கட்டாக், செப். 7 மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தில் சிறுவன் ஒருவன் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிகழ்வைத் தொடர்ந்து, மந்திரவாதி எனச் சந்தேகிக்கப்பட்ட ஒரு இணையர் அடித்துக் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களது வீட்டையும் கும்பல் ஒன்று தீ வைத்து எரித்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 5.9.2025 அன்று நிஷ்சிந்தாபூர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதா னத்திற்குச் சென்ற 3 ஆம் வகுப்பு மாண வன் சுவர்ணம்பா மொண்டல் வீடு திரும்ப வில்லை. பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல்துறை தேடுதல் வேட்டையைத் தொடங்கியது. நேற்று (6.9.2025) அன்று சிறுவனின் உடல், அதே பகுதியில் உள்ள ஒரு குளத்தில் கண்டெடுக்கப்பட்டது.
சிறுவனின் உறவினர்கள், குளத்தின் அருகே வசித்து வந்த உத்பல் பிஸ்வாஸ் மற்றும் சோமா பிஸ்வாஸ் என்ற இணையர்தான் சிறுவனைக் கொலை செய்திருக்க வேண்டும் எனச் சந்தேகித்தனர். இதன் காரணமாக, கும்பலாகச் சென்ற அவர்கள் அவர்களைக் கடுமையாகத் தாக்கியதுடன், அவர்களது வீட்டிற்கும் தீ வைத்தனர்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த இணையரை காவல்துறை மீட்டு மருத்து வமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த இணையினரின் உறவினர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நாங்கள் எங்கு சென்று வாழ்வது?
கொல்லப்பட்ட உத்பல்பிஸ்வாஸ் குளத்திற்கு அருகில் தனக்குச் சொந்தமான இடத்தில் விவசாயம் செய்துவருகிறார். அந்த இடத்தை இறால் பண்ணை அமைக்கத் தருமாறு பலமுறை ஊரில் உள்ள சில உயர்ஜாதியினர் கேட்டபோது, ‘‘இதுமட்டுமே எங்களது வாழ்வாதாரம்; இதைக் கொடுத்துவிட்டால் நாங்கள் எங்கு சென்று வாழ்வது’’ என்று கேட்டு, அவர் அந்த இடத்தை தர மறுத்துவிட்டார். இதை சாக்காகவைத்தே மந்திரவாதி என்று வதந்தி யைப் பரப்பி அவர்களை கொலை செய்யத் தூண்டி இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது
இந்தியாவில் குறிப்பாக வட மாநி லங்களில், பில்லி சூனிய மூடநம்பிக்கை காரணமாக ஏதுமறியா மக்கள் அடித்துக் கொல்லப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிகழ்வு அந்தத் தொடர் வரிசையில் மேலும் ஒரு சோகமான நிகழ்வாகும்.
ஒருவர் கூட உயர்ஜாதியினர் இல்லை
இது போன்ற கொலைநிகழ்வுகளில் கொல்லப்படுபவர்கள் அனைவருமே தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்களாக உள்ளனர். அவர்களைக் கொலை செய்தால், கேட்பதற்கு யாருமே இல்லை என்ற துணிச்சல் சமூகத்தில் நிலவுவதால், இக்கொலைகள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. கடந்த 100 ஆண்டுகாலத்தில், பில்லி, சூனியம் மற்றும் மந்திரவாதி என்ற சந்தேகத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கூட உயர்ஜாதியினர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.