* உரத்தநாடு என்றாலே பெரியார் நாடுதான்! *பெரியார் உலகத்திற்கு தெற்கு ஒன்றியத்தில் மட்டும் தான் ரூ.17 லட்சம் வழங்கியிருக்கிறார்கள்!
இன்னும் வடக்கு இருக்கிறது; மீண்டும் வருவேன், நிதியை பெறுவேன்
தஞ்சை. செப். 6, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா! திருச்சி சிறுகனூரில் 100 கோடி செலவில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு நிதியளிப்புப் பெருவிழா எனும் கருத்தில், உரத்தநாடு ஒன்றியம் தொண்டராம்பட்டு ஊராட்சி யில் மாநாடு போல் நடைபெற்ற விழாவில் கழகத்தலைவர் ஆசிரியர் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.
உரத்தநாடு ஒன்றியம் தொண்டராம்பட்டு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் தொண்டராம்பட்டு பாரதி திடலில், 5.9.2025 அன்று மாலை நடந்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில், பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. மாநாடு தொடங்குவதற்கு முன், கழகப் பேச்சாளர்கள் இரா. பெரியார் செல்வன், இராம.அன்பழகன், முனைவர் அதிரடி க.அன்பழகன் ஆகியோர் மாநாட்டின் தேவையை விளக்கிப் பேசினர். முனைவர் அதிரடி அன்பழகன் பேசிக்கொண்டிருக்கும் போது, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பிரச்சாரப்படையுடன் வருகை தந்தார். மிகுந்த எழுச்சியுடன் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. வந்தவுடன் மாநாட்டு ஏற்பாட்டுக்குழு தோழர்கள் கழகத் தலைவரை, சுயமரியாதைச் சுடரொளிகள் பதாகை இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கே தி.மு.க.சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் சுயமரியாதைச் சுடரொளிகள் பதாகையை கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மேனாள் ஒன்றிய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உள்ளிட்டோர் முன்னிலையில் திறந்துவைத்தார்.
முறைப்படி மாநாடு தொடங்கியது. இந்நிகழ்வுக்கு, உரத்தநாடு ஒன்றியத் தலைவர் ஜெகநாதன் தலைமையேற்று சிறப்பித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாநாட்டில் அறிமுகம் செய்யவிருக்கும் புத்தகங்கள் தவிர ஏராளமான புத்தகங்கள் விற்பனைக்கு இருக்கிறது. வாங்கிப் பயன்பெறுங்கள் என்று முக்கியமான புத்தகங்கள் சிலவற்றை அறிமுகம் செய்வித்தார் மாநில ஒருங்க்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன். தஞ்சை மாவட்டத் தலைவர், மூத்த வழக்குரைஞர் அமர்சிங், தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, தி.மு.க.மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, தி.மு.க.தெற்கு ஒன்றியச் செயலாளர் முருகையன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் திராவிட கதிரவன், தி.மு.க. கிழக்கு ஒன்றியச் செயலாளர் கார்த்திகேயன், தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் இரமேஷ்குமார், மேனாள் ஒன்றியக்குழு தலைவர் பார்வதி சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். பெரியார் வீரவிளையாட்டுக் கழகச் செயலாளர் கபடி இராமகிருட்டிணன் நிகழ்ச்சிக்கு இணைப்புரை வழங்கி சிறப்பித்தார்.
திரைப்பட நடிகர் துரை. சுதாகர் தனக்கும் தொண்டராம் பட்டுக்கும், தனக்கும் திராவிடர் கழகத்துக்குமான தொடர்பை விளக்கினார். அத்துடன் பெரியார் உலகம் காணொலியை தொடங்கி வைத்தார். காணொலி முடிந்தவுடன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அதுகுறித்த கூடுதல் தகவல்களை மக்கள் முன் எடுத்து வைத்தார். தொடர்ந்து மேடையிலிருந்த அனைத்து கட்சிகளின் முக்கிய பிரமுகர்களுக்கு, கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பயனாடையணிவித்து மரியாதை செய்தார்.
அதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசின் மேனாள் அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவர்கள், உலகத் தலைவர் பெரியார் தொகுதி 11, சுயமரியாதை சுவாசிக்க – வாசிக்க, திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள், பெரியாரின் புத்தகப்புரட்சி ஆகிய நான்கு புத்தகங்களை வெளியிட்டார். இந்த நான்கு புத்தகங்களின் விலை 560 ரூபாய் என்றும், நிகழ்ச்சியில் சிறப்புத்தள்ளுபடி ரூபாய் 60 போக, ரூ.500/- க்கு பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. மேடையில் இருப்பவர்களும், பொதுமக்களும், அரசியல் கட்சி தோழர்களும் வரிசையில் வந்து உரிய தொகை கொடுத்து பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து நிகழ்ச்சியின் மய்யப்பொருளான, பெரியார் உலகத்திற்கு நன்கொடை கொடுக்கும் நிகழ்வு தொடங்கியது. உரத்தநாடு இரா.குணசேகரன் நன்கொடை திரட்டல் குழுவின் தோழர்கள் அனைவரையும் மேடைக்கு அழைத்து, கழகத்தலைவரிடம் ரூ.17 லட்சத்திற்கான, பெரிதாக்கப்பட்ட மாதிரி காசோலையை பலத்த கைதட்டல்களுக்கிடையே வழங்கினர். அத்துடன் ஒரு குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர்.
மேனாள் ஒன்றிய அமைச்சர் தனது உரையில், ‘‘ஆசிரியர் தனக்கு இந்த புத்தகங்களை முன்கூட்டியே அனுப்பியிருந்ததாகவும், படித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுவிட்டு, இன்றைய ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு குறித்து வந்துள்ள ஒன்றிய அரசின் அறிவிப்பைச் சுட்டிக்காட்டினார். கல்வியில் பஞ்சாங்கம் படிக்க வேண்டும், போர் தந்திரங்களைப் பற்றி படிக்கவேண்டும். அதே சமயம் ஏன் சண்டை செய்தார்கள்? என்பதைப் பேசக்கூடாது’’ என்று குறிப்பிட்டு சிந்திக்க வைத்தார். இதுதொடர்பான ஆசிரியர் அறிக்கை வந்துள்ள ‘விடுதலை’ நாளிதழையும் கையில் வைத்துக்கொண்டு பேசினார். ‘‘தந்தை பெரியாரின் தொலைநோக்குப் பார்வை எத்தகையது என்பதை, 95 ஆண்டுகளுக்கு முன்னால் இதைக்கண்டித்து பெரியார் தீர்மானம் போட்டிருக்கிறார். அதனால்தான் பெரியார் உலகத்தலைவர். அதை நினைவு கூரும் வண்ணம்தான் நமது திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் படத்தை திறந்து வைத்து உரையாற்றியிருக்கிறார். இந்த நான்கு புத்தகங்களையும் படித்துவிட்டால் சங்கிகளின் எந்த கேள்விகளுக்கும் தெளிவாக பதில் கூறிவிடலாம்’’ என்றார். அதே போல, ஒவ்வொரு புத்தகத்தின் சிறப்புகளையெல்லாம் பட்டியலிட்டுப் பேசினார். பெரியார் உலகம் வெல்லவும், அதை செயல்படுத்துகின்ற ஆசிரியர் பெருமகன் நூற்றாண்டைக் கடந்து வாழவும் வாழ்த்துகிறேன் என்று உரையாற்றினார். அதைத் தொடர்ந்து மாநாட்டுக்காக உழைத்தவர்களுக்கு கழகத் தலைவர் மரியாதை செய்தார். மாநாட்டுக்கு வருகை தந்தவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்துகொடுத்த பெருந்தகையாளர் சித்தரவேல் அவர்களுக்கு ஆசிரியர் சிறப்பு செய்தார். பெரியார் பெருந்தொண்டர் உத்தராபதி அவர்களின் மகன் வீரமணி, ஆசிரியருக்கு, சமாதானத்துக்கு அடையாளமான புறாக்கள் இரண்டை பரிசாக வழங்கினார்.
தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ.கார்த்திகேயன், தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் செல்ல.ரமேஷ், தி.மு.க. மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் கிருஷ்ணசாமி ஆகியோர் தலா 10 விடுதலை சந்தாக்களை, கழகத் தலைவரிடம் வழங்கினர்.
இறுதியில் கழகத் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். அவர் தனது உரையில், ‘‘உரத்தநாடு என்றாலே பெரியார் நாடுதான். தெற்கு ஒன்றியத்தில் மட்டும் 17 லட்சம் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் வடக்கு இருக்கிறது. வடக்கு இடக்கு செய்யாது. மீண்டும் வருவேன். நிதியை பெறுவேன்’’ என்று உரையாற்றினார். (உரை தனியாக வருகிறது) இறுதியாக உரத்தநாடு தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் சுடர்வேந்தன் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
நிகழ்ச்சிக்கு, மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்டச் செயலாளர் அருணகிரி, தி.மு.க., காங்கிரஸ் கட்சி, ம.தி.மு.க., சி.பி.அய்., சி.பி.அய்(எம்), வி.சி.க. உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய பொறுப் பாளர்கள் மற்றும் திராவிடர் கழகத்தின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள், தொண்டராம்பட்டைச் சுற்றியுள்ள ஊராட்சிகளின் மக்கள், ஊடகத்துறையினர் என்று ஏராளமானோர் வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
தொண்டராம்பட்டில் நிதியளிப்பு விழாவில் தமிழர் தலைவர் உரை கேட்க திரண்டிருந்தோர் (5.9.2025)
தி.மு.க. மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் கிருஷ்ணசாமி, தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் செல்ல.ரமேஷ், தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ.கார்த்திகேயன் ஆகியோர் தலா 10 விடுதலை சந்தாக்களை, கழகத் தலைவரிடம் வழங்கினர். ஜாதி ஒழிப்பு வீரர்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்குத் தமிழர் தலைவர் சால்வை அணிவித்தார். மேனாள் ஒன்றிய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உலகத் தலைவர் பெரியார் தொகுதி 11, சுயமரியாதை சுவாசிக்க – வாசிக்க, திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள், பெரியாரின் புத்தகப்புரட்சி ஆகிய நான்கு புத்தகங்களை வெளியிட்டார்.