” என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை, பா.ஜ.க.வின் வெற்றி ஒருபுறம் இருந்தாலும், எதிர்க்கட்சிகள் தங்கள் பலத்தை அதிகரித்துள்ளன என்பதைக் காட்டுகிறது.