புதுடில்லி, செப். 8- வாக்குத் திருட்டுக்கான முக்கிய ஆதாரத்தை தேர்தல் ஆணையம் மறைப்பதாக மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த 2023ஆம் ஆண்டு கருநாடக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, ஆலந்த் தொகுதியில் பெருமளவிலான வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது. படிவம் 7இல் தில்லுமுல்லு செய்து ஆயிரக் கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. அதை காங்கிரஸ் கட்சி அம்பலப்படுத்தியது.
அது தொடர்பாக அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், 5 ஆயிரத்து 994 தில்லுமுல்லு விண்ணப்பங்கள் வந்தது தெரியவந்தது. இது, வாக்குத் திருட்டு ஆகும்.
சி.அய்.டி. விசாரணை
குற்றவாளிகளை பிடிக்க கருநாடக காங்கிரஸ் அரசு சி.அய்.டி. விசாரணைக்கு உத்தர விட்டது. ஆனால், முன்பு முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்ட தேர்தல் ஆணையம், தற்போது, குற்றவாளிகளை பிடிக்க தேவையான முக்கிய ஆதாரங்களை முடக்கி வைத் துள்ளது. ஏன் தேர்தல் ஆணையம் தகவலை மறைக்கிறது?
யாரை பாதுகாக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது? சி.அய்.டி. விசாரணையை சீர்குலைக்க பா.ஜனதாவின் அழுத்தத்துக்கு தேர்தல் ஆணையம் வளைந்து கொடுக்கிறதா? வாக்களிக்கும் தனிநபரின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அனுமதி மறுப்பு
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு துறையின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
‘மராட்டிய மாநில சட்ட மன்றத் தேர்தல் எப்படி திருடப் பட்டது?’ என்ற ‘யூ டியூப்’ ஆவணப்பட இணைப்புடன் மராட்டிய மாநில காங்கிரஸ் தொண்டர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்ப விரும்பினோம். அரசு விதிமுறைப்படி, அதற்கு ஒப்புதல் கோரி, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் விண்ணப் பித்தோம்.
ஆனால், அந்த ஆவணப்படத்தில் எதிர்ப்பு உள்ளடக்கம் இருப்பதாக கூறி, ஆணையம் அனுமதி மறுத்து விட்டது.
மாணிக்கம் தாகூர்
தகவல்களை மறைப்பதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம், தேர்தல் ஆணையம், தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் ஆகியவற்றுக்கு இடையே எப்படி சிறப்பான ஒருங்கிணைப்பு நிலவுகிறது?
மராட்டிய தேர்தலில் மோசடி நடந்திருப்பது இதை விட வேறு அறிகுறி வேண்டுமா?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அவரது பதிவை இணைத்து, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப் பினர் மாணிக்கம் தாகூர் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “மராட்டிய தேர்தல் திருடப் படவில்லை என்றால், யூடியூப் இணைப்பு குறித்து ஏன் பயப்பட வேண்டும்?” என்று கேட்டுள்ளார்.